சமுதாயத்தில் உங்களுக்கு இருக்கும் அந்தஸ்து என்ன?
சமூக வகுப்பு, கல்வி நிலை, பொருளாதார நிலை போன்ற குறிப்பிட்ட அளவுகோல்களை வைத்தே ஒரு நபரின் வாழ்க்கையை நாம் வாழும் சமூகம் மதிப்பிடுகிறது. நீங்கள் எப்போதாவது அதே அளவுகோல்களால் மற்றவர்களால் மதிப்பிடப்பட்டிருக்கிறீர்களா அல்லது நீங்கள் மற்றவர்களை மதிப்பீடு செய்திருக்கிறீர்களா? நீங்கள் எப்போதாவது சமூகத்தால் குறைத்து மதிப்பிடப்பட்டதாகவோ அல்லது நிராகரிக்கப்பட்டதாகவோ உணர்ந்திருந்தால், இதை கருத்தில்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்: உங்கள் மதிப்பு நீங்கள் யார் என்பதை வைத்தோ அல்லது எப்படிப்பட்ட நபராக இருக்கிறீர்கள் என்பதை வைத்தோ தீர்மானிக்கப்படுவதில்லை, அதற்குப் பதிலாக, நீங்கள் யாருக்குச் சொந்தமான நபர் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. நீங்கள் ஆண்டவருக்குச் சொந்தமான நபர்! அவரது அன்புக்குரிய நபர், அவரது பிள்ளை மற்றும் அவரது தலைசிறந்த படைப்பாக இருக்கிறீர்கள் (எபேசியர் 2:10) "கர்த்தரே தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் ஜனங்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம்." (சங்கீதம் 100: 3) நீங்கள் தற்செயலாக சிருஷ்டிக்கப்படவில்லை. பூமியில் உங்கள் வருகையை ஆண்டவர் முன்கூட்டியே ஆயத்தம் செய்தார்! வேதாகமம் இதை நமக்குச் சொல்கிறது: “நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாய் உருவாக்கப்பட்டபோது, என் எலும்புகள் உமக்கு மறைவாயிருக்கவில்லை. என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது." (சங்கீதம் 139:15-16) பிரபஞ்சத்தின் சிருஷ்டிகர் உங்கள் வாழ்க்கை முக்கியத்துவம் வாய்ந்தது என்று சொல்வாரானால், அதை யாரால் மறுக்க முடியும்? இதைத் தவிர வேறு எந்த உண்மையையும் ஏற்றுக்கொள்ளாதீர்கள்: ஆண்டவர் உங்களை நேசிக்கிறார்.
- உங்கள் குடும்பம், உங்கள் நண்பர்கள் மற்றும் உங்கள் சக ஊழியர்களுக்கு நீங்கள் ஆசீர்வாதமாக இருக்கிறீர்கள்.
- அவர்களின் வாழ்விலும் இதயங்களிலும் ஆண்டவர் பாய்ந்துசெல்ல விரும்பும் வாய்க்காலாக நீங்கள் இருக்கிறீர்கள்!
- தேவனுடைய உன்னத நோக்கங்களின்படி அவருடைய சித்தத்தைச் செய்ய நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறீர்கள்.
உங்கள் எண்ணங்களில் திடீரென்று சந்தேகம் எழும்போது, அன்பரே, இந்தப் பொய்களை நிராகரித்து உரக்கச் சொல்லுங்கள்: “பரலோகத் தகப்பனே, என்னை உமது பிள்ளையாக்கியதற்கு நன்றி. நான் பிறப்பதற்கு முன்பே நீர் என்னைத் தெரிந்துகொண்டீர்... நீர் என்னை நேசிக்கிறீர் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள எனக்கு உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”
