என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான் - லூக்கா 9:24

ரூத் புத்தகத்தைப் பற்றிய நமது தொடரின் கடைசி நாளுக்கு உங்களை வரவேற்கிறோம். ரூத்தின் கதை நியாயாதிபதிகளின் காலத்தில் நடந்த ஒன்று, இந்தக் காலகட்டம் இஸ்ரவேல் மக்களின் வரலாற்றில் அநீதி, அடக்குமுறை, விக்கிரக வழிபாடு, சீர்கேடு மற்றும் பொல்லப்பு ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது. (நியாயாதிபதிகள் 2) இது இன்றைய உலகத்தைப் போன்றது, இங்கு மத ரீதியிலான ஒடுக்குமுறை அதிகரித்து வந்தது, ஒழுக்கக்கேடு எல்லா நேரத்திலும் உச்ச கட்டத்தில் இருந்தது, உண்மையான விசுவாசத்தைக் காண்பது என்பது ஒரு அரிய விஷயமாக காணப்பட்டது. ரூத்தின் கதை, இருண்ட உலகில் ஒரு சிறிய ஒளிக்கதிராக திகழ்கிறது. மாமியார் மீதான அவளது விசுவாசமும் அவளது தியாகமான அன்பும் ரூத்தை ஒரு நேர்மையான பெண்ணாக தனித்து நிற்க வைக்கிறது. போவாஸ் அவளிடத்தில் காணப்பட்ட இந்த விஷயத்தை கவனித்து இவ்வாறு கூறுகிறார்: "மகளே, நீ கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவாயாக; நீ தரித்திரரும் ஐசுவரியவான்களுமான வாலிபர்களின் பிறகே போகாததினால், உன் முந்தின நற்குணத்தைப்பார்க்கிலும் உன் பிந்தின நற்குணம் உத்தமமாயிருக்கிறது." (ரூத் 3:10)
ரூத் வாலிபர்களைப் பின்தொடர்ந்துபோயிருக்கலாம், ஆனால் அவள் அவ்வாறு செய்யவில்லை. அவள் ஆண்டவருக்கும் அவளுடைய மாமியார் நகோமிக்கும் கீழ்ப்படிவதைத் தேர்ந்தெடுத்தாள், மேலும் அவளுடைய உத்தம குணத்துக்கு ஆண்டவர் ஒரு மகத்தான சந்ததியைக் கொடுத்தார். "வாலிபர்கள்" என்பது சில சமயங்களில், நம் வாழ்க்கையில் நாம் பின்தொடர ஆசைப்படும் மாம்சீகமான, விரும்பத்தக்க விஷயங்களைக் குறிக்கிறது. புகழ், செல்வம், தொழில் அல்லது உறவுகளை நாடித் தேட வேண்டும் என்று நம் உலகம் நம்மை ஊக்குவிக்கிறது. அவை மோசமான விஷயங்கள் அல்ல, ஆனால் ஆண்டவருக்குக் கீழ்ப்படிந்து வாழும் வாழ்க்கையை விட அதிகமாக நாம் அவற்றை விரும்பினால் அவை மோசமானவையாக மாறிவிடக்கூடும். சில சமயங்களில், உத்தமத்தோடு வாழ்வதும், ஆண்டவருடைய சித்தத்தைப் பின்பற்றுவதும், அவருடைய சித்தத்தைப் பின்பற்றும்படி, நம்முடைய சொந்த ஆசைகளை விட்டுவிடுவதைக் குறிக்கிறது. "பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன். தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்." (லூக்கா 9:23-24)
அன்பரே, உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கைவிட வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிற, தேவையற்ற ஆசைகள் ஏதேனும் இருந்தால், அவற்றைக் கைவிட உங்களுக்கு உதவுமாறு இன்று ஆண்டவரிடத்தில் கேளுங்கள். ஜெபத்தில் அவற்றை அவருடைய கரங்களில் வைத்துவிட்டு, அதற்குப் பதிலாக கீழ்ப்படிதலுடன் வாழ உங்களுக்கு பலத்தை வழங்குமாறு அவரிடம் கேளுங்கள்.

