பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, – யோசுவா 1:9

‘கலங்கிய குளத்தில் மீனைத் தேடாதே’ என்ற பேச்சுவழக்கை நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது என் வாழ்வில் உண்மை என்பது எனக்குத் தெரியும் - கலங்கிய குளத்தில் மீனைத் தேடுவது என்பது எப்போதுமே ஆரம்பத்தில் ஒரு உத்வேகத்தை அளித்தாலும், பின்னர் பலன் கிடைக்காததால் வருத்தமளிப்பதாய் இருக்கிறது. 🤦🏻♀️
பகுத்தறிதல் என்பதன் அர்த்தத்தை நாம் ஆராய்ந்து வருகிறோம்: பகுத்தறிதல் என்பது நல்ல மற்றும் ஆண்டவருக்கு சித்தமான முடிவுகளை எடுக்கும் திறன். சில நேரங்களில் ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பு சற்று தாமதம் செய்வது நன்று. குளம் கலங்கி இருக்கும்போது, நீங்கள் மீன் பிடிக்கப் போகக்கூடாது என்பதுபோல, இப்படிப்பட்ட நேரங்களில் நீங்கள் முடிவுகளை எடுக்கக் கூடாது. அவை:
1. நீங்கள் உணர்ச்சிவசப்படும் நேரங்கள்
உணர்ச்சிகள், சிந்திக்காமல் தீர்மானங்களை எடுக்கும்படி உங்கள் சிந்தையைக் குழப்பி, உடனடியாக உணர்ச்சிவசப்பட்டு முடிவுகளை எடுக்க வழிவகுத்துவிடும். உணர்ச்சிகள் விரைவாக வருவதுபோலவே விரைவாக தணிந்துவிடும். பின்பு உங்கள் மனநிலை மாறியபின், நீங்கள் எடுத்த உங்கள் முடிவைப் பற்றி நீங்களே வருத்தப்படுவீர்கள். இது உணர்ச்சிவசப்படும் எல்லா சூழ்நிலைகளுக்கும் பொருந்தும்; மிக முக்கியமாக, காயம் மற்றும் கோபம் வழியாக பிறக்கும் உணர்ச்சிகளுக்கு மிகவும் பொருந்தும்.
"மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே." (யாக்கோபு 1:20)
"மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும்." (பிரசங்கி 7:9)
2. நீங்கள் பயப்படும் நேரங்கள்
உங்கள் முழுமையான திறனை நீங்கள் அடைவதைத் தடுக்க பிசாசு உங்களுக்கு வைக்கும் ஒரு கண்ணிதான் பயம். பயத்தை மேற்கொள்ளும் விசுவாசத்தைத் தேர்ந்தெடுங்கள். ஏதாவது தவறு நடந்துவிடுமோ என்று பயப்படுவதற்குப் பதிலாக, ஆண்டவர் உங்களோடு இருக்கிறார் என்று விசுவாசியுங்கள்.
“பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்." (யோசுவா 1:9)
3. நீங்கள் சோர்வாக இருக்கும் நேரங்கள்
சோர்வு முன்னோக்குப் பார்வையைத் திசைதிருப்புகிறது. நாம் சந்திக்கும் சவால்களை அதன் உண்மை அளவைவிட பெரிதாக்கி காட்டுகிறது. கேம்ரனும் நானும் ஒரு சின்ன விதியைப் பின்பற்றுகிறோம்: இரவு 10 மணிக்குப் பிறகு வாழ்வின் முக்கிய முடிவுகள் எதையும் நாங்கள் எடுப்பதில்லை. ஓய்வு நம் சிந்தையை புதுப்பித்து, பகுத்தறிதலை தெளிவுபடுத்துகிறது.
“நான் விடாய்த்த ஆத்துமாவைச் சம்பூரணமடையப்பண்ணி, தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன்." (எரேமியா 31:25)
அன்பரே, நாம் இதை உறுதி செய்வோம்: நீங்கள் உணர்ச்சிவசப்படும்போது, பயப்படும்போது அல்லது சோர்வாக இருக்கும்போது எந்த ஒரு முக்கியமான முடிவுகளையும் எடுக்காதீர்கள். நீங்கள் திருமணமானவராக இருந்தால், உங்கள் வாழ்க்கைத் துணையுடனும் இதை பற்றி கலந்துரையாடி இனி எடுக்கும் முடிவுகளுக்கு இதை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

