வெளியீட்டு தேதி 20 நவம்பர் 2024

ஒவ்வொரு அடியும் முக்கியமானது! 👣

வெளியீட்டு தேதி 20 நவம்பர் 2024

மிகப்பெரிய யோசனைகளும், மிக அழகான வெற்றிகளும், ஒருவரது இதயத்தின் ஆழத்தில் உருவாகும் ஒரு கனவிலிருந்து தொடங்குகிறது. வயிற்றுக்குள் இருக்கும் குழந்தைபோல, மறைந்திருந்து, இந்தக் கனவு அமைதியாக வளர்கிறது.

ஆண்டவர் ஒரு நபரை எப்படி அசாதாரணமான வழிகளில் பயன்படுத்த முடியும் என்பதற்கு வேதாகமத்தில் அநேக உதாரணங்கள் உள்ளன.

அன்பரே, ஆண்டவர் உன்னை நம்பி அதிக பொறுப்புகளையும், பெரிய திட்டங்களையும் ஒப்படைக்க விரும்புகிறார், மேலும் அவர் உன் வாழ்க்கையை அவருடைய கரங்களில் உள்ள ஒரு வல்லமை வாய்ந்த கருவியாக பயன்படுத்த விரும்புகிறார். ஒருவேளை நீ ஏற்கனவே அவருக்கு ஆர்வத்துடன்‌ ஊழியம் செய்துகொண்டிருக்கலாம், அன்பரே, ஆனால் சில சமயங்களில் நீ இவ்வாறு நினைக்கிறாய்:

  • நீ அவருக்காக அதிகம் சாதிக்கவில்லை,
  • நீ மிகவும் பயனுள்ள நபராக இல்லை,
  • நீ குறைவாக கனிகளைத் தருகிறாய் அல்லது கனிகொடுக்கவில்லை.

இப்படி நினைத்துக்கொண்டிருப்பாயானால், ஆண்டவர் தம்முடைய வார்த்தையின் மூலம் உன்னை உற்சாகப்படுத்த விரும்புகிறார்: “நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி’.’ (மத்தேயு 25:23

ஒரு குழந்தை உலகிற்கு வருவதற்கு முன்பு, குறிப்பிட்ட காலமும் வளர்ச்சியும் தேவைப்படுவதுபோல், நீ ஒளியில் பிரவேசிப்பதற்கு முன்பு ஆண்டவர் உன்னை உருவாக்கி வடிவமைக்கிறார். இந்த செயல்பாட்டுக்கு குறிப்பிட்ட காலமும், துல்லியமான நேரமும், பொறுமையும் தேவைப்படும்!

அன்பரே, சிறிய தொடக்கங்களை அற்பமாக எண்ண வேண்டாம், ஏனென்றால் ஆண்டவருக்கு, ஒவ்வொரு அடியும் முக்கியமானது. உன் ஆர்வத்தையும் விசுவாசத்தையும் அவர் அங்கீகரிக்கிறார், அவர் சிறிது சிறிதாக பலனளிக்கிறார். உன்னால் முடியாததை அவர் நிறைவேற்றுவார். அவர் படிப்படியாக நிறைவேற்றுவார்,  வெற்றி மேல் வெற்றி தருவார். நீ ஆண்டவருக்காகச் செய்யும் அனைத்தையும் அவர் பதிவு செய்கிறார்!

என்னுடன் சேர்ந்து ஜெபிக்கும்படி உன்னை அழைக்கிறேன், “கர்த்தாவே, உமக்காக நான் செய்கிற அனைத்தையும், நீர் ஒவ்வொரு நாளும் பார்க்கிறீர் என்பதை எனக்கு நினைவூட்டியதற்கு நன்றி.  என்னைப் பயிற்றுவித்ததற்கு நன்றி, இதன்மூலம் உமது ராஜ்யத்திற்காக நான் இன்னும் திறமையாக செயல்படவும், நீர் என்னை நம்பும் திட்டங்களுக்குப் பொறுப்பாளியாக இருக்கவும் முடியும். நான் உமது கரங்களில் என்னை விட்டுக்கொடுத்து, கீழ்ப்படிதலுடன் வாழ விரும்புகிறேன். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்."  உனக்கான ஆண்டவருடைய தரிசனத்தை நிறைவேற்றுவதற்கான பாதையில் நீ இருப்பதால், தைரியமாய் இரு!

அவர் சமூகத்தில் இது உனக்கு ஒரு அழகான நாளாக அமைவதாக என்று வாழ்த்துகிறேன்.

Eric Célérier
எழுத்தாளர்