
Cameron and Jenny Mendes

எழுத்தாளர்களை சந்தியுங்கள்...
கேம்ரன் மற்றும் ஜெனியாகிய நாங்கள் இந்தியாவுக்கான 'அனுதினமும் ஒரு அதிசயம்' மின்னஞ்சலின் ஆசிரியர்களாக இருக்கிறோம். 2002ஆம் ஆண்டு கேம்ரனாகிய நான் ஸ்தாபித்த யெஷுவா ஊழியங்கள் மூலமாகவும் மற்றும் நான் எழுதிய "Yeshu Tera Naam Sabse Uncha Hai", "Hum Gaye Hosanna", "Gao Hallelujah", "Le Chal Muhje" மற்றும் "Tumsa" போன்ற பிரபலமான ஹிந்தி ஆராதனை பாடல்கள் மூலமாகவும் மக்கள் எங்களை அறிந்திருக்கலாம். கேம்ரனாகிய நான் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு ஆராதனைக் குழு தலைவராகவும் பாடலாசிரியராகவும் இருந்து வருகிறேன். அதே நேரத்தில், முன்பு வழக்கறிஞராக இருந்துகொண்டே, ஊழியம் செய்து கொண்டிருந்த ஜெனியை நான் திருமணம் செய்துகொண்ட பிறகு, ஜெனியும் யெஷுவா ஊழியத்தில் இணைந்தார். நாங்கள் இருவரும் இணைந்து யெஷுவா ஊழியத்தின் மூலம் ஆண்டவருக்கு ஊழியம் செய்கிறோம்.
எங்கள் பாடல் குழுவினருடன் இணைந்து, நாங்கள் உலகம் முழுவதும் பயணம் செய்து, இசை மூலம் நற்செய்தியைப் பகிர்ந்துவருகிறோம். நாங்கள் வெளிநாட்டுக்குப் போகும் முன்பு இந்தியாவில்தான் வசித்துவந்தோம், இந்தியாவில் வசிக்கையில், கேம்ரனாகிய நான் ஆராதனை குழுவின் தலைவராக இருந்து ஊழியம் செய்து வந்தேன். ஆனால் நாங்கள் இப்போது - ஜெனியின் தாயக தேசத்தில் வாழ்ந்து வருகிறோம். நாங்கள் அயல்நாட்டில் வாழ்ந்து வந்தாலும், எங்கள் மனம் இன்னும் இந்தியா மீதே பற்றுடன் உள்ளது.
2020 ஆம் ஆண்டில், 10 மாதமே நிரம்பிய எங்கள் மகன் ஜாக், மூளைத் தொற்று நோயால் கடுமையாக வியாதிப்பட்டபோது,எங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய சோதனையை எதிர்கொண்டோம். இன்றுவரை, அவன் ஊனமுற்றவனாகவே இருக்கிறான்; மேலும் முழுமையாக குணமடையும்படி ஒரு அதிசயத்திற்காக நாங்கள் தொடர்ந்து ஜெபிக்கிறோம். இந்த வலிமிகுந்த பயணத்தின் மூலம், ஒவ்வொரு சூழ்நிலையிலும் - நற்செய்தியை சுமந்துகொண்டு உலகம் முழுவதும் பயணம் செய்தாலும், எங்கள் மகனின் மருத்துவமனை படுக்கையில் அழுதாலும், மேடையில் பாடி ஆண்டவரைத் துதித்தாலும், அல்லது தூக்கமில்லாத இரவுகளைக் கடந்து சென்றாலும், நாங்கள் இயேசு கிறிஸ்துவை துதிக்க கற்றுக்கொண்டோம். நாம் மகிழ்ச்சியாய் இருந்தாலும் சரி, துக்கத்தில் இருந்தாலும் சரி, நம்மிடம் நெருங்கி வரும் ஆண்டவரால் மட்டுமே வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிறது என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம். மற்றவர்களின் உதவி இல்லாமல், எங்களால் தனியாக இந்த வழியில் நடந்திருக்க முடியாது, இப்போது, உன் விசுவாசப் பயணத்தில் உன்னுடன் சேர்ந்து, உனக்கு தினசரி ஊக்கத்தை அனுப்புவதன் மூலம், நீ இயேசு கிறிஸ்துவின் மீது உன் விசுவாசத்தை வைக்க உனக்கு உதவ விரும்புகிறோம்!
இந்தியாவில் ஒரு போதகரின் மகனாக வளர்ந்த நான் (கேம்ரன்), ஊழியத்தின் நிமித்தம் என் பெற்றோர் சரீரப்பிரகாரமாகவும் மனதளவிலும் கடுமையான துன்புறுத்தலுக்கு உள்ளானபோதிலும், அவர்கள் ஆண்டவருக்காக வைராக்கியமாய் நின்றதையும், அவர்களது அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் பார்த்திருக்கிறேன். துன்புறுத்தலால் கட்டுப்படுத்த முடியாதபடி உலகிற்கு நற்செய்தியைக் கொண்டுவரும் ஒரு ஊழியத்தை நிலைநாட்டுவதே எனது நோக்கமாக இருந்தது - அதுதான் இப்போது நிறைவேறிக்கொண்டிருக்கிறது! யெஷுவா ஊழியத்தின் பாடல்கள் சமூக ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் மூலம் லட்சக்கணக்கானவர்களுக்குச் சென்றடைந்துள்ளன. இணையதளம் மூலம் சுவிசேஷத்தைப் பரப்பும் jesus.net ஊழியத்துடன் இது சரியாக ஒத்துப்போகிறது. ஒவ்வொரு நாளும் இந்தியாவிற்கு அதிசயத்தை கொண்டு வரும் பணியில் நாங்கள் பங்குதாரர்களாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்!