நன்மையான எந்த ஈவும் பரத்திலிருந்து உண்டாகி ... இறங்கி வருகிறது – யாக்கோபு 1:17

"பெண் கணக்கு" என்ற வார்த்தையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது சமூக ஊடகங்களில் டிரெண்டிங்கில் உள்ளது, அங்கு பெண்கள் தாங்கள் வேகமாக செலவு செய்வதை நகைச்சுவையாக நியாயப்படுத்துகிறார்கள். உதாரணமாக, தள்ளுபடி விற்பனையில் ஒரு பொருளை வாங்கும்பொழுது, நீங்கள் பணத்தை மிச்சப்படுத்துகிறீர்கள் 🤔 என்று அர்த்தம் அல்லது பணமாக செலுத்தும்போது, அதை "இலவசமாக" வாங்குகிறீர்கள் என்று அர்த்தம், ஏனென்றால் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து ஏற்கனவே பணம் எடுக்கப்பட்டுவிட்டது 🥴
இது முட்டாள்தனமானதாக இருக்கிறதா? நிச்சயம் அப்படித்தான் இருக்கிறது! நடைமுறைக்கு ஏற்ப சிந்திக்கும் நண்பர்கள் மற்றும் கணவர்களை இது பெரும் விரக்திக்கு உள்ளாக்குகிறது. 🤣 "இதற்கும் அதற்கும் என்ன சம்பந்தம்?" என்று நீங்கள் கேட்கலாம். சரி, வேதாகமம் தன் சொந்த கோணத்தை கொண்டுள்ளது - அதை "ஆண்டவருடைய கணக்கு" என்று அழைப்போம். இது மனிதனுடைய அறிவைக் குழப்புவதாக இருக்கலாம், ஆனால் ஆண்டவரைப் பொருத்தவரையில் அது அர்த்தமுள்ளதாக இருக்கும். இந்த வாரம், ஆண்டவருடைய கணக்கு எவ்வாறு கிரியை செய்கிறது என்பதைக் குறித்து நாம் சிந்திப்போம். பொருளாதாரம் என்று சொல்லும்போது, ஆண்டவர் கணக்கு குறிப்பாக மனதைக் கவருவதாய் இருக்கும். அவர் எல்லாவற்றையும் நமக்கு பூரணமாகத் தருகிறார்: "நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை." (யாக்கோபு 1:17) இதற்குப் பலனாக, நமது வருமானத்தில் பத்து சதவீதமான தசமபாகத்தை அவருக்குத் திருப்பிக் கொடுத்து அவரைக் கனம்பண்ணும்படி கேட்கிறார். “தேசத்திலே நிலத்தின் வித்திலும், விருட்சங்களின் கனியிலும், தசமபாகம் எல்லாம் கர்த்தருக்கு உரியது; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது." (லேவியராகமம் 27:30) உங்கள் வருமானத்தில் பத்து சதவிகிதம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பது உங்களுக்கு மிகவும் அதிகமான தொகை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் ஆண்டவர் எல்லாவற்றையும் நமக்காகக் கொடுத்தார், எதையும் அவர் திரும்பப் பெற்றுக்கொள்ளவில்லை - அவருடைய சொந்த குமாரனைக் கூட நமக்காகக் கொடுத்தார் (யோவான் 3:16) என்பதை நாம் நினைக்கும்போது, அவர் உண்மையில் நமக்காக எவ்வளவு செய்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளலாம்! அவர் ஏற்கனவே நமக்குக் கொடுத்தவற்றில் ஒரு சிறு பகுதியை நாம் திரும்ப அவருக்குக் கொடுக்கும்போது, ஆண்டவர் மிகப்பெரிய வாக்குத்தத்தத்தை அளிக்கிறார்: “என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.” (மல்கியா 3:10) இது உண்மையிலேயே நம்பத்தக்க தெய்வீக கணக்கு! அன்பரே, நீங்கள் இதுவரை தசமபாகம் கொடுத்ததில்லை என்றால், இன்றே கொடுக்கத் தொடங்குமாறு உங்களை ஊக்குவிக்கிறேன். உங்கள் வருமானத்திலிருந்து பத்து சதவீதத்தை எடுத்து வைத்து நீங்கள் கலந்துகொள்ளும் திருச்சபைக்குத் தொடர்ந்து கொடுங்கள், மேலும் உங்கள் வாழ்க்கையில் ஆண்டவருடைய வாக்குத்தத்தங்களின் ஆசீர்வாதங்கள் நிறைவேறுவதைப் பாருங்கள்!

