நீ பொறுமையிழந்து கோபப்படும்போது என்ன செய்ய வேண்டும்?
இன்று, என்னுடன் ஒரு கணம் கற்பனை செய்து பார்... நீ ஒரு நெடுஞ்சாலையில் பயணம் செய்துகொண்டிருக்கிறாய், சாலை மிகவும் விசாலமாகவும் அதிக வாகனங்கள் இல்லாமலும் காணப்படுகிறது, வானின் வெப்பநிலை இதமாக இருக்கிறது. உனக்குப் பிடித்த பாடகரின் பாடல் வாகனத்தில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. சுருக்கமாகச் சொல்வதானால், உனது வாழ்க்கைப் பயணம் அற்புதமாகச் சென்றுகொண்டிருக்கிறது. திடீரென்று, ஒருவர் அவரது வாகன வேகத்தை அதிகரித்து உனக்கு மிகவும் அருகில் வந்து உன்னை முந்திச் செல்கிறார். இதை நீ எப்படி அணுகுவாய்?
- உடனடியாக அவரை மன்னித்துவிடுவாயா?
- நீ குறை கூறிவிட்டு, விரைவாக அங்கிருந்து சென்றுவிடுவாயா?
- பொறுமையை இழப்பாயா? உனக்குள் பலவித எண்ணங்கள் ஓடி, அந்த ஓட்டுனருக்குப் பின் சென்று அவரைத் துரத்திப் பிடிக்க என்ன செய்யலாம் என்று நீ தீவிரமாக சிந்திப்பாயா? ஒலி எழுப்பவும், முந்திச் சென்ற காரைப் பின்தொடர்ந்து அவரது காரை விரைவாய் முந்தவும் நினைப்பாயா? இப்படி செய்வதால், நீ சென்றடைய வேண்டிய இடம் வரும்வரை அதையே நினைத்துக்கொண்டு இருப்பாய். பின் அடுத்த நாளும், அதற்கு அடுத்த நாளும் இதைப் பற்றிய சிந்தனை உன் நினைவில் ஓடிக்கொண்டே இருக்கும்.
நான் ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லவேண்டும். கோபம் ஒரு திருடன். உனது சமாதானத்தையும் சந்தோஷத்தையும் நேரத்தையும் அந்தத் திருடன் திருடிவிடுவான். உனக்கு ஒரே ஒரு வாழ்க்கை தான் இருக்கிறது. அந்த நேரத்தை நீ வீணடிக்கத் தேவையில்லை. வேதாகமம் சொல்கிறது, “... நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது; பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்.” (எபேசியர் 4:26-27)
ஒருவேளை நீ என்னிடம், “எரிக், என்னால் அப்படிக் கோபப்படாமல் இருக்க முடியாது. நான் ஒன்றும் ஆண்டவர் இல்லை. கோபத்தில் நான் என் பொறுமையை இழந்துவிடுகிறேன், என்னால் அதை சமாளிக்க முடியாது!” என்று சொல்லலாம்.
உண்மைதான்... ஆண்டவருடைய உதவி இல்லாமல், கோபத்தைக் கையாள்வது மிகவும் கடினம்தான். ஆனால் அவரால் எல்லாம் கூடும்! அவருடைய ஆவி மீண்டும் ஒருமுறை உன் வாழ்வில் சமாதானத்தை உணர உனக்கு உதவும். எனவே, பொறுமையிழந்துவிட்டதாக நீ உணரும்போது, உன் உணர்ச்சிகளை ஆண்டவர் மீது வைத்துவிட்டு அவருடைய சமாதானத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சி செய்..
அன்பரே, கிறிஸ்துவுக்குள் ஆசீர்வதமாய் இரு!
இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “2016ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நான் என் அம்மாவை இழந்தபோது, என்னால் மீண்டும் எழ முடியாது என்று நினைத்தேன். ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சல் மூலம் நான் பெற்றுக்கொண்ட ஊக்கமே, ஆண்டவரை எப்படி நம்புவது என்பதை எனக்குக் காண்பித்தது. என் அம்மாவை சீக்கிரமாக இப்பூமியிலிருந்து அழைத்துச் சென்றதை எண்ணி நான் சோகத்திலும் ஆண்டவர் மீது சற்றே கோபத்திலும் இருந்தேன். அதற்கு முன்பு எனது வீட்டில் நடைபெற்ற திருச்சபையில் நான் எப்போதும் உற்சாகமாய் செயல்பட்டு வந்தேன். என் அம்மாவின் பிரிவிற்குப் பின்போ, கொஞ்ச நாட்களாக நான் ஜெபிக்கவில்லை, வேதாகமம் வாசிக்கவில்லை, அல்லது திருச்சபைக்குச் செல்ல ஆர்வமின்றி இருந்தேன். ஆனால், இப்போது நான் முன்பைவிட அதிக ஆர்வமாக காரியங்களைச் செய்கிறேன். ஏற்ற சமயத்தில் எனக்கு உதவியதற்கு நன்றி.” (கிறிஸ்)
