நம் அனைவருக்கும் மேடைகள் கிடைக்காமல் போகலாம், ஆனால் நாம் அனைவருமே தூண்களாக இருக்க முடியும்

உங்களுக்கு இன்னும் ஒரு வாய் சாப்பிடக் கிடைத்தால் நன்றாய் இருக்கும் அல்லது இன்னும் ஒரு முறை உறிஞ்சி குடிக்கும்படி அந்த குளிர்பானம் இன்னும் கொஞ்சம் மீதி இருந்தால் நன்றாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள், அதனால், நீங்கள் உண்மையில் அதை சாப்பிட்டு முடித்த பின்பும் உங்களுக்குத் திருப்தி உண்டாகவில்லை, இன்னும் அந்தக் கடைசி வாய் உணவுக்காக அல்லது குளிர்பானத்துக்காக ஏங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அந்த உணர்வு உங்களுக்கு எப்படி இருக்கும்? யோவான் 2:1-10 வரையுள்ள வசனங்களில் சொல்லப்பட்டுள்ள சம்பவத்தில் திராட்சைரசம் தீர்ந்துபோனபோது, அந்த மணமகன் மற்றும் மணமகள் ஆகிய இருவரது உணர்வுகளும் எப்படி இருந்திருக்கும் என்பதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது. இந்தியாவில் நடக்கும் ஒரு திருமணத்தில் பிரியாணி அல்லது கறி தீர்ந்துபோகும் ஒரு நிலையை சற்று கற்பனை செய்து பாருங்கள். அந்த அழகான விழாவை நினைவுகூருவதற்குப் பதிலாக, அங்கு வந்த ஒவ்வொருவரும் குறையைப் பேசக்கூடிய நிலை ஏற்பட்டுவிடும்! இயேசு வாழ்ந்த காலத்தில், ஒரு திருமண விழாவில் திராட்சைரசம் தீர்ந்துபோனது, அது அந்தத் தம்பதிகளை மிகவும் சங்கடமான நிலைக்குள் தள்ளியது. புதுமணத் தம்பதிகள் அற்பமானவர்களாகவோ அல்லது மோசமான உபசரிப்பாளர்களாகவோ கருதப்பட்டிருப்பார்கள் - இது திருமண வாழ்வைத் தொடங்குவதற்கான ஒரு நல்ல ஆரோக்கியமான வழி அல்ல. மரியாள் தலையிட்டு இயேசுவை இந்த சூழ்நிலைக்குள் அழைக்கிறாள். அவர் சொன்ன பதிலை உங்கள் சொந்த தாயாரிடம் சொல்வதை நான் பரிந்துரைக்கமாட்டேன் 🤭: "அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார்." (யோவான் 2:4) ஏதாவது செய்யும்படி இயேசுவின் தாயார் இயேசுவை வலியுறுத்துகிறார், இயேசு அவரது தாய்க்குக் கடமைப்பட்டிருக்கிறார்; தண்ணீரைத் திராட்சைரசமாக மாற்றியதே அவர் செய்த முதல் அதிசயம். விருந்துக்கு புதிய திராட்சைரசத்தைக் கொண்டு வந்தபோது, அது எங்கிருந்து வந்தது என்று அந்தப் பந்தியின் தலைவருக்குத் தெரியாது (யோவான் 2:9), சிறந்த திராட்சைரசத்தை சேமித்துவைத்த பெருமைக்கான பாராட்டு அனைத்தும் அந்த மணமகனுக்குக் கிடைக்கிறது. (யோவான் 2:10). இது ஒரு 'தூண் போன்ற அதிசயம்' - இயேசு அவருக்கான ஒரு தளத்தை உருவாக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை, அதற்குப் பதிலாக, அமைதியாக கிரியை செய்து, இந்த இளம் தம்பதியினரை, அவர்களது திருமண நாளில் ஏற்பட்ட அவமானத்திலிருந்து காப்பாற்றுகிறார். அதற்கான பலனை அவர் எடுத்துக்கொள்ளவும் இல்லை. நம் அனைவருக்கும் மேடைகள் கிடைக்காமல் போகலாம், ஆனால் நாம் அனைவருமே தூண்களாக இருக்க முடியும். நம்மால் தண்ணீரை திராட்சைரசமாக மாற்ற முடியாமல் போகலாம், ஆனால் எதையும் ஒரு மேடை போட்டுக் காட்டாமல், அமைதியாக சேவை செய்யவும், மற்றவர்களின் சுமைகளைக் குறைக்கவும், அவமானம் அல்லது வலியிலிருந்து மற்றவர்களைத் தடுக்கவும் நாம் தருணங்களைத் தேடலாம். அன்பரே, ஒரு தூணாக இருக்க இன்று நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? ஊக்கம் தேவைப்படும் ஒருவருக்கு இந்த அதிசயத்தை அனுப்புவதுபோல் சாதாரணமான ஒரு காரியத்தைக் கூட நீங்கள் செய்யலாம்.

