வெளியீட்டு தேதி 10 ஆகஸ்ட் 2024

கலங்காதே!

வெளியீட்டு தேதி 10 ஆகஸ்ட் 2024

ஆண்டவர் விரும்பும் வண்ணம், வலிமையும் தைரியமும் நிறைந்த நபராக நாம் மாற யோசுவா 1:9 ஆம் வசனத்திலிருந்து மீண்டும் நமது ஆய்வைத் தொடரலாம்!

“நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்."  (யோசுவா 1:9)

ஆபிரகாம் லிங்கன் ஒருமுறை சொன்னார்: "எந்த கலக்கமும் உன்னை பட்சிக்க இடமளிக்காதிருந்தால், இறுதியில் நீ நிச்சயம் வெற்றி பெறுவாய்."

நமக்கு நடக்கும் காரியங்களுக்கு நாம் எதிர்வினையாற்றும் விதம்தான் நமக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். ஒரு பயங்கரமான பிரச்சனையை மனிதன் தன் வேலையில் எதிர்கொள்கையில், அவன் குடிக்கத் தொடங்குகிறான்; அது மிகவும் கொடிய கல்லீரல் நோய்க்கு வழிவகுக்கிறது. மேலும் இந்த நோய் வேலையிலுள்ள பிரச்சனையை விட மிகவும் கடுமையான விளைவுகளை அவன் வாழ்வில் ஏற்படுத்துகிறது.

மனமடிவு என்பது ஒரு தீய சுழற்சி போன்றது... அது தன்னைத்தானே அழிக்கிறது. அது ஒருபோதும் நிலைமையை சரிசெய்ய உதவாது. 

யோசுவா மனமடிவுக்குள்ளாவதற்கும் கலக்கமடைவதற்கும் சரியான காரணங்கள் இருந்தன: ஒரு புதிய நாடு, அவனுக்குத் தெரியாத புதிய பாதைகள் மற்றும் திரளான மக்கள் மற்றும் பலம் வாய்ந்த எதிரிகள் ஆகிய இவைகளே அவனைக் கலங்கச் செய்தன. ஆனால் ஆண்டவர் அவனிடம், “கலங்காதே. நீ திகைப்படைவாயானால், நீ தொய்ந்து, சோர்ந்து இருக்கும்போது, நீ ஏற்கனவே தோற்றுப்போனவன்போல் ஆகிவிடுவாய். நீ தைரியத்தைப் பற்றிக்கொள்ள வேண்டும்; என்னில் உன்னை பலப்படுத்திக்கொள்ள வேண்டும்.  நான் உன்னுடன் இருக்கிறேன், உன்னால் எல்லாவற்றையும் செய்ய முடியும்" என்று சொல்லி பலப்படுத்துகிறார்.

ஆண்டவர் மீண்டும் உனக்குச் சொல்கிறார்: “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.” (ஏசாயா 41:10)

தற்காலிக மனச்சோர்வு ஒரு வைரஸ் போன்றது. நிரந்தர சோர்வு புற்றுநோய் போன்றது. முந்தையது சிகிச்சையளிப்பதற்கு மிகவும் எளிது!

கலக்கம் உனக்காகக் காத்திருப்பதாக நீ உணர்ந்தால், பயம் உனக்குள் இருக்க வேண்டிய நம்பிக்கையை விட அதிக இடத்தைப்பிடிக்க, ஒருபோதும் அதற்கு இடமளிக்காதே. இயேசுவை நோக்கிப் பார்...

“அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்.” (எபிரெயர் 12:2-3)

அன்பரே, நீ இனி பாடுபடக்கூடாது என்பதற்காக இயேசு பாடுபட்டார். நான் இதை அறிவிக்கிறேன்: நீ இனி ஒருபோதும்  வியாதியுடனோ வாழ்க்கையில் சோர்வுடனோ காணப்படமாட்டாய்;  உன் ஆத்துமா முற்றிலும் சோர்வடைய எந்த ஒரு அவசியமும் இல்லை! நீண்ட காலமாக மனச்சோர்வு உனக்குள் நிலைத்திருந்தால், உன்னைச் சுற்றி உள்ளவர்களின் உதவியை நாடு, ஆண்டவர் உனக்கு உதவுவாராக. ஆண்டவர் உன் காயங்களைக் குணப்படுத்த வல்லவர். அவரில் நீ ஜெயங்கொள்வாய்!

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “நான் ஒரு போதகர், நான் வேத வார்த்தையை போதிப்பதில் நிறைய நேரத்தைச் செலவழித்து, என் சபைக்கு ஊழியம் செய்தாலும், உங்களது மின்னஞ்சல்கள் உற்சாகமளிப்பதாகவும் ஊக்கமளிப்பதாகவும் உள்ளன. சில நேரங்களில் அவைகள் சரியான நேரத்தில் வந்து சேரும்!  சில சமயங்களில் திருச்சபைக்கு அப்பாற்பட்டு எனது தனிப்பட்ட வாழ்க்கையில் நான் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அல்லது துன்பங்களைப் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள், அது எனது கவனத்தை ஒரே நேர்கோட்டில் செலுத்துவதற்கு ஒரு கருவியாக இருக்கிறது. ஒரு போதகராக இருக்கும் எனக்கும் ஊக்கம் தேவையாகத்தான்  இருக்கிறது, அது மட்டுமல்லாமல், உங்களது 'அனுதினமும் ஒரு அதிசயம்' மின்னஞ்சலானது எனது ஊழியத்தில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது." (ஜான், புதுக்கோட்டை)

Eric Célérier
எழுத்தாளர்