உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக – ரூத் 2:12

இனிய சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்!! 💐 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஒரு உன்னதமான பெண்ணாக திகழ்பவளிடமிருந்து நாம் தொடர்ந்து பாடம் கற்றுக்கொள்ளப்போகிறோம்: அவள்தான் ரூத்! எல்லாவற்றையும் விட்டுவிட்டு தனது மாமியாரான நகோமியைப் பின்தொடர்ந்து இஸ்ரவேலுக்குச் சென்ற ஒரு வெளிநாட்டுப் பெண்ணாக ரூத் இருந்தாள். அவளது குடும்பத்தினரிடத்துக்குத் திரும்பிச் செல்லும்படி நகோமி அவளை வற்புறுத்துகிறாள்; ஏனெனில் அவளுக்கு அங்கு சிறந்த வாய்ப்புகள் அதிகம் உள்ளன; ஆனால் ரூத்தோ திரும்பிச் செல்ல மறுக்கிறாள்: “நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக்குறித்து, என்னோடே பேசவேண்டாம்; நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்." (ரூத் 1:16) ரூத் செய்த செயல்கள் மிகுந்த சுய-தியாகம் நிறைந்தவை. அவள் ஒரு விதவை, அது அவளை பாதிக்கப்பட்டவளாக ஆக்குகிறது, மேலும் அவள் ஒரு மோவாபிய பெண்ணாக இருந்தும், தன் குடும்பத்தின் மீது வைத்த அன்பு மற்றும் விசுவாசத்தினால், மோவாபியரை எதிரியாகக் கருதும் நாட்டிற்குச் செல்ல முன்வருகிறாள். ரூத் என் மனைவி ஜெனியை கொஞ்சம் நினைவுபடுத்துகிறாள். ஜெனி இந்தியாவுக்கு வந்து, என்னைத் திருமணம் செய்துகொண்டு, என்னுடன் இணைந்து யெஷுவா ஊழியத்தை நடத்த ஒப்புக்கொண்டபோது, அவள் மிகப்பெரிய தியாகங்களைச் செய்தாள். அவள் தனது வசதியான நாடு, நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் ஒரு வழக்கறிஞையாக உயரும் வேலையையும் விட்டுவிட்டு வந்தாள். அவள் சங்கீதம் 45:10-11 வசனங்களிலிருந்து பலத்தைப் பெற்றுக்கொண்டாள்:
"குமாரத்தியே கேள், நீ உன் செவியைச் சாய்த்துச் சிந்தித்துக்கொள்; உன் ஜனத்தையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிடு. அப்பொழுது ராஜா உன் அழகில் பிரியப்படுவார்; அவர் உன் ஆண்டவர், ஆகையால் அவரைப் பணிந்துகொள்." நம் வாழ்க்கையில் உள்ள பெண்களும், அதாவது, நம் மனைவிகள், பாட்டிகள், அம்மாக்கள், மாமியார்கள் மற்றும் சகோதரிகள் தங்கள் குடும்பத்திற்காக எவ்வளவு தியாகம் செய்கிறார்கள் என்பதை பல நேரங்களில் நாம் உணர்ந்து பார்க்கத் தவறுகிறோம். சொந்த குடும்பம் இல்லாத பெண்களும் கூட பொதுவாக ஒரு பாரமான சிலுவையை சுமக்கிறார்கள்.
அன்பரே, சர்வதேச மகளிர் தினமாகிய இன்று, உங்கள் வாழ்க்கையில் பெண்களை வார்த்தைகளாலும் செயல்களாலும் மதிப்புடன் நடத்த உங்களை ஊக்குவிக்கிறேன். உங்கள் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும் பெண்கள் அனைவரையும் பட்டியலிடுங்கள், இன்று அவர்களை கௌரவிக்க மறவாதீர்கள். நான் ரூத் 2:12 ஆம் வசனத்தின் ஜெபத்தை எல்லா பெண்களுக்காகவும் ஏறெடுக்க விரும்புகிறேன்.
"உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக."

