உன் கடந்த காலத்தைப் பற்றிக்கொண்டிராமல் அதை விட்டுவிடு...
இன்று ஒப்புரவாகுதலுக்கான பாதையைப் பற்றி உன்னுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
"மன்னிப்பு பற்றிய செய்தியைக் கொடுத்துவிட்டு நான் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தபோது, ஒரு பெண் என்னிடத்தில் வந்து, 'அவர்களை மன்னியுங்கள் என்று சொல்கிறீர்களே. என் வாழ்க்கையை நாசப்படுத்தியதற்காக அவர்களை நான் மன்னிக்க வேண்டுமா?' என்று கேட்டாள். பத்து வருடங்களுக்கு முன்பு அவளுடைய தோழி ஒருத்தி அவளது கணவனுடன் ஓடிப்போய்விட்டாள். அவளுடைய கண்ணோட்டத்தில், அவர்கள் ஒரு நல்ல வீட்டில் வசித்து, தங்கள் வாழ்க்கையை நன்றாக வாழ்வதுபோல் தோன்றியது. அவர்கள் இருவரும் தங்கள் பாவத்திற்காக எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை, அவளுடன் சமரசம் செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதற்கிடையில், இந்த அப்பாவி பெண் ஒவ்வொரு நாளும் கடந்த காலத்தை நினைத்து வலியை அனுபவித்துக்கொண்டிருந்தாள்.
நான் அவளிடம், ‘ஆண்டவருடைய வலிமையான கரம் உன் மணிக்கட்டைச் சுற்றி உன்னை உறுதியாகப் பிடித்திருக்கிறது. நீ ஆண்டவரைப் பற்றிப் பிடிக்கவில்லை, ஆனால் நீ கீழே விழாதபடிக்கு அவர் உன்னைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறார். உன் கடந்த காலத்தை நீ உறுதியாகப் பற்றிக்கொண்டிருக்கும்வரை, உன் மற்றொரு கை உன்னைக் கீழே இழுத்துக்கொண்டுதான் இருக்கும். கடந்த காலத்தை மறந்துவிட்டு, உன் முழு பலத்துடன் ஆண்டவரைப் பற்றிப் பிடிக்க நீ ஏன் சிந்திக்கவில்லை? நீ செய்து கொண்டிருப்பதெல்லாம் உன்னையே நீ காயப்படுத்துவதுதான்’ என்று சொன்னேன்.
‘ஆனால் அவர்கள் என்னை எவ்வளவு மோசமாக காயப்படுத்தினார்கள் என்பது உங்களுக்குப் புரியவில்லை’ என்று சொல்லி அவள் என் பேச்சைக் கேட்க மறுத்தாள்.
‘அவர்கள் இன்னும் உன்னைத் துன்புறுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்’ ஆனால் ‘மன்னிப்பு என்பது வலியைத் தடுப்பதற்கான ஆண்டவருடைய பாதை. கடந்த காலத்தை நீ விட்டுவிடும்போது, அது உன்னைப் பற்றிப் பிடிக்காது, அப்போதுதான் உன்னை நேசிக்கும் உன் பரலோகத் தகப்பனுடன் நீ ஐக்கியத்தை ஏற்படுத்துவாய்' என்று நான் அவளிடம் சொன்னேன்.
அவள் அதை ஏற்றுக்கொண்டாள். மறுநாள் காலை அவள் திருச்சபைப் பாடகர் குழுவில் பாடல் பாடிக்கொண்டிருந்தாள்; அவளுடைய முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை அவளுக்கு நெருக்கமான அனைவரும் கவனித்தனர்.
அன்பரே, இன்று நான் உனக்காக ஜெபிக்கிறேன், ஆண்டவருடைய உதவியால், உன் கடந்த காலத்தைக் குறித்து வேதனைப்படுவதை விட்டுவிட்டு, உன் முழு பலத்துடன் அவருக்கு அருகில் நெருங்கி வா.
இதோ உனக்காக இயேசு அருளும் வாக்குத்தத்தம்: "கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும், ..." (ஏசாயா 61:1).
இந்த நாள் அவருடைய பிரசன்னத்தால் நிரப்பப்படட்டும். அவருடைய சமாதானமும் அன்பும் உன்னில் நிரம்பி இருப்பதாக!
