அன்பரே, தேவன் உனக்கு உதவி செய்வார்!
உனக்குள் ஒரு கேள்வி, "ஏன்" என்கிற அந்த கேள்வி, உன்னை நிம்மதியை பெறவிடாமால் தடுத்துக்கொண்டிருக்கிறதா? சோதனையின் மத்தியில் நீ குழப்பமடைந்து மனமுடைந்துபோவது இயல்பானதுதான். ‘ஏன்’ என்று யோசிப்பது இயல்பானதுதான்... ஆனால் தேவனுடைய வார்த்தை என்ன சொல்கிறது என்று பார்ப்போம்:
"நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே." (வேதாகமத்தில் எரேமியா 29:11ஐப் பார்க்கவும்)
இப்படி ஒரு வாக்குறுதியை வாசிக்கும்போது, பல கேள்விகள் நம் மனதில் எழும்பலாம்... அதாவது, தேவன் சமாதானத்திற்கு ஏதுவான எண்ணங்களைக் கொண்டிருந்தால், அவை தீமைக்கு ஏதுவான எண்ணங்கள் அல்ல என்றால், ஏன் இந்த சோதனைகள் என்னை நெருக்குகின்றன? ஏன் இந்த நோய் என்னை வாட்டிவதைக்கிறது? ஏன் இந்த மரணம் நேரிட்டது? ஏன் இந்த பொருளாதாரா நெருக்கடி? ஏன் கர்த்தாவே? ஏன்? என்று பல கேள்விகள் நம் மனதில் எழும்பலாம்.
சில நோய்கள், துன்பங்கள் ஆகியவை நம் கோபத்தைத் தூண்டிவிடும் என்பது உண்மைதான். இருந்தாலும்கூட, நம் கோபத்தை நாம் தேவனிடத்தில் காட்டக்கூடாது, மாறாக கொல்லவும், திருடவும் மற்றும் அழிக்கவும் மட்டுமே வரும் பிசாசிடம்தான் காட்ட வேண்டும். ஏனெனில் இயேசு... தம்முடைய ஆடுகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும் அந்த ஜீவன் பரிபூரணப்படவும் வேண்டும் என்பதற்காகவே இவ்வுலகிற்கு வந்தார். (வேதாகமத்தில் யோவான் 10:10ஐப் பார்க்கவும்)
“நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்” என்று வேதாகமம் சொல்கிறது. (வேதாகமத்தில் சங்கீதம் 34:19ஐப் பார்க்கவும்)
மேலும், “நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார். நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்.” என்று வேதாகமத்தில் வாக்குப்பண்ணப்பட்டுள்ளது (வேதாகமத்தில் சங்கீதம் 34:17-18ஐப் பார்க்கவும்)
தேவன் உன்னை உயர்த்தப்போகிறார். உனக்கான அவருடைய திட்டங்கள் சமாதானத்திற்கு ஏதுவான திட்டங்களே தவிர தீமைக்கானவை அல்ல. அவர் உனக்கு உதவுவார் என்று வாக்குப்பண்ணியிருக்கிறார்... நெருக்கப்படுகிற நேரங்களில் அவருடைய உதவி உனக்குக் கிடைக்காமல் போய்விடாது! அவர் உன்னைக் காப்பாற்றுகிறார்! ஏசாயா 41:13ல், “உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்” என்று சொல்லப்பட்டுள்ளது.
என்னுடன் சேர்ந்து ஜெபிக்கும்படி நான் உன்னை அழைக்கிறேன்: "கர்த்தாவே, நான் ஏன் இந்த சோதனையை எதிர்கொள்கிறேன் என்று எனக்குப் புரியவில்லை, ஆனால் நான் உம்மை நம்பி உமது பலத்தை சார்ந்துகொள்ளத் தீர்மானிக்கிறேன். எனக்கு உதவி செய்ததற்கு நன்றி. உமது நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்."
