இலக்கு மட்டுமே முக்கியமல்ல; பயணத்தைத் தழுவிக்கொள்ளுங்கள்

நான் என் வாழ்நாள் முழுவதும் ஒரு கிறிஸ்தவளாக வாழ்ந்து வருகிறேன், எனது குழந்தைப் பருவத்தில் எனக்கு இருந்த மிகப் பெரிய பயங்களில் ஒன்று என் வாழ்க்கைக்கான ஆண்டவருடைய சித்தத்தை தவறவிட்டுவிடுவேனோ என்பதுதான். ஒவ்வொருவருக்கும் ஆண்டவரிடத்தில் ஒரு விசேஷித்த திட்டம் மற்றும் அழைப்பு உண்டு என்பதை கேட்டு நான் வளர்ந்தேன். எது எப்படியோ, எனக்கான அவருடைய திட்டத்தைக் கண்டுபிடித்து, அதில் நான் நடப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்பதில் நான் மிகுந்த அக்கறை உள்ளவளாய் இருந்தேன்.
“ஆண்டவரே, உமது சித்தத்தை அறிவதை ஏன் இவ்வளவு கடினமாக்குகிறீர்? நான் உமக்கு சித்தமில்லாத வழியில் செல்லாதபடிக்கு நீர் ஏன் அதை என்னிடம் தெளிவாகச் சொல்லக்கூடாது?" என்று நான் அடிக்கடி விரக்தியில் ஜெபித்தேன்.
காலம் கடந்தது, அனுபவத்தின் மூலம், நான் ஒரு விலையேறப்பெற்ற சத்தியத்தைக் கற்றுக்கொண்டேன், அது என்னவென்றால்: இலக்கு மட்டுமே முக்கியமல்ல - பயணத்தில் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடங்கள் நிறைய உள்ளன. எனவே அதைத் தழுவிக்கொள்ளுங்கள்.
உங்கள் வாழ்க்கையின் அழைப்பிற்கான குறிப்பிட்ட அறிவுறைகளையும், முழுமையான விரிவான திட்டத்தையும் ஆண்டவர் உங்களுக்கு வழங்க விரும்பினால், அவர் நிச்சயமாக அதை உங்களுக்கு மிகத் தெளிவாக விளக்கிக் காட்டுவார்.
ஆண்டவர் இஸ்ரவேலர்களை விடுவிப்பதாக பற்றியெரியும் முட்செடியிலிருந்து மோசேயிடம் கூறினார் (யாத்திராகமம் 3), மரியாள் ஒரு தேவதூதனின் சந்திப்பைப் பெற்றாள், அவள் இயேசுவின் தாயாக மாறுவாள் என்று அவன் அவளுக்கு அறிவித்தான் (லூக்கா 1:26-38) மற்றும் யோனா நினிவேக்கு செல்ல அழைக்கப்பட்டார், அவர் மறுப்பு தெரிவித்ததால், அங்கு செல்வதற்காக ஒரு மீனுக்குள் கொண்டு செல்லப்பட்டார் (யோனா 1). 😳
இருப்பினும், ஆண்டவர் தமது திட்டங்களை அவ்வப்போது படிப்படியாக வெளிப்படுத்துவார் என்ற விதிக்கு இந்த எடுத்துக்காட்டுகள் விதிவிலக்கானவைகள். அவர் நம்மை ஒரு பயணத்தில் அழைத்துச் செல்கிறார், அது பெரும்பாலும் பல மாற்றுப்பாதைகள், படிப்பினைகள், வளர்ச்சி மற்றும் ஆயத்தங்கள் ஆகியவற்றால் நிறைந்ததாக இருக்கும்.
“பார்வோன் ஜனங்களைப் போகவிட்டபின்: ஜனங்கள் யுத்தத்தைக் கண்டால் மனமடிந்து, எகிப்துக்குத் திரும்புவார்கள் என்று சொல்லி; பெலிஸ்தரின் தேசவழியாய்ப் போவது சமீபமானாலும், தேவன் அவர்களை அந்த வழியாய் நடத்தாமல், சிவந்த சமுத்திரத்தின் வனாந்தர வழியாய் ஜனங்களைச் சுற்றிப் போகப்பண்ணினார். இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து அணியணியாய்ப் புறப்பட்டுப்போனார்கள்." (யாத்திராகமம் 13:17-18)
இன்னும் ஒரு சிறந்த உதாரணம் யோசேப்பின் சம்பவம். ஒரு அடிமை என்ற நிலைமையிலிருந்து ஆளுகை செய்பவன் என்ற நிலைமைக்கு ஆயத்தப்படுத்துவதற்கு அவனது வாழ்க்கை பயணத்தை ஆண்டவர் பயன்படுத்தினார்:
"கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுமளவும் அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது." (சங்கீதம் 105:19)
அன்பரே, நாம் சேர்ந்து ஜெபிப்போம்: “பரலோகப் பிதாவே, எல்லாவற்றிற்கும் மேலாக உமது சித்தத்தைப் பின்பற்ற விரும்புகிறேன். இன்று, உம்முடன் இணைந்து பயணம் செய்வதற்கான உமது அழைப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன், ஒவ்வொரு அடியிலும் உமது திட்டத்தை நீர் வெளிப்படுத்துவீர் என்று நம்புகிறேன். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”

