என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று நான் அறிந்திருக்கிறேன் – யோபு 19:25

இந்த வாரம் முழுவதும் பெண்களுக்குரிய வாரம், ஏனென்றால், நாளை சர்வதேச மகளிர் தினம் 💃🏻 வேதாகமத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட பெண்ணைக் குறித்து நாம் கவனமாக தியானித்து வருகிறோம்: அவள்தான் ரூத். ஆனால் இன்று, ரூத் புத்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு மனிதனைப் பற்றி நாம் விரைவாகப் பார்ப்போம் : அவன்தான் போவாஸ். அவன் ரூத்தின் மாமியான நகோமியின் செல்வந்தரான ஒரு உறவினராக இருந்தான், அவனுடைய தயவுக்கு அவன் பெயர் பெற்றவனாய் இருந்தான் (ரூத் 2:1,20). அவன் நெருங்கின உறவின் முறையானும் அவர்களை ஆதரிக்கிற சுதந்தரவாளிகளில் ஒருவனுமாய் இருந்தான். "அப்படியென்றால் என்ன?" 🧐 என்று நீங்கள் உங்கள் மனதில் நினைப்பதை என் காதில் கேட்க முடிகிறது. இந்தக் கருத்து இப்போது சற்று மாறுபாடான கருத்தாக நமக்குத் தோன்றுகிறது, ஆனால் அந்நாட்களில், தேவையில் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு உதவும்படி, மீட்பர்களாக செயல்படும் பொறுப்பு அவர்களது உறவினர்களுக்கு இருந்தது. உதாரணமாக, ஒரு ஏழை குடும்ப உறுப்பினர் விற்ற நிலத்தை அவர்கள் மீண்டும் மீட்டுக்கொள்ளலாம் அல்லது அடிமையாக விற்கப்பட்ட உறவினரை மீண்டும் மீட்டுக்கொள்ளலாம். அப்படி இல்லையென்றால், ரூத் மற்றும் நகோமியின் விஷயத்தைப் போலவே, மரித்துப்போன ஒரு புருஷனின் மனைவியாகிய ஒரு குடும்ப உறுப்பினருக்கு வாரிசை வழங்கலாம். உறவினரை மீட்கும் ஒரு சுதந்திரவாளியாக இருப்பது என்பது பெரும்பாலும் ஒரு பெரிய தியாகம் செய்வதைக் குறிக்கிறது. ரூத் தனக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தால், அந்தச் சிறுவன் நகோமியின் மகனாகவும், அவளுடைய மறைந்த கணவன் மற்றும் மகன்களுக்கு வாரிசாகவும் இருப்பான் என்பதை போவாஸ் நன்கு அறிந்திருந்தான் (ரூத் 4:14-17).
இது நீங்கள் ஏற்கனவே கேள்விப்பட்ட ஒன்றுபோல இருக்கிறதா? மற்றவர்களது மீட்பிற்காகத் தன் ஒரே குமாரனை நமக்காகத் தந்தவர்தான் அவர். "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்." (யோவான் 3:16)
பழைய ஏற்பாட்டில் உள்ள பல கதைகளைப் போலவே, ரூத் புத்தகமும் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையையும் தியாகத்தையும் அழகாக முன்னறிவிக்கிறது. போவாஸ் ரூத்தை மீட்டான், அதைப்போலவே பல ஆண்டுகளுக்குப் பிறகு, இயேசு முழு மனிதகுலத்திற்கும் மீட்பராக மாறினார். நம்முடைய பாவங்களுக்காக மரித்து, சிலுவையில் நம்முடைய ஒவ்வொரு தேவையையும் பூர்த்தி செய்த மீட்பர் ஒருவர் நமக்கு இருக்கிறார். அவர் போவாஸை விட மேலான ஒரு கதாநாயகன். "அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது." (எபேசியர் 1:7)
அன்பரே இன்று ஆண்டவருடைய அன்பு மற்றும் மீட்பை நினைத்து, ஒரு துதி பாடலைப் பாடி நாம் அவருக்கு நன்றி செலுத்துவோம்.

