அன்பரே, நீங்கள் தன்னிச்சையாக செயல்படுகிறீர்களா?
சுதந்திரமாக இருக்க வேண்டும், மற்றும் உங்களைத் தவிர வேறு யாரையும் நம்பாமல், உங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற எண்ணத்தினால், அதிக பாரத்தை நீங்கள் உணர்கிறீர்களா? தன்னம்பிக்கையுடன் இருத்தல் என்பது நம் சமூகத்தில் கொண்டாடப்படுகிறது; ஆனால் அது ஆண்டவர் உங்களுக்காக வைத்திருக்கும் தெய்வீக வடிவமைப்பு அல்ல. யோவான் 15:5-6 வசனங்களில் இயேசு இவ்வாறு அறிவிக்கிறார்: “நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்துபோவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோகும்." முதல் பார்வையில், அதன் கிளைகள் நெருப்பில் எறியப்படும் என்று வாசிக்கும்போது, இந்த வசனம் நம்மை பயமுறுத்துவதாகத் தெரிகிறது. ஆனால் இயேசு இதைச் சொன்னபோது, தம்முடைய சீஷர்களை பயமுறுத்துவதற்காக இதைச் சொல்லவில்லை; உண்மையில், அவர் அவர்களை கவனித்துக்கொள்வதாக அவர்களுக்கு ஒரு ஆழமான வாக்குத்தத்தத்தை அளித்தார். ஒரு திராட்சைச்செடியானது ஒரு கிளைக்கு ஆதரவு மற்றும் வாழ்வாதாரத்தை வழங்குகிறது. ஒரு கிளையால் தனக்குத் தானே உணவளித்துக்கொள்ளவோ தனக்குத்தானே வளரவோ முடியாது; அது முற்றிலும் திராட்சைச்செடியைச் சார்ந்துதான் இருக்க வேண்டும். கிளை செய்ய வேண்டியதெல்லாம், திராட்சைச்செடி தனக்கு வழங்கும் அனைத்தையும் பெற்றுக்கொள்வதுதான். திராட்சைச்செடியிலிருந்து ஒரு கிளையைத் துண்டிக்க, குறிப்பாக அது ஆரோக்கியமான கிளையாக இருந்தால் நல்ல பலம் தேவைப்படும். ‘என்னில் நிலைத்திருங்கள்’ என்று இயேசு சொன்னபோது, என்னிடமிருந்து உங்களைத் துண்டித்துக்கொள்ளாமல் இருங்கள் என்பதை அவர் அர்த்தப்படுத்தினார். அன்பரே, ஒரு கிளை அதன் செடியைச் சார்ந்திருப்பதுபோல, நீங்கள் ஆண்டவரைச் சார்ந்திருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். நீங்கள் தொடர்ந்து இணைந்திருப்பதைத் தெரிந்துகொண்டால், அவர் உங்களைப் போஷிப்பதாகவும், கவனித்துக்கொள்வதாகவும், உங்களைப் பராமரிப்பதாகவும் வாக்குப்பண்ணுகிறார். நான் உங்களுக்காக ஜெபிக்கிறேன்: "ஆண்டவரே, அன்பரே இன்று உம்மைச் சார்ந்திருப்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். அன்பரே உமது பிரசன்னத்தினால் போஷிக்கப்பட்டு, அன்பும், பலமும் பெற்று, உமக்கு அருகில் நெருங்கி வர உதவி செய்வீராக."
