வெளியீட்டு தேதி 24 ஜூன் 2024

ஆண்டவர் அசாதாரணமான காரியங்களைச் செய்ய சாதாரண மக்களைப் பயன்படுத்துகிறார்!

வெளியீட்டு தேதி 24 ஜூன் 2024

ஆண்டவருடனான எனது பயணத்தின் தொடக்கத்தில், ஒவ்வொரு நாள் காலையிலும் அநேகர் எனது ஊக்குவிக்கும் செய்திகளை வாசிப்பார்கள் என்று எண்ணுவது, என் கற்பனைக்கு எட்டாத ஒரு விஷயமாகத்தான் இருந்தது! நான் இயேசுவின் உண்மையான சீஷனாக இருப்பதைக் காட்டிலும், எதையும் நன்றாக அறிந்திராத ஒரு ஒழுங்குபடுத்தப்படாத புதிய விசுவாசியாக இருப்பதாகவே நான் ஆரம்பத்தில் உணர்ந்தேன்.

நான் இளைஞனாகவும், துடிப்பானவனாகவும், அகந்தையுள்ளவனாகவும் இருந்தேன், உண்மையில் “பூரண கிறிஸ்தவர்கள்” என்று நான் கொண்டிருந்த பிம்பம் எனக்கு வெகு தொலைவில் இருந்தது. எனது முதல் புத்தகத்தில் நான் விவரிக்கையில், நான் திருச்சபைக்குச் சென்றாலும் கூட, என் வாழ்க்கை குழப்பத்தில் இருந்ததாக நான் உணர்ந்தேன். என் வாழ்க்கையைப் பார்க்கும்போது,​“இவனைக் கொண்டு நிறைய வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது!” என்று இயேசு தனக்குத்தானே சொல்லியிருக்க வேண்டும்.

எனக்கு 18 வயதாக இருந்தபோது, ஒரு ஜெபக் கூட்டத்தில் ஆண்டவர் என்னுடன் தெளிவாகப் பேசி, அவருக்கு ஊழியம் செய்ய என்னை அழைத்தார். அந்தக் கூட்டத்தை விட்டு வெளியேறியபோது, நீண்ட காலமாக கிறிஸ்தவராக இருந்த ஒருவரை நான் கண்டேன். நான் அவரிடம், மிகுந்த ஆர்வத்துடன், “இன்றிரவு, ஆண்டவர் என்னை அவருக்கு ஊழியம் செய்ய அழைத்தார்! நான் ஆண்டவருக்கு ஊழியம் செய்யப்போகிறேன்! அவர் அநேகரைத் தொடும்படி என் வாழ்க்கையைப் பயன்படுத்தப்போகிறார்!" என்றேன். அந்த மனிதன் எனக்குப் பதிலளித்து, “நீயா? நிச்சயமாக அதற்கு வாய்ப்பே இல்லை" என்றார். அது ஒரு பெரிய இடி என்மேல் விழுந்ததுபோல் இருந்தது.

உனக்கு எப்போதாவது இது போன்ற சம்பவம் நடந்துள்ளதா? உனக்கு நெருக்கமான சில நபர்களால் நீ எப்போதாவது சோர்வடைந்திருக்கிறாயா? அல்லது "நீயா? நிச்சயமாக அதற்கு வாய்ப்பு இல்லை..." என்று சொல்லி ஆண்டவர் உன் இருதயத்தில் வைத்த அழைப்பை யாராவது அழிக்க முயற்சித்திருக்கலாம்.

நம்மில் பெரும்பாலானோர் ஆண்டவரைச் சேவிப்பதற்குத் தகுதியற்றவர்களாக உணர்கிறோம்... மேலும் சிலர் தாங்கள் தவறுதலாகவோ அல்லது ஏதேச்சையாகவோ ஊழியம் செய்ய வந்துவிட்டதாக தங்களுக்குத் தாங்களே சொல்லிக்கொள்வார்கள்.

அன்பரே, இன்று நீ எப்படி உணர்கிறாய்? சாதாரணமான நபராக உணர்கிறாயா? திறமையற்ற நபராக உணர்கிறாயா? தகுதியற்ற நபராக உணர்கிறாயா? நான் உனக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்... நீ என்ன செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி, ஆண்டவர் உன்னை நிபந்தனையற்ற அன்புடன் நேசிக்கிறார். அவர் உன்னை நேசிக்கிறார்.  இதையும் தெரிந்துகொள்... அசாதாரண காரியங்களை செய்ய ஆண்டவர் சாதாரண மக்களைப் பயன்படுத்துகிறார்!

தேவ ராஜ்யத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று கனம்பண்ணுதல்... மற்றவர்களை அவர்கள் எவ்வாறானவர்கள் என்று காண்பிப்பதன் மூலமும் எப்போதும் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதன் முலமும் நாம் ஆண்டவருக்கு நன்றி சொல்கிறோம்.

இது என்னை யோசிக்க வைக்கிறது... நம் ஆண்டவர் மீது நாம் வைக்கும் நம்பிக்கையை விட, அவர் நம் மேல் அதிக நம்பிக்கை வைக்கிறார்!

அன்பரே... நீ அசாதாரணமானவன்/அசாதாரணமானவள், தனித்துவமானவன்/தனித்துவமானவள் மற்றும் விசேஷித்தவன்/விசேஷித்தவள். இன்று இந்த உண்மையை நம்பும்படி உன்னை அழைக்கிறேன்!  :-)

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “Mr. செலெரியரே, என் பெயர் ஃபெலிடா. 'அனுதினமும் ஒரு அதிசயம்' என்ற இந்த ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்காக நன்றி சொல்ல விரும்பினேன். வெவ்வேறு தலைப்புகளைப் படிப்பதன் மூலம் நான் நிறைய கற்றுக்கொள்கிறேன். 'நீ ஒரு அதிசயம்’ என்று மிக அழகாக சொல்லி முடிப்பது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நீங்கள் மக்கள் மீது அக்கறையுள்ள இருதயத்தைக் கொண்டிருப்பதால் ஆண்டவர் உங்களை பரிபூரணமாக ஆசீர்வதிப்பாராக.”  (ஃபெலிடா)

Eric Célérier
எழுத்தாளர்