நீ எல்லாவற்றையும் கைவிட்டுவிட விரும்புகிறாயா?
சில நேரங்களில் நம் வாழ்வில் மிகவும் பயமுறுத்தும் சம்பவங்கள் அல்லது கடந்துசெல்ல முடியாத சூழ்நிலைகள் வரலாம்.
நீ எப்படி என்று எனக்குத் தெரியாது, ஆனால் ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சலை வாசிக்கும் அநேக வாசகர்கள், தங்கள் வாழ்வில் சிரமங்களை எதிர்கொள்ளும்போதும், பயத்தை ஏற்படுத்தும் சூழ்நிலையிலும், பெரும்பாலும் ஆண்டவரை நம்புவது கடினமாக இருக்கிறது என்று கூறுகின்றனர்.
மின்னஞ்சல் வாசகர்கள் என்னுடன் பகிர்ந்துகொண்ட சில கருத்துக்களை இங்கே நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்: “நான் கஷ்டங்களை எதிர்கொள்ளும்போது, என் வாழ்க்கையின் மீதான கட்டுப்பாட்டை ஆண்டவருக்குக் கொடுப்பதும், அவரை நம்புவதும் மற்றும் கவலைப்படாமல் இருப்பதும் எனக்குக் கடினமாக இருக்கிறது”, “வேலையில்லா சூழ்நிலைகளில் அல்லது தனிமையில் இருப்பது போன்ற கடினமான காலங்களைக் கடக்கும்போது, சமாதானத்துடனும் நம்பிக்கையுடனும் இருப்பது எனக்கு மிகவும் கடினமாக இருக்கிறது."
இப்படிப்பட்ட சூழ்நிலைகள் ஏற்படும்போது, நாம் என்ன செய்ய வேண்டும்? இது போன்ற சவால்களை எதிர்கொள்ளும்போது, நாம் அந்தச் சூழ்நிலைக்குத் தப்பி ஓட விரும்பலாம் அல்லது முன்னோக்கி அடியெடுத்துவைப்பதை நிறுத்திவிடக் கூடும், விசுவாசத்தை இழந்துவிடக் கூடும். ஆனால் நற்செய்தி என்னவென்றால் (ஆம், நற்செய்தி ஒன்று உள்ளது!) இயேசு ஒருபோதும் நம்மை விட்டு விலக மாட்டார் என்று வாக்களித்திருக்கிறார். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும்... அவர் எப்பொழுதும் நம்முடன் இருக்கிறார்.
வார்த்தையாக இருந்து மாம்சமாக உருவெடுத்த இயேசு, உனக்கு ஆலோசனை வழங்கி உன்னை ஆதரிப்பார்! வேதாகமத்தை வாசிப்பதன் மூலம், உன் விசுவாசத்தை வளர்க்கும், ஊட்டமளிக்கும் மற்றும் பலப்படுத்தும் வசனங்களால் நீ உன்னைத் திருப்தியாக்குகிறாய். சந்தேகம் மற்றும் பயத்தைவிட்டு உன் கண்களைத் திருப்பி, உனக்குத் தேவையான விசுவாசத்தைப் பெற்றுக்கொள்ளும்படி அவருடைய வார்த்தைக்குச் செவிகொடுக்கும்படி உன் இருதயத்தைத் திற.
நம் வாழ்வின் இந்தப் புயல்கள் மற்றும் பாலைவனங்களைக் கடந்து செல்வதற்கு, சோதிக்கப்பட்டதும், பரீட்சிக்கப்பட்டதும் மற்றும் நிரூபிக்கப்பட்டதுமான விசுவாசம் தேவையாய் இருக்கிறது. ரோமர் 10:17-ல் வேதாகமம் கூறுவதுபோல், நீ ஆண்டவருடைய வார்த்தைக்குச் செவிகொடுக்கும்போது, இப்படிப்பட்ட விசுவாசம் வளர்கிறது: "ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்."
விசுவாசம் மற்றும் ஆண்டவருடைய வார்த்தையைக் குறித்த அறிவு ஆகிய இரண்டும் பிரிக்க முடியாதவை. வேதாகமத்தை மீண்டும் மீண்டும் வாசிக்கும்படி உன்னை அழைக்கிறேன். உன் தினசரி வழக்கத்தில் இதையும் சேர்த்துக்கொள். தூக்கமும் சுவாசமும் எவ்வளவு அவசியமோ தேவ வார்த்தையை வாசிப்பதும் ஜெபிப்பதும் அவ்வளவு அவசியம்! ஒவ்வொரு நாளும் உன் விசுவாசத்தையும் உன் இருதயத்தையும் பலப்படுத்தும்படி நான் ஆண்டவரை நோக்கி ஜெபிக்கிறேன்!
