குற்ற உணர்வுக்கு உன்னில் இடமில்லை என்று சொல்!
நான் சிறுவனாக இருந்தபோது, நான் திட்டு வாங்கிவிடுவேனோ என்று பயப்பட்டது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.
அன்பரே, உனக்கும் இதேபோல் எப்போதாவது நடந்திருக்கிறதா? நீ ஒரு தவறு செய்துவிட்ட பின், விரைவில் உன் அம்மா அல்லது அப்பா அதைக் கண்டுபிடித்துவிட்டார்கள் என்றால், அவர்கள் கோபத்துடன் திட்டுவதை நினைத்தாலே உள்ளுக்குள் பயந்து நடுங்குவாய் அல்லவா! அச்சமயத்தில் பயத்துடன் ஒரு திட்டவட்டமான குற்ற உணர்வும் உன்னை ஆட்கொள்ளும். நான் அதைச் செய்திருக்கக்கூடாது, நான் முதலில் யோசித்திருக்க வேண்டும் என்பது போன்ற யோசனைகள் உனக்கு வரும், அப்படித்தானே?
நாம் வளர்ந்த பின்னரும் கூட, இதை ஒத்த சிந்தனைகளைக்கொண்டிருக்கலாம்; தவறுசெய்த பிறகு அதே பயம் மற்றும் குற்ற உணர்ச்சிகளை நாம் கொண்டிருக்கலாம். நான் உன்னிடம் ஒரு கேள்வி கேட்கலாமா? ஒரு கிறிஸ்தவராக, உன் பரலோகப் பிதாவைப் பற்றி உன்னால் இப்படி நினைக்க முடியுமா?
இருப்பினும், “... நீர் மனவுருக்கமும், இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையும், சத்தியமுமுள்ள தேவன்” என்று ஆண்டவரைக் குறித்து வேதாகமம் நமக்கு உறுதியளிக்கிறது. (சங்கீதம் 86:15)
அன்பரே, இயேசு சிலுவையில் மரித்தபோது, உனது எல்லா பாவங்களையும் சுமந்துதீர்த்த அந்தத் தருணத்தில் தேவனின் கோபத்தை தம்மீது ஏற்றுக்கொண்டார். மேலும், "நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், அவர் நம்முடைய பாவங்களை மன்னித்து, எல்லா அநியாயங்களிலிருந்தும் நம்மைச் சுத்திகரிப்பதற்கு உண்மையும் நீதியும் உள்ளவர்" என்ற வசனத்தை நினைவில்கொள்வாயாக. (1யோவான் 1:9)
நீ ஆண்டவரின் கோபத்துக்கு உள்ளாகாதபடிக்கு, இயேசு தேவனின் கோபத்தை தம்மீது ஏற்றுக்கொண்டார். எனவே பயமும் குற்ற உணர்வும் உனக்கு இல்லை என்று சொல்லி நீ அறிக்கையிடு!
இயேசுவின் இரத்தம் உன்னை நீதிமானாக்கிவிட்டதால், நீ என்ன தவறு செய்திருந்தாலும், நீ தேவ கோபத்துக்கு உள்ளாக வேண்டியதில்லை. (ரோமர் 5:9)
தவறு செய்தல் மனித சுபாவம், அதை மன்னிப்பது தெய்வீக சுபாவம் என்பதை நினைவில்கொள். அன்பரே, ஆண்டவர் உன்னைத் தமது மனதுருக்கத்தால் இரக்கத்துடன் எப்போதும் ஏற்றுக்கொள்வார்.
