ஆண்டவருடன் அதிவேகமாகத் தொடர்புகொள்வதற்கான 7 திறவுகோல்கள்
நீ எப்போதாவது டஜன் கணக்கான அல்லது நூற்றுக்கணக்கான மெகாபைட்களைக் கொண்ட கோப்பை(file) பதிவிறக்கம்(download) செய்ய முயற்சித்ததுண்டா? உன் இணைய இணைப்பின் வேகத்தைப் பொறுத்து, பதிவிறக்கம் செய்வதற்கு ஆகும் சமயம், பல மணிநேரங்களோ, நாட்களோ கூட ஆகலாம் என்று உனக்குத் தெரிவிக்கப்படும்! இருப்பினும், உன்னிடம் சிறந்த இணைப்பு இருந்தால், அதே பதிவிறக்கம் சில நிமிடங்களில் முடிவடையும். வித்தியாசம் மிகப்பெரியது, அப்படித்தானே?
இதேபோல், சில கிறிஸ்தவர்கள் மற்றவர்களை விட ஆண்டவருடன் சிறந்த தொடர்பைக் கொண்டிருப்பதை நீ கவனித்திருக்கிறாயா? ஆனாலும், வேதாகமம் சொல்வது இதுதான்: “அப்பொழுது பேதுரு பேசத்தொடங்கி: தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்." (அப்போஸ்தலர் 10:34-35)
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஆண்டவருக்கு "செல்லக் குழந்தை" அல்லது "பிடித்த குழந்தை" என்று யாரும் இல்லை. எனவே, அவருடன் "அதிவேக" தொடர்பைப் பெற எது நமக்கு உதவுகிறது? அதற்கான 7 நடைமுறைத் திறவுகோல்கள் இங்கே உள்ளன:
- ஆண்டவரைப் பற்றித் தொடர்ந்து சிந்தி... நம் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே நாம் இருக்கிறோம் என்று வேதாகமம் சொல்கிறது! (நீதிமொழிகள் 23:7)
- அவருடைய வார்த்தையில் மூழ்கி... மேலோட்டோமாக வாசிப்பது மட்டுமல்லாமல், பல வசனங்களை தியானிப்பதன் மூலம், உன் இருதயத்தைத் தொடும் ஒரு வசனத்தில் நிலை கொண்டிரு.
- உன்னுடன் பேசும்படி பரிசுத்த ஆவியானவருக்கு நீ இடமளிப்பதன் மூலம், உன் வாழ்க்கையில் அவர் செயல்படட்டும்! பல கிறிஸ்தவர்களுக்கு, ஆண்டவரின் குரலைக் கேட்பது அவ்வளவு எளிதானதல்ல, ஆனால் அவருடைய குரலைக் கேட்பவர்களோ, அவருடன் சிறந்த தொடர்பைக் கொண்டிருப்பார்கள்!
- கெத்செமனே தோட்டத்திற்குத் தவறாமல் ஜெபிக்கச் சென்ற இயேசுவைப்போல, நீயும் முறையான பழக்கவழக்கங்கள், ஆவிக்குரிய ஒழுங்குமுறைகள் மற்றும் குறிப்பிட்ட இடத்திற்குச் செல்லுதல் ஆகியவற்றைக் கடைபிடி.
- பாடல் வாயிலாக ஆண்டவரைத் துதித்து ஆராதனை செய்! ஆராதனை நம்மை ஆண்டவரோடு இணைக்கிறது! உதாரணமாக, நாம் பாடி அவரைத் துதிக்கும்போது, நாம் மகிழ்ச்சியுடன் பிரகாசிக்கிறோம், நம் முகங்கள் வெட்கப்படுவதில்லை. (சங்கீதம் 34:5)
- நன்றியறிதலோடு இரு. நன்றியுணர்வுடன் இருக்கும்போது, அது நம்மை ஆண்டவரின் இதயத்திற்கு மிகவும் அருகில் அழைத்துச் செல்கிறது. "ஆண்டவரே, நீர் செய்தவைகளுக்காக நன்றி..." என்று சொல்லி உன் நாட்களை ஆரம்பித்து, பிறகு நீ நன்றி சொல்ல விரும்பும் 5 விஷயங்களைக் குறிப்பிடு, அப்படியே நன்றி சொல்லி உன் நாட்களை நிறைவுசெய்.
- மகத்தான விசுவாசம் கொண்டிருப்பவர்களைப் பின்பற்று! "நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்" என்று பவுலும் தனது நிருபத்தில் கூறியிருக்கிறாரே. (1 கொரிந்தியர் 11:1) முன்மாதிரியாய் இருப்பவர்களைக் கண்டு, அவர்களைப் பின்பற்று; அப்படிச் செய்யும்போது, சாதாரணமாகவே, ஆண்டவர் உன் வாழ்க்கையில் அதிகமாகச் செயல்படுவதை நீ காண்பாய்!
இந்தப் பட்டியலில் நான் எல்லாவற்றையும் குறிப்பிடவில்லை; ஆனால் இவற்றைச் செய்வது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும்! அன்பரே, ஆண்டவருடன் "அதிவேகமாக" தொடர்புகொள்வது எப்படி என்பது பற்றி உனக்கு வேறு ஏதாவது யோசனைகள் உண்டா? அப்படி இருந்தால், தயவு செய்து உன் கருத்தை எனக்கு எழுதி தெரிவிக்கவும்!
