அன்பரே, நீ அக்கினியின் ஊடாய் நடக்கிறாயா? 🔥
நீ இப்போது எத்தகைய துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறாய், அல்லது உண்மையில் உனக்கு தற்போது என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இன்று நான் உன்னை ஊக்குவிக்க விரும்புகிறேன். நீ எந்த சோதனையைச் சந்தித்தாலும் சரி, உறுதியாக இரு, அன்பரே, ஏனென்றால் உன் வாழ்வின் சம்பவம் ஒவ்வொன்றும் மதிப்புக்குரியது.
சோதனை மிகவும் மோசமானதாகவோ அல்லது கடினமானதாகவோ இருந்தாலும் பரவாயில்லை. சில சமயங்களில் நீ அக்கினியின் ஊடாய் கடந்து செல்வதைப்போல் உணரலாம், இந்த சத்தியம் இதைத்தான் உனக்குச் சொல்கிறது : ஒருநாள் உனது சோதனைகள் உன் வாழ்வில் மிக அழகான சாட்சிகளாக மாறும்.
எத்தனையோ ஜீவிய சரிதைகள் இதற்கு சாட்சியாய் திகழ்கின்றன! ஜாய்ஸ் மேயரின் வாழ்வை சிந்தித்துப் பார்: தன் இளம் வயதில் தன் தந்தையால் பாலியல் ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், வாய்மொழியாகவும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டபோதிலும், இன்று உலகப் புகழ்பெற்ற ஆசிரியையாகவும் ஊக்குவிப்பவராகவும் அவர் மாறியுள்ளார்!
நிக் வுயிசிக் என்பவரும் அப்படித்தான்: கை கால்கள் இன்றி ஊனமுற்ற நபராகப் பிறந்து, தனிமையில், தன் சிறுவயதில் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் வாழ்ந்த இவர், லட்சக்கணக்கான மக்களைச் சென்றடையும் அன்பான தந்தையாகவும், அவரது மனைவிக்கு நல்ல கணவனாகவும் மாறிவிட்டார்!
வேதாகமத்தில், அனாதையாக இருந்து, நாடு கடத்தப்பட்ட எஸ்தரின் கதையையும் நாம் வாசிக்கலாம், அவள் ராணியாகி, சகல யூத மக்களையும் காப்பாற்ற ஆண்டவரால் பயன்படுத்தப்பட்ட ஒரு வல்லமை வாய்ந்த பாத்திரமாகத் திகழ்ந்தாள். (எஸ்தரின் கதையை வாசிக்கவும்)
எனவே, இந்த அக்கினிச் சோதனை உன்னை சுட்டெரித்துவிடாது, மாறாக ஆண்டவர் உனக்காக வைத்திருக்கும் திட்டத்திற்காக உன்னைச் சுத்திகரிக்க உதவும் என்பதை நான் இன்று உனக்குச் சொல்ல விரும்புகிறேன். நீ ஒடுக்கப்படவில்லை. நீ ஆயத்தமாக்கப்படுகிறாய்! "நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜூவாலை உன்பேரில் பற்றாது" என்று வேதாகமத்தில் நாம் வாசிக்கிறபடி ஆண்டவர் உன்னைக் காப்பாற்றுவார். (ஏசாயா 43:2)
உண்மைதான்... நாம் ஆண்டவரை நம்பி, எல்லாவற்றையும் அவரிடம் ஒப்படைத்துவிட்டு, நிபந்தனையின்றி அவரை நம்பும்போது, நம்மை நொறுக்கக் கூடிய அனைத்தும் நமது பலமாக மாறுகிறது; அப்போது நமது வாழ்வு மிக அழகான வரலாறாக, ஆண்டவரின் மகிமைக்கான மிகப்பெரிய சாட்சியாக மாறும்.
"சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர்" என்ற அற்புதமான இந்த வசனத்தைத் தியானித்துப் பயிற்சி செய்ய நான் உன்னை அழைக்கிறேன். (சங்கீதம் 9:9)
ஆண்டவரை உன் வாழ்வில் முதன்மையாக்கிக்கொள், அவர் உன் கோட்டையாக இருக்கட்டும், அன்பரே, தைரியமாக இரு. இந்தச் சோதனை என்றென்றும் நிலைத்திருக்காது. அதிலிருந்து ஆண்டவரது மகிமையும் அற்புதம் செய்யும் வல்லமையை அளிக்கும் மகிமையான சாட்சியும் வெளிவரும்!
