அன்பரே, உனக்கான இடம் ஆண்டவருக்கு மிக அருகில் இருக்கிறது!
இன்று, என்னுடன் சேர்ந்து முந்தைய காலத்துக்குப் பயணிக்க உன்னை அழைக்கிறேன். ஆண்டவர் மனிதனை சிருஷ்டித்த காலத்தைப் பார்ப்போம்.
“தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்." (ஆதியாகமம் 1:27)
நாம் இதை சற்று ஆராய்ந்து பார்ப்போம்... ஆண்டவர் மனிதனை சிருஷ்டித்தார். அவர் அவனுக்கு ஆதாம் என்று பெயர் வைத்தார். தாம் சிருஷ்டித்த அனைத்து சிருஷ்டிகளின் நிர்வாகத்தையும் அவனிடம் ஒப்படைத்தார். (ஆதியாகமம் 1:28) ஆதாம் பாவத்தில் விழுந்த நாள் வரை அந்தத் தோட்டத்திலேயே இருந்தான், ஏனென்றால் அது அவனது ஆதி ஸ்தலமாக, அவனுக்காக ஆண்டவர் ஏற்கனவே ஆயத்தம் பண்ணியிருந்த இடமாக இருந்தது. அவன் ஏதேன் தோட்டத்தில் இருக்க வேண்டும் என்றும், ஆண்டவரின் சமூகத்தில், அவருக்கு மிக நெருக்கமாக இருக்க வேண்டும் என்றும் அவர் விரும்பினார்.
இங்கே நான் ஒரு காரியத்தை வலியுறுத்த விரும்புகிறேன்: ஆண்டவர் மனுஷனையும் ஸ்திரீயையும் சிருஷ்டித்தபோது, அவர்களுடன் நெருக்கமாக உறவாட வேண்டும் என்பதே ஆண்டவரின் குறிக்கோளாக இருந்தது. அவர் அவர்களை பூமியில் வேறு எந்த இடத்தில் வேண்டுமானாலும் வைத்திருக்கலாம்! ஆனால் ஆண்டவர் அவர்களைத் தமக்கு மிகவும் அருகில் வைத்துக்கொண்டார். நம் ஆண்டவர் நம்மோடு உறவாட விரும்புகிறவராய் இருக்கிறார்.
அன்பரே, அவரிடமிருந்து பிரிந்து வாழ நாம் ஒருபோதும் சிருஷ்டிக்கப்படவில்லை! ஆண்டவர் உன்னை நேசிக்கிறார், ஒவ்வொரு நிமிடமும் உன்னோடு கூட இருக்க வேண்டும் என்பதே அவருடைய விருப்பமாகும்.
எந்த நேரத்திலும், நீ அவருடைய பிரசன்னமாகிய "தோட்டத்திற்குள்" செல்லலாம். அங்கே ஜீவன், சமாதானம், செழுமை மற்றும் மகிழ்ச்சி ஆளுகை செய்கிறது. உன் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் இவை அனைத்தையும் அனுபவிக்கவே நீ சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறாய். குறிப்பாக இன்றே அதை நீ அனுபவி!
அன்பரே, நீ அவருடைய கரத்தின் கிரியையாக இருப்பதால், இனி நீ காத்திருக்க வேண்டாம், நீ பிரவேசிக்க வேண்டிய உண்மையான இடம், தேவனுடைய பிரசன்னம் நிரம்பிய இடமான அவர் தங்கி தாபரிக்கும் ஸ்தலமாகும்! என்னுடன் சேர்ந்து இந்த ஆராதனைப் பாடலைப் பாடி தேவனுடன் உறவாடுவாயா?
இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “எரிக் அவர்களுக்கு நன்றி! நீங்கள் அனுப்பிய மின்னஞ்சலுக்கு மிக்க நன்றி. இன்றைய தலைப்பு என்னை மிகவும் தொட்டது. அதில் எழுதப்பட்டுள்ள அனைத்தும் இரட்சிப்பைக் குறித்தே எழுதப்பட்டுள்ளது. நான் ஒரு பாவியாக இருந்தாலும் ஆண்டவர் என்னை மிகவும் நேசிக்கிறார் என்ற என் நம்பிக்கையை அது பலப்படுத்தியிருக்கிறது. ஆண்டவர்தாமே என்னுடன் நெருக்கமாக உறவாட விரும்புகிறார். அது அற்புதம்! நன்றி, இயேசுவே! எரிக், நீங்கள் இன்னும் அதிகமான ஆத்துமாக்களைத் தொட வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!” (ஆல்பர்ட்)
