அன்பரே, உன் மாம்சத்தில் ஒரு முள் இருக்கிறதா?
அப்போஸ்தலனாகிய பவுல் எழுதிய இந்த வார்த்தைகளை என்னுடன் சேர்ந்து தியானிக்க நான் உன்னை அழைக்கிறேன்:
“அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது. அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு, நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன். அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன். அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்.” (2 கொரிந்தியர் 12:7-10)
பவுல் தன் மாம்சத்தில் முள் போன்று இருக்கின்ற ஒரு பிரச்சனையை இங்கே நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். பல நூற்றாண்டுகளாக, இறையியலாளர்கள் இந்த முள் எதைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதைப் பற்றி வாதிடுகின்றனர். இறுதியில் இந்த முள் எதைக் குறிக்கிறது என்பதை அவர்களால் அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை:
பவுலின் சில எழுத்துக்கள் நம்மை நம்ப வைக்கிறபடி பவுல் நோய்வாய்ப்பட்டிருந்தாரா, அதனால் அவருக்குக் கண்களில் பிரச்சனை இருந்ததா?
- அவர் சோதனையை அனுபவித்தாரா?
- ஒரு சில எதிர்ப்புகளால் அவர் சோர்ந்துபோய் இருந்தாரா?
- தனிமை அவரைப் பாரமாக உணர வைத்ததா...?
- அவருக்கு திருச்சபை விஷயங்களில் சிரமங்கள் இருந்ததா...?
- இந்த சோதனைக்கான மூல ஆதாரம் பிசாசுதானா...?
- இவை அனைத்தும்... அவருக்கு ஒரே நேரத்தில் இருந்ததா?
உண்மையில், இவை இங்கே முக்கியமில்லை. பவுல் என்ன உணர்கிறார் என்பதை நீ நிச்சயமாக புரிந்துகொள்கிறாய். முள் என்பது மிகவும் சிறியதாகத் தோன்றினாலும், உண்மையில், நம் எண்ணங்கள் அனைத்தையும் அது ஆக்கிரமித்துவிடும் ஒன்றாக இருக்கிறது.
நம்மைத் தொடர்ந்து நெருக்கும் பொருளாதார சுமைகள், வாட்டிவதைக்கும் வியாதிகள், வாழ்க்கைத் துணையுடன் நாளுக்குநாள் அதிகரிக்கும் சண்டைகள், மன்னிக்க இயலாத தன்மை, சோர்வுறச் செய்யும் தனிமை ஆகிய இவைகள் நமது முட்களாக இருக்கலாம். இவை யாவும் நம்முடைய காலடியில் இருக்கும் முள்ளைப்போல, நன்றாக மறைந்திருந்தாலும், அது நம்மைக் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கிறது... சில சமயங்களில் அது மிகவும் மோசமாக நம்மைத் துன்பப்படுத்துகிறது.
எப்படியிருந்தாலும், பவுல் குறிப்பாக இந்த முள்ளினால் அதிக வேதனைப்பட்டிருக்கக் கூடும். ஆண்டவர் தன்னை இந்த முள்ளிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று அவர் மூன்று முறை ஜெபித்தார்.
அன்பரே, உன் மாம்சத்தில் உள்ள முள்ளால் அவதிப்படுகிறாயா? அற்பமானதாகத் தோன்றினாலும், யாராலும் பார்க்க முடியாவிட்டாலும், இந்த முள்ளினால் ஏற்படும் எத்தகைய துன்பத்தையும், இயேசு புரிந்துகொள்கிறார் என்பதை நீ அறிந்துகொள்.
ஆம், முட்களால் முடிசூட்டப்பட்டவர்... உனது முள் போன்ற சூழலையும் புரிந்துகொள்வார். மேலும், அவர் பவுலிடம் பேசியதுபோல், உன்னிடமும் பேசுகிறார்: "அன்பரே, என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்."
