வெளியீட்டு தேதி 6 ஆகஸ்ட் 2024

உன் ஆண்டவர் உன்னை வல்லமையுள்ள நபராக மாற்ற அபிஷேகிக்கிறார்!

வெளியீட்டு தேதி 6 ஆகஸ்ட் 2024

அடுத்த ஏழு நாட்களுக்கு, யோசுவா 1:9ஐ நாம் விரிவாக தியானிக்கப் போகிறோம். வாழ்க்கையின் சிரமங்களுக்கு மத்தியில் ஆண்டவர் நம்மை அழைக்கும் வண்ணமே, வலிமையானவர்களும் தைரியமானவர்களுமாக மாறுவதற்கு உதவும் சில திறவுகோல்களுக்குள் நாம் செல்வோம்!

தம்முடைய வார்த்தையில், ஆண்டவர் யோசுவாவிடம் பின்வரும் வசனம் மூலம் பேசுகிறார்: “நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்."  (யோசுவா 1:9)

யோசுவா ஒரு பெரிய சவாலை எதிர்கொண்டார்: அது என்னவென்றால், மிகுந்த சாந்தகுணமுள்ளவரும் விசேஷித்த தலைவருமான  மோசே விட்டுச் சென்ற பணியை யோசுவா தொடர்ந்து செய்துமுடிக்க வேண்டும். யோசுவாவின் பணி என்ன? இஸ்ரவேல் மக்கள் எதிர்கொள்ளவிருந்த சத்துருக்களின் கையிலிருந்து அவர்களைத் தப்புவித்து,  வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திற்குள் அவர்களைக் கொண்டுவந்து சேர்ப்பதாகும்.

"நான் உனக்குக் கட்டளையிடவில்லையா?" என்று கர்த்தர் யோசுவாவிடம் கூறுகிறார்.  ஆண்டவர் உனக்கும் இந்தக் கட்டளையைத் தருகிறார்... ஆகவே நீ எதற்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. வாலிப பருவத்தில் சந்தித்த கடினமான காலம், முறிந்த உறவு, வேலை வேண்டிய கட்டாயம், நம் தரப்பில் உண்டான தவறு எனும் இப்படிப்பட்ட எதுவும் ஆண்டவரைக் கிரியை செய்யவிடாமல்  தடுக்க முடியாது.

வேதாகமம் நமக்குச் சொல்கிறது: “அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்.” (சங்கீதம் 33:9

ஆண்டவரது வாக்குத்தத்தம் நிச்சயமாக நிறைவேறும். அவர் கட்டளையிட்டதை யாராலும் தடுக்க முடியாது! உண்மையில், ஆண்டவர் நிறைவேற்றும்படி நியமித்ததை  எது தடுக்க முடியும்? சர்வவல்லமையுள்ள ஆண்டவரை யாரால் தடுக்க முடியும்?  அவருடைய மகத்துவத்தை நாம் நம்பலாம். முழங்கால்கள் யாவும் யூதராஜ சிங்கத்துக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முன்பாக முடங்கும்!

அன்பரே, நீ நிறைய சவால்களை சந்திக்கிறாயா? உன்னை பலப்படுத்தக்கூடியவர் ஆண்டவர் ஒருவரே!  உன் எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கையை அவர் மீது வை. ஏனென்றால், உன் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் வலுப்படுத்தக்கூடியவர் அவரே; உன் எதிர்காலத்தை மேலும்  சிறப்புறச் செய்ய அவர் விரும்புகிறார். நல்ல செய்தி என்னவென்றால், ஆண்டவர் தமது திட்டங்களில் ஒருபோதும் தவறுவதில்லை.

எரேமியாவின் வாழ்க்கையிலிருந்து இந்த உதாரணத்தைப் பார்:

“கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன் என்று சொன்னார். அப்பொழுது நான்: ஆ கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, நான் பேச அறியேன்; சிறுபிள்ளையாயிருக்கிறேன் என்றேன். ஆனாலும் கர்த்தர்: நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே, நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய், நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக. நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன்” (எரேமியா 1:4-8

உன் வாழ்க்கைக்கான ஆண்டவருடைய வாக்குத்தத்தங்களை இன்று சத்தமாக அறிக்கையிடு. அவர் கட்டளையிட, வாக்குத்தத்தங்கள் நிறைவேறும்!

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “என்னை ஊக்குவித்ததற்கு நன்றி... எனது வாழ்நாள் முழுவதையும் இவருடன் செலவிடுவேன் என்று நினைத்து 20 ஆண்டுகாலமாக உறவில் இருந்த ஒரு நபரை விட்டுப் பிரிந்து, நான் வாழ்ந்து வருகிறேன். ஆண்டவர் இதை அனுமதிப்பாரானால், இதுவே அவரது சித்தம் என்பதை உணர 'அனுதினமும் ஒரு அதிசயம்' மின்னஞ்சலானது எனக்கு உதவுகிறது. என் குடும்பத்திற்கும் என்னுடைய எதிர்காலத்திற்கும் ஆண்டவர் ஒரு சிறந்த திட்டத்தை வைத்திருக்கிறார் என்பதை இப்போது நான் அறிவேன். இந்த தினசரி ஊக்கம் மற்றும் வழிகாட்டுதலுக்காக நன்றி. இது நான் தினமும் சிறந்த மனுஷியாக இருக்க உதவுகிறது. ஆண்டவர் உங்களைத் தொடர்ந்து ஆசீர்வதிப்பாராக!”  (டாரதி) 

Eric Célérier
எழுத்தாளர்