அன்பரே, நீ மிகவும் அழகானவன்/ அழகானவள்!
இரண்டு கரும்புள்ளி வண்டுகளுக்கு இடையிலான வித்தியாசத்தை உன்னால் சொல்ல முடியுமா? ஒருவேளை உன்னால் சொல்ல முடியாமல் போகலாம். ஆனாலும், அவைகள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருக்கும். அவற்றின் நிறம், அளவு ஆகியவை மாறுபடும், அவற்றில் உள்ள புள்ளிகளின் எண்ணிக்கை, அவற்றின் இறக்கைகளில் 2 முதல் 22 வரை இருக்கும்! ஒவ்வொன்றும் அதன் தனித்துவமான அம்சங்களைக் கொண்டிருக்கும்; அதன் நோக்கம், அதன் பங்கு ஆகியவை ஒவ்வொன்றுக்கும் தனித்துவமானது. ஒவ்வொன்றுக்கும் இருக்கும் அந்த சிறிய விவரமே, அதைத் தனித்துவமாக்குகிறது. மனிதர்களாகிய நாம் நமது முதல் பார்வையில் அதை உணரவில்லை. ஏன் அப்படி உணரவில்லை? ஏனென்றால் நாம் அவற்றைப் படைக்கவில்லை. ஆனால் ஆண்டவர் அப்படியில்லை, அவரே எல்லாவற்றையும் படைத்தார், அவருடைய வார்த்தையினால் அவர் சகலத்தையும் சிருஷ்டித்தார். உன்னையும் அவரே சிருஷ்டித்தார். “நீர் என் உள்ளிந்திரியங்களைக் கைக்கொண்டிருக்கிறீர்; என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர்" என்று வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ளது. (சங்கீதம் 139:13)
அன்பரே, நீ இந்த அழகான கரும்புள்ளி வண்டு போன்ற நபர். முதல் பார்வையில், உன்னை யாரென்று அறியாதவர்களுக்கு, உன்னை மிகவும் சிறப்பான நபராக மாற்றுவது எது என்று தெரியாது. சில நேரங்களில், நீ கூட அதில் கவனம் செலுத்தியதில்லை. ஆனால் ஆண்டவர் மிகவும் கவனமாக உன்னை வடிவமைக்கத் தீர்மானித்தார்:
- உன் உயரம், உன் சரீர கட்டமைப்பு
- உன் முடியின் நிறம், உன் கண்கள், உன் தோல்
- உன் கைகளின் வடிவம், உன் கால்களின் வடிவம்
இவற்றை வடிவமைப்பதில் அவர் துளியளவும் தவறு செய்யவில்லை.
ஒருவேளை நீ இதை மறந்துவிட்டு, உன் சரீரத் தோற்றத்தில் திருப்தி அடையாமல் இருக்கலாம். நீ ஒருசில அங்குலங்கள் உயரமாகவோ, அதிக குண்டாகவோ, சப்பையான மூக்கு கொண்ட நபராகவோ அல்லது முடி உதிர்ந்து வழுக்கையாகவோ இருக்கலாம்! அல்லது வேறு ஏதாவது குறையுள்ள நபராக இருக்கலாம்!
நீ உன்னைக் கண்ணாடியில் பார்ப்பதை விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி, நீ ஆண்டவருடைய தலைசிறந்த படைப்பாக இருக்கிறாய்! அன்பரே, இந்த உண்மையை உன் முழு பலத்துடன் ஏற்றுக்கொண்டு விசுவாசி. ‘நீ ஒன்றுக்கும் உதவாத நபர்,’ ‘நீ இல்லாமல் உலகம் சிறப்பாக இருக்கும்’ என்று உன் காதில் திரும்பத் திரும்பச் சொல்ல விரும்பும் உன் எதிரியின் பொய்கள் உன்னைத் தாக்க இடமளிக்காதே. அது முற்றிலும் பொய்! எப்போதும் உன்னை நீ ஏற்றுக்கொள், ஏனென்றால் உன்னைப் படைத்தவர் ஆண்டவர்.
என்னுடன் சேர்ந்து ஜெபிக்கும்படி உன்னை அழைக்கிறேன், “ஆண்டவரே, நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன். சில சமயங்களில், நான் இருக்கிற வண்ணமே என்னை நான் ஏற்றுக்கொள்வதில் சிக்கல் இருப்பதை நீர் காண்கிறீர். நான் இருக்கிற வண்ணமாகவே, நான் என்னை நேசிக்கவும், உமது கண்களால் என்னைப் பார்க்கவும் எனக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்! இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்."
இந்த நாள் உனக்கு ஒரு அழகான நாளாக அமைவதாக!
