வெளியீட்டு தேதி 19 அக்டோபர் 2024

அன்பரே, இயேசு உனக்குத் துணை நிற்கிறார்!

வெளியீட்டு தேதி 19 அக்டோபர் 2024

இன்று, இந்த தியானத்தை நாம் நிறைவுசெய்கையில், நிக் வுயிசிக் சொன்ன ஒரு கதையை உன்னுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

தனது மரணத்திற்குப் பிறகு, நியாயத்தீர்ப்பு எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பார்த்ததாக அவர் கூறினார். அவர்  நியாயாதிபதியான ஆண்டவருக்கு முன்பு தான் நிற்பதாகக் கண்டார், அங்கே அவர்மேல் குற்றம் சாட்டுபவர்களும் இருந்தார்கள், அவர்கள் அவருடைய எல்லாப் பாவங்களையும் பட்டியலிட்டுக் காட்டி: “ஆண்டவரே, நிக் வுயிசிக் ஒரு பாவி. அவர் இந்தப் பாவங்கள் அனைத்தையும் செய்திருக்கிறார். அவர் வாழ்நாள் முழுவதும் பாவம் செய்திருக்கிறார். அவர் பரலோகத்திற்குச் செல்ல தகுதியற்றவர். அவர் நித்திய ஜீவனுக்குத் தகுதியானவர் அல்ல. அவர் ஒரு பாவி. அவர் நரகத்துக்குச் செல்ல வேண்டியவர்” எனக் கூறினர்.

பின்னர், இயேசு தனக்கு அருகில் நிற்பதைக் கண்டதாக நிக் இவ்வாறு கூறுகிறார். உடனே இயேசு ஆண்டவரை நோக்கிப் பார்த்து: “ஆம், பிதாவே, நிக் ஒரு பாவிதான். ஆனால் 15 வயதில், அவன் தனது வாழ்க்கையை உம்மிடம் ஒப்படைத்தான். அவனுடைய பாவங்களுக்காக நான் மரிக்கும்படி நீர் என்னை பூமிக்கு அனுப்பினீர் என்று அவன் நம்பினான், மேலும் அவன் என்னிடம் பாவ மன்னிப்பு கேட்டான். பிதாவே, உமது சித்தத்தின்படி அவன் பூமியில் வாழ்ந்து வந்தான். மேலும் அவன் என்னைப் பற்றி உலகிற்குச் சொல்லியிருக்கிறான். அவன் மன்னிக்கப்பட்டான். அவன் என்னுடையவன்" என்றார். அப்பொழுது ஆண்டவர் நிக்கிடம் திரும்பி, "எனது வாசஸ்தலத்திற்குள் பிரவேசி!" என்றார்.

அன்பரே, இங்கே நீ இதைக் கவனிக்கலாம், இயேசு நிக் என்பவரின் பக்கமாக நிற்கிறார். ஆம், இயேசு உன் பக்கத்திலும் இருக்கிறார். அன்பரே, ஆண்டவர் உனக்குத் துணையாக இருக்கிறார். மேலும் பரலோகத்திலும், உன் மீது குற்றம் சாட்டுபவர்கள் பேசத் தொடங்கும்போது, அவர் மீண்டும் உன் பக்கத்தில் நின்று உன்னைப் பாதுகாப்பார்.

நீ இயேசுவை விசுவாசிப்பதாலும், உனக்காக அவர் சிலுவையில் செய்த கிரியையை நீ விசுவாசிப்பதாலும், ஒரு நாள், "அன்பரே, என் வாசஸ்தலத்திற்குள் பிரவேசி" என்று பிதாவாகிய ஆண்டவர் உன்னிடம் சொல்வதைக் கேட்பாய். எவ்வளவு சந்தோஷம் அது!

Eric Célérier
எழுத்தாளர்