வெளியீட்டு தேதி 7 ஆகஸ்ட் 2024

ஆண்டவருடைய பலத்தைப் பற்றிக்கொள்! 💪

வெளியீட்டு தேதி 7 ஆகஸ்ட் 2024

இன்று, இவ்வாரத்தின் மைய வசனமான யோசுவா 1:9-ஐ ஆராய்ந்து பார்ப்பதன் மூலம் "பலங்கொண்டு திடமனதாயிருத்தல்" என்ற நமது கருப்பொருளைத் தொடர்ந்து தியானிக்கப்போகிறோம்.

“நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்." (யோசுவா 1:9)

"பலங்கொண்டிரு" என்பது "ஷாசாக்" என்ற எபிரெய வார்த்தையிலிருந்து வந்தது, இதன் அர்த்தம் உறுதியாக அல்லது வலுவாக இருத்தல், பலப்படுத்துதல், பற்றிக்கொள்ளுதல், நடைமுறைப்படுத்துதல், மற்றும் தைரியம்கொண்டிருத்தல் என்பதாகும். இந்த வார்த்தையில், ஆண்டவர் நமக்கு அளிக்கும் பலத்தை உறுதியாகப் பற்றிக்கொள்வதற்கான யோசனை அடங்கியுள்ளது.

“பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதி தேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்துமுடியாதது. கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.." (ஏசாயா 40:28, 31)

ஆண்டவரின் பெலன் மனிதனின் பெலத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது: அது குறைந்துபோவதில்லை, அதை மட்டுப்படுத்தமுடியாது, மேலும் அது எல்லாவற்றையும் வாய்க்கப்பண்ணுகிறது. இந்த பெலத்தைத்தான் அவர் உனக்குக் கொடுக்க விரும்புகிறார்!

நீ அவருடைய பெலத்தைப் பெற்றவுடன், கழுகுகளைப் போன்ற செட்டைகளை அடித்து உயரே எழும்பு: அதைச் செய், விடாமுயற்சியுடன் வேலை செய், நீ என்ன செய்ய அழைக்கப்பட்டிருக்கிறாயோ அதையே செய். கிறிஸ்துவில் உனக்கு எல்லாத் திறமையும் இருக்கிறது.

அன்பரே, என்னுடன் சேர்ந்து ஜெபிக்க உன்னை அழைக்கிறேன்… “ஆண்டவரே, நான் இப்போது விசுவாசத்தால் பெற்ற உமது பெலத்திற்கு நன்றி. உம்மில், நான் வலிமையான நபர், சக்தி வாய்ந்த நபர், அதிகாரம் பெற்ற நபர்! ஆம், உம்முடைய உதவியோடு நான் ஓடுவேன், சோர்வடையமாட்டேன். நீர் என்னுடன் நடப்பதால் என் பலம் புதுப்பிக்கப்பட்டுவிட்டது. நான் வழியில் சோர்ந்துபோகமாட்டேன். என் ஜீவனை உமது கரங்களில் வைத்திருக்கும் ஆண்டவரே, உம்மால் நான் புதுபெலனடைவேன், நான் வழியில் களைப்படைய மாட்டேன்! இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”

Eric Célérier
எழுத்தாளர்