வெளியீட்டு தேதி 10 டிசம்பர் 2023

உன்னுடைய நேரம் அவருடைய நேரத்தில்...

வெளியீட்டு தேதி 10 டிசம்பர் 2023

ஒருநாள் திடீரென்று என் நிறுவனத்தில் முக்கியமான ஒருவருக்கு அவருடைய சொந்த முகநூல் பக்கத்திற்குள் உள்நுழைய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அது ஒரு வணிகம் சார்ந்த பக்கமாக (business pageஆக) இருந்ததால், அது மிகவும் வெறுப்பூட்டுவதாக இருந்தது.

நாங்கள் இருவரும் இதற்குத் தீர்வு காண பித்துப் பிடித்ததுபோல் பலவாறு முயன்றோம். நான் இன்ஸ்டாகிராமில் கூட இடுகையிட்டு, அதைப் பற்றி யாருக்காவது தெரியுமா என்று என் நண்பர்களிடம் கேட்டேன். முகநூல் பற்றி எங்களுக்கு உதவக்கூடியவர்களைக் கண்டறியவும் நாங்கள் முயற்சித்தோம்.

"இப்போது நம்மால் செய்யக்கூடியது எல்லாம் ஜெபம் மட்டுமே" என்று ஒரு நண்பர் எனக்குக் குறுஞ்செய்தி அனுப்பும் வரை சிக்கலை சரிசெய்ய நாங்கள் பல மணிநேரம் செலவழித்தோம். அச்சச்சோ. என் தலையை எங்கே வைத்திருந்தேன்? அத்தனை மணிநேரத்தில், ஒரு முறைகூட நான் ஜெபிக்கவில்லை. ஜெபத்தின் வல்லமையைப் பற்றித் தொடர்ந்து பேசும் நான், இப்படி செய்தது எனக்கு வருத்தமளித்தது.

நமது விருப்பத்திற்கு மாறாக, எல்லோருடைய வாழ்க்கையிலும், காலையில் மிகவும் அமைதியான தியான நேரத்திற்குப் பிறகும் கூட அப்படி நடக்க வாய்ப்புள்ளது. இத்தருணங்களில் ஆண்வருடனான நமது நேரத்திற்கும் அதன்பின் தொடரும் நம் வாழ்க்கைக்கும் இடையே ஒரு தொடர்பை நாம் ஏற்படுத்திக்கொள்வதில்லை.

தேவன் எப்போதும் நம்மோடு கூட இருக்கிறார், நாம் மனப்பூர்வமாக அவருடன் நேரத்தை செலவிடும்போது மட்டும் அல்ல, எல்லா நேரத்திலும் அவர் நம்மோடு இருக்கிறார். நான் சொல்வது உனக்குப் புரிகிறதா?

உன் வாழ்நாள் முழுவதும், நித்தியத்திலும் கூட, அது உன்னுடைய நேரம் அல்ல. அவருடைய நேரத்திற்குள்தான் உன்னுடைய நேரம் இருக்கிறது!

இது ஒரு அற்புதமான சிந்தனை, இல்லையா? ஆழமாக மூச்சை உள்ளிழுத்து விடு. அதை உணர். அவர் உனக்கு வழங்கிய வாழ்க்கையை உணர். ஓடிக்கொண்டிருப்பது உன்னுடைய நேரம் அல்ல. நேரம் அவருக்கே உரியது, அவருடைய காலம் முடிவடைவதில்லை. அவருடைய காலம் நித்தியமானது.

நீ ஒவ்வொரு கணப்பொழுதிலும் அவருடன் இணைந்திருக்கிறாய், அவரால் பாதுகாக்கப்படுகிறாய், மேலும் அவரிடம் எப்போதும் உதவி கேட்க அனுமதிக்கப்படுகிறாய். முக்கிய விஷயம் என்னவென்றால், நீ ஜெபிக்க வேண்டும்:

"எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்... அவர் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி, என்னை இரட்சிப்பார்: தேவன் தமது கிருபையையும் தமது சத்தியத்தையும் அனுப்புவார்." (சங்கீதம் 57:2-3)  

ஆண்டவரிடம் எல்லையில்லாத நேரம் உள்ளது. எல்லாவற்றிற்குமான தீர்வுகளும் அவரிடம் உள்ளன. எனவே, நீ ஒரு தீர்வுக்காக உலகத்தில் தேட வேண்டாம்... நீ நேரடியாக அவரிடம் செல்லலாம்.

நீ ஒரு அதிசயம்!

Eric Célérier
எழுத்தாளர்