வெளியீட்டு தேதி 26 ஜூன் 2024

நான் ஏற்கனவே பெற்றுக்கொண்டவைகளுக்காக நன்றி!

வெளியீட்டு தேதி 26 ஜூன் 2024

“குடிசையில் இருந்து கோபுரத்திற்கு” என்ற ஒரு கதை உள்ளது. இன்று உன்னோடு அதைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்... அதைக் குறித்து தியானிக்க உன்னை அழைக்கிறேன்!

ஒரு நாள், மிகவும் செல்வந்தரான தந்தை ஒருவர் தனது மகனை ஏழை மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதைக் காட்டுவதற்காக நாட்டிற்குள் அழைத்துச் சென்றார். அவர்கள் பல நாட்கள் அங்கே ஒரு தோட்டத்தில் உள்ள வீட்டில் அவர்களுக்கு  அதிகம் கொடுத்து உதவ இயலாத ஒரு குடும்பத்துடன் தங்கியிருந்தார்கள்.

பின்பு அவர்கள் வீடு திரும்பியதும், தந்தை மகனிடம் கேட்டார்:

"உனக்குப் பயணம் பிடித்திருந்ததா?"

"ஆமாம், மிகவும் நன்றாக இருந்தது அப்பா!"

 "ஏழைகள் எப்படி வாழ்கிறார்கள் என்று பார்த்தாயா?"

 "ஆம்!"  மகன் பதிலளித்தான்.

"அப்படியானால், பயணத்திலிருந்து நீ என்ன கற்றுக்கொண்டாய்?"

மகன் பதிலளித்தான், “நம்மிடம் ஒரு நாய் இருக்கிறது, அவர்களுக்கு நான்கு நாய்கள் இருந்தன. நமக்கு ஒரு குளம் உள்ளது, அது நமது தோட்டத்தின் நடுப்பகுதியில் முடிவடைகிறது, அவர்கள் நீந்துவதற்கு ஒரு சிற்றோடை உள்ளது, அதற்கு முடிவே இல்லை. நமது தோட்டத்தில் விளக்குகள் உள்ளன, அவர்களுக்கு இரவில் நட்சத்திரங்கள் உள்ளன. நமது வாசல் முன் முற்றத்தில் முடிவடைகிறது, மேலும் அவர்களது முற்றம் முழு அடிவானத்தையும் கொண்டுள்ளன. நாம் வாழ ஒரு சிறிய நிலம் உள்ளது, அவர்களுக்கு நமது பார்வைக்கு எட்டும் தூரம் வயல் நிலங்கள் உள்ளன. நமக்கு சேவை செய்யும் வேலைக்காரர்கள் உள்ளனர், ஆனால் அவர்கள் மற்றவர்களுக்கு சேவை செய்கிறார்கள். நாம் நமது உணவை வாங்குகிறோம், ஆனால் அவர்கள் தங்கள் உணவை சாகுபடி செய்கிறார்கள். நம்மைக் காக்க நமது சொத்துகளைச் சுற்றி சுவர்கள் உள்ளன; அவர்களைப் பாதுகாக்க அவர்களுக்கு நண்பர்கள் உள்ளனர்.”

சிறுவனின் தந்தை பேச்சற்றுப்போனார்.

மகன் மேலும் கூறினான்: "அப்பா, உண்மையில் பணக்காரர் என்றால் என்ன என்பதைக் காட்டியதற்கு மிகவும் நன்றி."

ஒருவருக்கு மதிப்பில்லாததாகத் தோன்றுவது மற்றொருவருக்குப் பொக்கிஷமாக இருக்கிறது! இது அனைத்தும் நமது பார்வையை அடிப்படையாகக் கொண்டது.

அன்பரே, உனக்கு உண்மையிலேயே ஐசுவரியமாகத் தோன்றுவது எது? பொருட்கள், வஸ்துக்கள், உடைமைகள் போன்றவைகளா... அல்லது ஆண்டவருடனான உறவு, சமாதானம், மற்றவர்களுடன் நீ பேணும் நட்பு போன்றவைகளா?

ஒப்பிட்டுப் பார்ப்பது போதும் என்ற மனத்தை நாசம்பண்ணிவிடுகிறது. பெரும்பாலும், நாம் உண்மையான பொக்கிஷங்களை மறந்துவிடுகிறோம், அதற்குப் பதிலாக நம்மிடம் இல்லாததைப் பற்றியும், நாம் வைத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறவைகளைப் பற்றியும் கவலைப்படுகிறோம்.

வேதாகமம் சொல்கிறது, “போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம். உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்."  (1 தீமோத்தேயு 6:6-8)

மனநிறைவும் நன்றியுணர்வும் தேவ ராஜ்யத்தில் இரண்டு அடிப்படைக் கொள்கைகள், அவை ஒவ்வொரு நாளும் நாம் வாழ்வதற்கு மிகவும் முக்கியமானவை! ஆண்டவர் நம் தேவைகளை நிறைவேற்ற விரும்புகிறார் என்றாலும் கூட, இன்று நம்மிடம் இருப்பதை வைத்து திருப்தியடைய நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும்.

அன்பரே, ஆண்டவர் உனக்கு ஏற்கனவே வழங்கியிருக்கும் எல்லாவற்றிற்காகவும் நன்றியுடன் இருக்க உன்னை ஊக்குவிக்கிறேன். "தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி" என்ற வசனத்தை  நினைவில் வைத்துக்கொள். (2 பேதுரு 1:3)

Eric Célérier
எழுத்தாளர்