ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள் – எபேசியர் 4:32

ஒரு இடத்துக்குத் தாமதமாகச் செல்வது கேம்ரனுக்குப் பிடிக்காது; இந்தியர்கள் எப்போதும் தாமதமாக வருவார்கள் என்ற வழக்கக் கருத்துக்கு அவர் விதிவிலக்கானவர். அந்த விதத்தில் உண்மையிலேயே அவரை விட நான்தான் ஒரு இந்தியப் பெண்மணி. 🤭 எங்கள் திருமண வாழ்க்கையின் ஆரம்பத்தில், இந்த முரண்பாடு எங்களுக்கிடையே ஏராளமான வாக்குவாதங்களுக்கு வழிவகுத்தது. அதன்பிறகு நான் அதிக அளவில் முன்னேறியுள்ளேன், ஆனாலும் எனது நேரத்தை நான் சரியாக கையாளாமல் இருந்ததை கேம்ரன் எண்ணற்ற முறை மன்னிக்க வேண்டியிருந்தது. அன்பரே, ஒரே விஷயத்திற்காக நீங்கள் எப்போதாவது ஒருவரை மீண்டும் மீண்டும் மன்னிக்க வேண்டியிருந்திருக்கிறதா? நீங்கள் திருமணமான நபராக இருந்தால் அல்லது உங்களுக்குக் குழந்தைகள் இருந்தால், நான் என்ன சொல்கிறேன் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். 😉 பேதுரு இயேசுவிடம் இந்தக் கேள்வியைக் கேட்டபோது, அவர் மன்னிப்பு பற்றிய ஒரு சுவாரஸ்யமான கணித சூத்திரத்தைக் கொடுத்தார்: “அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்துவந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான். அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்" என்றார். (மத்தேயு 18:21-22) இந்த வாரம் "ஆண்டவருடைய கணக்கு" பற்றி பார்க்க இருக்கிறோம் - மனித புரிந்துகொள்ளுதலுக்கு சவால் விடும் கருத்துக்களுக்கு இது ஒரு சிறந்த உதாரணம். உண்மையிலேயே, ஒரே நபர் உங்களை 70 x 7 = 490 முறை புண்படுத்துவதற்கான சாத்தியங்கள் உண்டா? இருப்பினும், கேம்ரனை காத்திருக்க வைத்த விஷயத்தில், நான் கிட்டத்தட்ட அத்தனை முறை எட்டிவிட்டேன். 🙈 சில மொழிபெயர்ப்புகள் எழுபத்தேழு முறை என்று கூறுகின்றன. ஆனாலும் கூட, அதுவும் எண்ணிக்கையில் அதிக மன்னிப்புதான். ஒவ்வொருவருக்கும் எத்தனை முறை நாம் மன்னிக்கிறோம் என்ற துல்லியமான கணக்கை நாம் வைத்திருக்க வேண்டும் என்று இயேசு சொல்லவில்லை. மன்னிக்கும் மனப்பான்மையைத் தழுவிக்கொள்வதையே அவர் இங்கு நமக்குக் கற்பிக்கிறார். நாம் எத்தனை முறை தவறு செய்தாலும் இயேசு நம் பாவங்களை மீண்டும் மீண்டும் மன்னிக்கிறார். அதேபோல், மற்றவர்களை மன்னிக்கும் பழக்கத்தை நாமும் வளர்த்துக்கொள்ள வேண்டும். “சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது. ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்." (எபேசியர் 4:31-32) அன்பரே, இன்று நீங்கள் மன்னிக்க வேண்டிய நபர்கள் யாராவது இருக்கிறார்களா?

