அன்பரே, ஆண்டவர் சிறிய விஷயங்களில் கூட அக்கறை காட்டுபவர் என்பது உனக்குத் தெரியுமா?
நான் வேண்டுமென்றோ அல்லது காரியமாகவோ நினைக்கவில்லை என்றாலும்... சில சமயங்களில், "ஆண்டவர் இதை ஒரு விஷயமாகக் கூட நினைக்கமாட்டார். நானும் அதற்காக அவரைத் தொந்தரவு செய்யப்போவதில்லை. மிகவும் சிறிய ஒரு விஷயத்திற்காக நான் ஏன் ஜெபிக்க வேண்டும்?" என்று நினைத்த நாட்கள் உண்டு. இப்படி நினைப்பதினால், ஒருவேளை கர்த்தர் எனக்கு அருள விரும்புகிற ஆசீர்வாதத்தையும் அதிசயத்தையும் நான் தவறவிட நேரிடலாம்.
"ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது" என்று ஆண்டவருடைய வார்த்தை அறிவிக்கிறது. (வேதாகமத்தில் மத்தேயு 10:29ஐ வாசித்துப் பார்க்கவும்)
ஆண்டவர் மிகவும் பெரியவராய் இருப்பதால், அவர் நம் வாழ்க்கையின் சிறிய காரியங்களில் அவ்வளவாய் ஆர்வம் காட்டுவதில்லை என்று நினைத்துக்கொள்கிறோம். ஆனால் அது அப்படியல்ல... ஆண்டவர் நம்மை நேசிக்கிறார், அவருடைய நன்மையை நமக்குக் காட்ட விரும்புகிறார். நமது வாழ்வின் ஒவ்வொரு அம்சமும் அவருடைய கண்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாய் இருக்கிறது, மற்றும் அவர் நம் வாழ்வில் இடைபட்டு ஒவ்வொரு நாளும் நம்முடன் சேர்ந்து நடக்க விரும்புகிறார்.
ஆகவே, அன்பரே, இன்று உன் அனுதின வாழ்க்கையைக் குறித்தும், நீ எப்படிப்பட்ட சூழ்நிலையைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறாய் மற்றும் நீ எப்படி உணர்கிறாய் என்பதைக் குறித்தும் தேவன் அக்கறையுள்ளவராய் இருக்கிறார் என்பதை நீ விசுவாசிக்க வேண்டும் என்று நான் உன்னை உற்சாகப்படுத்துகிறேன்.
கூடுமானால், என்னுடன் சேர்ந்து ஜெபிக்கும்படி உன்னை அழைக்கிறேன்... “கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்க்கை உட்பட எல்லா இடங்களிலும் நீர் இருக்கிறீர் என்றும், உமது நன்மையை எனக்குக் காண்பிக்க விரும்புகிறீர் என்றும் நான் விசுவாசிக்கிறேன். இந்த நாளில் என் வாழ்க்கையின் பெரிதும் சிறிதுமான ஒவ்வொரு விஷயத்திலும், உம்மை முழுமையாக நம்புவதைத் தெரிந்துகொள்கிறேன்! இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”
