தேவனுடைய சித்தத்தை பகுத்தறிவதற்கான திறமை எல்லா விசுவாசிகளுக்கும் கிடைக்கிறது

'அனுதினமும் ஒரு அதிசயத்தை' நாங்கள் எழுத ஆரம்பித்து மூன்று மாதங்கள் ஆகிறது, மேலும் ஆண்டவரிடமிருந்து ஒரு வழிகாட்டும் வார்த்தையை கேட்டு மக்களிடமிருந்து எங்களுக்கு அடிக்கடி செய்திகள் வருவதுண்டு.
எங்களது வாசகர்கள் எங்கள் ஆலோசனையைக் கேட்பது எங்களுக்கு மிகவும் சந்தோஷம், ஆனாலும் வாழ்க்கையின் மிகப்பெரிய தீர்மானங்களை எடுக்கும் வேளையிலும் - நல்ல, ஞானமுள்ள மற்றும் தெய்வீக முடிவுகளை எடுக்கும் திறனை ஒவ்வொரு விசுவாசிக்கும் ஆண்டவர் கொடுக்க விரும்புகிறார் என்பதை கேம்ரனும் நானும் உறுதியாக நம்புகிறோம்.
இந்த முக்கியமான திறமை பகுத்தறிவு என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது பக்குவமடைந்த விசுவாசியாக மாறுவதற்கான ஒரு முக்கியமான பகுதியாகும் (எபிரெயர் 5:14). இந்த வாரம், "பகுத்தறிய கற்றுக்கொள்வது" என்பதன் அர்த்தம் என்ன என்பதைக் குறித்து நாம் ஆராய்ந்து பார்க்க இருக்கிறோம். 😃
வேதாகமத்தில் இரண்டு வகையான பகுத்தறிவு காணப்படுகிறது:
சிலருக்கு நல்ல ஆவி எது மற்றும் பொல்லாத ஆவி எது என்று பகுத்தறியும் வரம் அளிக்கப்பட்டுள்ளது (1 கொரிந்தியர் 12:7-11)
உங்கள் மனம் புதிதாகிறதினாலே ஆண்டவருடைய சித்தத்தை பகுத்தறியும் திறன் கிடைக்கும்:
"நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.” (ரோமர் 12:2)
நாம் கிறிஸ்துவோடு நடக்கும்போது, பரிசுத்த ஆவியானவர் நம் மனதைப் புதிதாக்குவார் (எபேசியர் 4:22-23).
இந்தப் புதிதாக்கப்பட்ட மனமும், ஆண்டவருடைய சித்தத்தைப் பகுத்தறியும் திறனும் எல்லா விசுவாசிகளுக்கும் கிடைக்கும்! தீர்க்கதரிசிகள் அல்லது போதகர்கள் போன்ற குறிப்பிட்ட நபர்களால் மட்டுமே உங்கள் வாழ்க்கைக்கான ஆண்டவருடைய சித்தத்தை உங்களுக்குச் சொல்ல முடியும் என்ற எண்ணம் தவறானது.
உண்மைதான், உங்களுக்காக வேறு யாராவது முடிவு எடுப்பது பாதுகாப்பானது என்று நீங்கள் உணரலாம். ஆனால் உங்களுக்கான தேவனுடைய சித்தத்தைத் தேடுவதற்கும், அவர் உங்களை வழிநடத்த அனுமதிப்பதற்கும், பரிசுத்த ஆவியானவர் உங்களை வழிநடத்துவார் என்று விசுவாசிப்பதற்கும் ஆண்டவரைப் பிரியப்படுத்தும் அளவிலான ஒரு விசுவாசம் தேவை!
"விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்." (எபிரெயர் 11:6)
அன்பரே, நாம் சேர்ந்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம்:
“பரலோகத் தகப்பனே, உமது சித்தத்தைப் பகுத்தறியும் திறனை எனக்குக் கொடுத்ததற்கு நன்றி. நான் உலகத்தை அல்ல, உம்மைப் பின்தொடர்வதைத் தெரிந்துகொள்கிறேன், தினமும் என் மனதைப் புதிதாக்கும்படி உமது பரிசுத்த ஆவியானவரிடம் மன்றாடுகிறேன். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.”

