வெளியீட்டு தேதி 19 ஆகஸ்ட் 2024

"கிறிஸ்தவர்" என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது தெரியுமா?

வெளியீட்டு தேதி 19 ஆகஸ்ட் 2024

"கிறிஸ்தவர்" என்ற வார்த்தை" குட்டி கிறிஸ்து" என்று பொருள்படும் கிறிஸ்டியானோஸ் எனும் கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது என்பது உனக்குத் தெரியுமா? இயேசுவின் சீஷர்கள் மீது குற்றம் சாட்டியவர்கள் சீஷர்களை அவமானப்படுத்தும்படி அதைப் பயன்படுத்தியிருக்கலாம்... "பாருங்கள், அங்கே 'குட்டி கிறிஸ்துக்கள்' இருக்கிறார்கள்," என்று அவர்கள் கூறியிருக்கக்கூடும். எனவே, பரியாசம் செய்வதாக இருக்க வேண்டும் என நினைத்து கொடுக்கப்பட்ட ஒரு அடைமொழி, பிற்காலத்தில் கோடிக்கணக்கான மக்களுக்கு ஆசீர்வாதமாக மாறியது. எத்தனை ஒரு அழகான வரலாற்று நகைச்சுவை!

வேதாகமம் கூறுகிறது: “அவர்கள் ஒரு வருஷகாலமாய்ச் சபையோடே கூடியிருந்து, அநேக ஜனங்களுக்கு உபதேசம் பண்ணினார்கள். முதல்முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று." (அப்போஸ்தலர் 11:26

ஆனால் எதிர்ப்பாளர்கள் ஏன் சீஷர்களை "கிறிஸ்தவர்கள்", "குட்டி கிறிஸ்துகள்" என்று அழைத்தார்கள்? விசுவாசிகளின் வாழ்க்கை முறையானதாகவும் மிகவும் தெளிவாகவும் பிழையற்றதாகவும் இருந்ததால், அவர்களுக்கு இந்தப் பெயர் வழங்கலாயிற்று. அவர்கள் இயேசுவிடமிருந்து கற்றுக்கொண்டதை நடைமுறைப்படுத்தி வாழ்ந்ததால்தான் அவர்களுக்குக் (நமக்கும்) கொடுக்கப்பட்ட பணியை அவர்கள் முழுமையாக செய்து நிறைவேற்றினர். அவர்கள் கிறிஸ்துவைப் பிரதிநிதித்துவப்படுத்தினர், மற்றும் அவரை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தினர்!

கிறிஸ்துவைப் பிரதிநிதித்துவப்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்? வேத வசனங்களை ஆதாரமாகப் பயன்படுத்தி நமது அண்டை வீட்டாரைக் குற்றப்படுத்துவதற்குப் பதிலாக, நாம் செய்ய வேண்டிய மென்மையான மற்றும் மிகவும் பயனுள்ள அணுகுமுறை என்னவென்றால், வேத வசனங்களை வாசித்து, ஆண்டவரோடு நேரத்தை செலவிடுவதாகும். நீ அவரை எவ்வளவு அதிகமாக அறிந்துகொள்கிறாயோ, அவ்வளவு அதிகமாக அவருடைய குணம் உன்மீது  பிரதிபலிக்கும்.

நேற்று, இயேசுவின் குணாதிசயங்களைப் பிரதிபலிப்பதற்கான சில அம்சங்களைப் பார்த்தோம் (1 கொரிந்தியர் 13:4-8). நீ வேதத்தை தியானிப்பதன் மூலம் இதை இன்னும் ஆழமாக ஆராயலாம். இங்கே அவரது பண்பு நலன்களில் சிலவற்றைக் குறிப்பிடுகிறேன்:

பிதாவானவரிடத்தில் அவரது கீழ்ப்படிதல்: பிதாவுடைய வழிகள் மேன்மையானவை என்பதை அறிந்து, தம் பிதாவின் சித்தத்தைப் பின்பற்றும் நோக்கில், இயேசு எல்லாவற்றையும் விட்டுவிட ஒப்புக்கொண்டார்.

அவரது இரக்கம்: இயேசு பாவிகளுக்கு சிநேகிதராக இருந்தார்; வெளித்தோற்றத்தையும் பிறரது குற்றச்சாட்டுகளையும் பொருட்படுத்தாது, தமது உதவி தேவைப்படும் ஒருவரிடத்துக்கு நேரடியாகச் செல்வது எப்படி என்பதை இயேசு அறிந்திருந்தார். 

அவருடைய தாழ்மை: அவர் பரலோகத்தின் ராஜா; ஆனாலும் அவர் அனைவருக்கும் ஊழியம் செய்பவராக மாறினார்.

அன்பரே, இயேசுவை நீ ஒவ்வொரு நாளும் இன்னும் அதிகமாக அறிந்து, அவரைப்போல் மாறி, அவரைப் பிரதிபலிக்க  வேண்டும் என்று இன்று நான் உனக்காக ஜெபிக்கிறேன்!

Eric Célérier
எழுத்தாளர்