தைரியமாக இரு... ஆண்டவர் உன்னுடன் இருக்கிறார்!
நீ என்னைப்போல் இருப்பாயானால், ஒரு சோதனை வரும்போது, உற்சாகமாய் மேலும் கீழும் குதித்து, “நல்லது! கவலைப்படுவதற்கு இன்னும் ஒரு விஷயம் கிடைத்துவிட்டது!'' என்று நிச்சயம் சொல்ல மாட்டாய்.
நீ அப்படிச் சொல்ல மாட்டாய்! மாறாக, சோதனைகள் நமக்குள் துன்பத்தையும், மன வேதனையையும், துக்கத்தையும் உண்டாக்குகின்றன.
"இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள்; என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள்." (1 பேதுரு 1:6)
அதே சமயத்தில், சோதனைகளை நாம் வேறொரு கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்று வேதாகமம் நம்மை ஊக்குவிக்கிறது.
1 பேதுரு 1:7ஐ நாம் சேர்ந்து வாசிப்போம்: “அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.”
அன்பரே, உன் விசுவாசத்தின் பெரும் மதிப்பையும் சிறப்பையும் வெளிப்படுத்தவே சோதனைகள் உள்ளன!
ஆகவே, ஆண்டவர் உன்னைத் தண்டிக்கவோ அல்லது உனக்கு "வாழ்க்கை பாடம்" கற்பிக்கவோ சோதனையை உன் வாழ்வில் அனுமதிப்பதில்லை. அவர் ஒருபோதும் அப்படிச் செய்வதில்லை. ஆண்டவர் நல்லவர், அவர் அன்பாயிருக்கிறார். உன் மீது அவர் காட்டும் தயவுக்கு எல்லையில்லை.
அதேபோல், எல்லா நேரத்திலும், சகலமும் நன்றாக நடக்கும்போது, உன் விசுவாசம் வளராது என்பதையும் அவர் அறிவார்.
அன்பரே, உன் விசுவாசம் சோதனைக்கு உட்படுத்தப்படும்போது, அது கூர்மையாகிறது, வேரூன்றுகிறது மற்றும் அது அதிக மதிப்பைப் பெறத் தகுதியாகிறது என்பதை உனக்கு உறுதியாக்குகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நீ ஒரு கஷ்டத்திலோ, கவலையிலோ அல்லது கடுமையான வேதனையிலோ உழலும்போது, நீ ஆண்டவரை நினைத்து, அவருடைய வாக்குத்தத்தங்களை உறுதியாகப் பற்றிக்கொள்ளவும், உன் வாழ்க்கையில் அவர் கிரியை செய்யும்படி ஆர்வத்துடன் காத்திருக்கவும் வேண்டும் என்ற சூழலுக்குள் தள்ளப்படுகிறாய். அதனால் உன் பார்வை அவர் பக்கம் திரும்புகிறது, உன் விசுவாசம் வளர்ந்து நீ பெலமுள்ள நபராய் மாறுகிறாய்!
அன்பரே, நீ தற்போது ஏதேனும் சோதனையைச் சந்தித்துக் கொண்டிருக்கிறாய் என்றால், தைரியமாக இரு. நான் உனக்காக ஜெபிக்கிறேன், என் முழு இருதயத்தோடும் நான் உன்னுடன் இருக்கிறேன். குறிப்பாக, ஆண்டவர் உன்னுடன் இருக்கிறார். உன் விசுவாசத்தைக் கண்டு, அவர் கிரியை செய்வதை நீ பார்க்கப் போகிறாய்!
இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சலானது என் வாழ்க்கையில் மிகச்சிறந்த ஊக்கமாக இருந்து வருகின்றது! நான் ஒவ்வொரு நாளும் அதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்! நான் எனது வயதான கணவரைப் பராமரித்து வருகிறேன், அதோடு கூட, மே மாதம் பட்டம் பெறவிருக்கும், 17 வயது நிரம்பிய எனது பேரனையும் நான் வளர்த்து வருகிறேன். உண்மையில் சோதனைகள் என்னை மூழ்கடித்துவிட்டன, ஆனால் உங்கள் தினசரி தியானம் என்னை விரக்தியின் குழியிலிருந்து ஏறக்குறைய தினமும் தூக்கிவிட்டன! போதைப் பொருளுக்கு அடிமையாகி, தற்போது அதிலிருந்து மீண்டு வருகிற எனது மகள், நான் தினமும் இச்செய்திகளை அவளுடன் பகிர்ந்துகொள்வதை மிகவும் விரும்புகிறாள்; நான் தினமும் அவளுடன் பகிர்ந்துகொள்கிறேன்! மிக்க நன்றி! இது தினமும் இயேசுவிடமிருந்து ஒரு கடிதத்தைப் பெற்றுக்கொள்வதைப்போல இருக்கிறது!...” (சாராள்)
