உனக்கு கடவுச்சொல்(password) தெரியுமா?
எனது வேலைக்காக நான் அடிக்கடி பயணம் செய்ய வேண்டியிருக்கும். ஒரு புதிய இடத்திற்குச் செல்லும்போது, நான் செய்யும் முதல் காரியங்களில் ஒன்று வைஃபை(wifi) இருப்பதைத் தேடுவது அல்லது கேட்பதுதான். ஒருவேளை உனக்கு ஏற்கனவே இந்த அனுபவம் இருக்கலாம். பெரிய எழுத்துக்கள், எண்கள் மற்றும் குறியீடுகளைக் கொண்ட மிகவும் சிக்கலான கடவுச்சொல்(password) உனக்கு வழங்கப்படும்போது, அதைப் பார்த்து சரியாக எழுத நீ அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும், பின்னர் நீ இணையத்துடன் இணைக்கப்பட்டவுடன், அதைப் பயன்படுத்துவதற்கு அதிக ஆர்வமாய் இருப்பாய்!
ஆண்டவர் நமக்கு ஒரு வரம் கொடுத்திருக்கிறார்... அது நம்மை அவரோடு இணைத்துக்கொள்ளும் வரமே! இதைச் செய்வதற்கு, அவர் பரிசுத்த ஆவியானவரையும், அவரோடு கூட அவருடைய வார்த்தை, ஜெபம், உள்ளூர் திருச்சபை ஆகியவற்றையும் நமக்குக் கொடுத்திருக்கிறார். அன்பு மற்றும் வல்லமை எனும் இந்த வலைதளத்தில்(network) சேர்வதற்கான கடவுச்சொல் என்ன என்று உனக்குத் தெரியுமா? அது, இரட்சிக்கப்படுவதற்காக மனுஷர்கள் மத்தியில் கொடுக்கப்பட்ட ஒரே நாமமாகிய இயேசு எனும் நாமமே!
“ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்” என்று வேதாகமம் கூறுகிறது. (எபிரேயர் 4:16)
நீ காலையில் எழுந்தவுடன், அவருக்கு அருகில் வா. பகல் நேரத்தில், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது ஆண்டவரைப் பற்றி சிந்திக்கவோ அல்லது ஆண்டவரின் வார்த்தையான வேதாகமத்தை வாசிக்கவோ ஒரு நிமிடம் ஒதுக்கு. இப்படிச் செய்வதால், நீ நிச்சயமாகவே எப்போதும் அவருடன் இணைக்கப்பட்டிருப்பாய்!
பெரும்பாலான மக்கள் செய்யும் தவறு யாதெனில், தங்கள் வாழ்வில் எதுவும் சரியாக நடக்காதபோது மட்டுமே, அவருடன் இணைய முற்படுவார்கள். திடீரென்று, தங்களுக்கு இணைப்பு கிடைக்கவில்லை என்பதையும், கடவுச்சொல் தெரியவில்லை என்பதையும் அவர்கள் உணர்கிறார்கள். எனவே அவர்கள் நம்பிக்கையற்றவர்களாய் சோர்ந்துபோகிறார்கள். அவர்கள் சுற்றி முற்றி எல்லா வழிகளையும் தேடிப்பார்த்து, ஆண்டவர் தங்களுக்கு பதிலளிக்கவில்லை என்று குறைகூறுகிறார்கள்... ஆண்டவர் பதிலளிக்கவில்லை என்பது உண்மை அல்ல, அந்தக் குறிப்பிட்ட தருணத்தில் அவர்களால் அவருடன் தொடர்புகொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை!
அன்பரே, நீ ஆண்டவருடன் நல்ல தொடர்பில் இருக்கிறாயா...? அவருடன் உனக்கு ஜீவனுள்ள, ஆரோக்கியமான உறவு இருக்கிறதா...? நீ ஆண்டவரோடு பேசுகிறாயா...? அவர் உன்னோடு பேசுவதை உன்னால் கேட்க முடிகிறதா...? இது மிகவும் முக்கியமானது... வைஃபை(wifi) வைத்திருப்பதை விட இது மிக முக்கியமானது. ;-)
இந்த அழகான ஆராதனைப் பாடலின் வரிகள் நம் இதயத்தின் வாஞ்சையாக இருக்கட்டும். இன்று நாம் அவருக்கு அருகில் நெருங்கி வருவோமாக!
"உம்மோடு இருப்பது தான்
உள்ளத்தின் வாஞ்சை ஐயா
உம் சித்தம் செய்வதுதான்
இதயத்தின் ஏக்கம் ஐயா"
