நான் ஆயிரக்கணக்கான முறை சொல்லி இருக்கிறேன்!
நீங்கள் பேசுகிறீர்கள் ஆனால் உங்கள் வார்த்தைகளுக்கு எந்தப் பலனும் இல்லை என்பதுபோல் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? குறிப்பாக, பெற்றோர்கள் இப்படிப்பட்ட ஏமாற்றத்தை உணர்கிறார்கள். "கத்தாதே", "உன் தம்பி/தங்கையை அடிக்காதே" அல்லது "உன் பொம்மைகளைக் கொடுத்து விளையாடு" போன்ற விஷயங்களை உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் நூற்றுக்கணக்கான முறை திரும்பத் திரும்ப சொல்லியிருக்கலாம், ஆனாலும் அவர்கள் அவற்றை நினைவில் வைத்துக்கொள்வதில்லை. நாம் சொன்னது அவர்களுக்குள் உடனடி விளைவை ஏற்படுத்தினால் நன்றாக இருக்கும், அல்லவா? ஆண்டவருடைய வார்த்தை அப்படி உடனடி விளைவை ஏற்படுத்துகிறது! ஆண்டவர் பேசும்போது, அந்த வார்த்தைகள் ஒருபோதும் பலனற்றதாய் போகாது: “அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்." (ஏசாயா 55:11) அவர் பேசும்போது, காரியங்கள் நடக்கிறது! அவருடைய சத்தத்தால், இந்தப் பிரபஞ்சம் உருவானது! இந்தப் பாடலின் வரிகள் விவரிப்பது போலவே ஆண்டவருடைய வல்லமை மகாபெரியது. ஆண்டவரின் வார்த்தையை விட வல்லமை வாய்ந்தது எதுவும் இல்லை! ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. (யோவான் 1:1) ஆண்டவருடைய வார்த்தை வல்லமை வாய்ந்தது, ஏனென்றால் அது:
- இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. (எபிரெயர் 4:12)
- உங்கள் இதயத்தையும் ஆத்துமாவையும் போஷிக்கிறது (மத்தேயு 4:4)
- பாதைக்கு வெளிச்சம் தருகிறது (சங்கீதம் 119:105)
- சத்தியத்தால் உங்களைப் பரிசுத்தப்படுத்துகிறது (யோவான் 17:17)
- அது நித்தியமானது (மத்தேயு 24:35)
ஆண்டவர் ஜீவனுள்ளதும் வல்லமையுள்ளதுமான தமது வார்த்தையை உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். இது இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாய் இருக்கிறது. (எபிரெயர் 4:12). நீங்கள் ஒரு இக்கட்டான நிலையில் இருக்கும்போது, அல்லது கடினமான காலகட்டத்தின் வழியாகக் கடந்துசெல்லும்போது, ஆண்டவருடைய வார்த்தையைப் பயன்படுத்துங்கள் - அது வல்லமை வாய்ந்தது. இது உலகப்பிரகாரமான ஆயுதம் அல்ல, இது ஒரு ஆவிக்குரிய ஆயுதம்! (2 கொரிந்தியர் 10:4) அன்பரே, என்னுடன் ஜெபிக்க உங்களை அழைக்கிறேன்… “பரலோகத் தகப்பனே, உமது வார்த்தைக்காகவும், எந்த நேரத்திலும் அதைப் பயன்படுத்த நீர் எனக்கு சிலாக்கியம் அளித்திருக்கிறீர் என்பதை இன்று எனக்கு நினைவூட்டியதற்காகவும் நன்றி! எல்லாவற்றிற்கும் மேலான வல்லமை வாய்ந்த ஆயுதத்தை எனக்கு வழங்கியதற்கு நன்றி. இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்."
