வெளியீட்டு தேதி 24 செப்டெம்பர் 2024

உன் இருதயத்தில் சமாதானத்தைப் பெற்றுக்கொள்வாயாக 💛

வெளியீட்டு தேதி 24 செப்டெம்பர் 2024

இன்று, எரேமியா 29:11-ஐப் பற்றிய நமது வேத தியானத்தைத் தொடர்கிறோம். குறிப்பாக எவ்வாறு சமாதானத்தைப் பெறலாம் என்பதைப் பற்றி நாம் தியானிப்போம்.

வேதாகமம் கூறுகிறது: "நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே." (எரேமியா 29:11

"தீமைக்கு ஏதுவானவை அல்ல" அல்லது "சமாதானத்துக்கு ஏதுவானவை" என்று குறிப்பிடப்பட்ட இந்த அழகான வார்த்தை "ஷாலோம்" என்ற எபிரேய சொல்லாகும். அதாவது சமாதானம், ஆரோக்கியம், நலன், அமைதி, செழிப்பு, முழுமை என்பது இதன் அர்த்தமாகும்.

இன்று நான் உன்னுடன் ஒரு கதையைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்:

“முன்னொரு காலத்தில் ஒரு ராஜா சமாதானத்துக்கான அடையாளத்தை எடுத்துரைக்கும் சிறந்த ஒரு படத்தை வரைந்த கலைஞருக்குப் பரிசு வழங்கினார். பல கலைஞர்கள் முயற்சி செய்தனர். ராஜா அனைத்து படங்களையும் பார்த்தார்; ஆனால் அதில் இரண்டு படங்கள் மட்டுமே அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது.

ஒரு படம், அமைதி நிலவும் ஒரு ஏரியைச் சுற்றியிருந்த விண்ணை முட்டும் அளவிலான மலைச் சிகரங்கள், தனக்கு மேல் நீல நிற வானில் பஞ்சுபோன்ற வெண்மேகங்களோடு இணைந்திருந்ததை அந்த ஏரியின்  நீர் கண்ணாடியைப்போல தெள்ளத்தெளிவாக பிரதிபலித்தது. இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் எல்லோரும் சமாதானத்திற்கு மிகச்சரியான படம் இதுவே என்று நினைத்தார்கள்.

மற்றொரு படத்திலும் மலைகள் இருந்தன. ஆனால் அவை கரடு முரடாகவும் வெறுமையாகவும் இருந்தன, ஆக்ரோஷமாகக் காட்சியளிக்கும் வானம் இருந்தது, மழை பெய்தது மற்றும் மின்னல் வெட்டியது. மலையின் அடிவாரத்தில் நுரை பொங்கி வழியும் அருவி இருந்தது. இதில் துளியளவும் சமாதானத்துக்கான அடையாளத்தைக் காண முடியவில்லை. ஆனால் ராஜா பார்த்தபோது, ​​​​அருவிக்குப் பின்னால் ஒரு சிறிய புதர் பாறையின் விரிசலில் வளர்ந்திருப்பதைக் கண்டார். புதருக்குள் ஒரு தாய்ப் பறவை கூடு கட்டியிருந்தது. அங்கே, ஆர்ப்பரிக்கும் தண்ணீரின் நடுவே, தாய்ப் பறவை தன் கூட்டில் பரிபூரண அமைதியுடன் அமர்ந்திருந்தது.

எந்தப் படம் பரிசு பெற்றிருக்கும் என்று நீ நினைக்கிறாய்? ராஜா இரண்டாவது படத்தைத்தான் தேர்ந்தெடுத்தார்.

ராஜா அளித்த விளக்கம் என்னை மிகவும் தொட்டது: 'ஏனென்றால்', 'அமைதி என்பது சத்தம், சிரமம் அல்லது கடின உழைப்பு இல்லாத இடத்தில் சமாதானத்தோடு இருப்பது என்று அர்த்தமல்ல. சமாதானம் என்பது இவை எல்லாவற்றின் மத்தியிலும் உன் இதயத்தில் இன்னும் சமாதானத்தைக் காத்துக்கொள்வதாகும். அதுதான் சமாதானத்தின் உண்மையான அர்த்தமாகும்.'"

அன்பரே, ஆண்டவர் உனக்கும் அப்படியே செய்ய விரும்புகிறார். உன் சூழ்நிலைகளை மாற்றுவதை விட உன் இதயத்தைப் பக்குவப்படுத்துவதிலேயே ஆண்டவர் அதிக ஆர்வம் காட்டுகிறார் (அவர் உன் சூழ்நிலையை மாற்றினாலும் கூட).

உன் சமாதானத்துக்காக நீ முழுவதும் அவரையே சார்ந்திருக்கும்போது,  உனக்குப் பரிபூரண சமாதானம் கிடைக்கிறது. உன் குழப்பத்தின் மத்தியிலும் அவர் அதை உனக்கு இலவசமாகத் தருகிறார்.

இன்று இயேசு உனக்குச் சொல்வது இதுதான்: "சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.” (யோவான் 14:27)

Eric Célérier
எழுத்தாளர்