வெளியீட்டு தேதி 3 பிப்ரவரி 2025

பயத்தை மேற்கொள்ளும் விசுவாசத்தைத் தேர்ந்தெடுங்கள்!

வெளியீட்டு தேதி 3 பிப்ரவரி 2025

இனிய திங்கட்கிழமை!  🤗

வரும் நாட்களில் விசுவாசம் மற்றும் பயம் என்ற தலைப்பில் வேத வசனங்களை நான் உங்களுடன் சேர்ந்து ஆராய விரும்புகிறேன் - வேத வாக்கியங்களைத் தியானிக்க ஆயத்தமாய் இருங்கள்! 😉

எபிரெயர் 11:1 விசுவாசத்தை இவ்வாறு வரையறுக்கிறது: "விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது."

மேலும், "விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய், காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம்" என்று வாசிக்கிறோம் (எபிரெயர் 11:3).

மறுபுறம், பயம் என்ற சொல், "தீமையை எதிர்பார்த்தல் அல்லது வரவிருக்கும் ஆபத்து பற்றிய அச்சத்தால் ஏற்படும் வலிமிகுந்த உணர்ச்சி" என்றும் "பயம் என்பது எதிர்காலத்தில் நமக்கு ஏற்படும் தீமை பற்றிய எண்ணத்தைக் குறித்து மனதில் நிலவும் குழப்பம்” என்றும் சொல் அகராதியில் வரையறுக்கப்பட்டுள்ளது. 

விசுவாசம் மற்றும் பயம் இரண்டிலும் ஒரு பொதுவான காரியத்தைப் பார்க்கிறோம், இரண்டிலும், (இதுவரை) நம்மால் பார்க்க முடியாத ஒன்றை நாம் எதிர்பார்க்கிறோம். விசுவாசம் என்றால் நன்மையை எதிர்பார்க்கிறோம் என்று அர்த்தம், பயம் என்றால் தீமையை நினைத்து  அஞ்சுகிறோம் என்று அர்த்தம்.

"விசுவாசம் மற்றும் பயம் இரண்டுமே நீங்கள் பார்க்க முடியாத ஒன்றை உங்களை நம்பச் செய்கிறது. நம்ப வேண்டிய ஒன்றை நீங்களே தேர்ந்தெடுக்கலாம்."  - பாப் புரோக்டர்

"பயத்தை மேற்கொள்ளும் விசுவாசத்தைத் தேர்ந்தெடு" என்ற வழக்கச் சொல்லை நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? விசுவாசத்துக்கும் பயத்துக்கும் இடையே எப்போதும் தேர்வுக்கான ஒரு வாய்ப்பு இருக்கிறது என்பதை நினைவூட்ட, இது உங்களுக்கு ஒரு பலம் வாய்ந்த ஆயுதமாக இருக்கிறது. பயம் நம்மை ஆட்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

வேதாகமத்தில் கிட்டத்தட்ட 70 முறை “பயப்படாதே” என்று நமக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. “பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு" என்று இயேசுவும் சொல்லி இருக்கிறார் (மாற்கு 5:36).

தாவீதின் அணுகுமுறையும் இதுதான்:

“நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன். தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்?" (சங்கீதம் 56:3-4)

அன்பரே, உங்கள் இதயத்தில் மறைந்திருக்கும் பயங்களை வெளிப்படுத்தும்படி கேட்டு, ஆண்டவரது சமூகத்தில் சிறிது நேரம் ஒதுக்குங்கள், பின்னர் சங்கீதம் 23:4 மற்றும் சங்கீதம் 27:1 ஆகிய வசனங்களிலிருந்து இந்த ஜெபத்தை ஜெபிப்பதன் மூலம் அவற்றை அவரது பாதத்தில் அர்ப்பணித்துவிடுங்கள்.

“பரலோகத் தகப்பனே, இன்று நான் பயத்தை மேற்கொள்ளும் விசுவாசத்தைத் தேர்ந்தெடுக்கிறேன். இருள் சூழ்ந்த காலத்திலும் நீர் என்னுடன் இருக்கிறீர் என்று நான் விசுவாசிக்கிறேன். நீரே என் வெளிச்சமும், என் இரட்சிப்பும், என் கோட்டையுமாய் இருக்கிறீர்;  என் வாழ்க்கையில் நீர் இருப்பதால், நான் பயப்பட வேண்டியதில்லை. என் பயங்கள் அனைத்தையும் உம்மிடம் ஒப்படைக்கிறேன். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”

Cameron Mendes
எழுத்தாளர்

Worship artist, singer-songwriter, dreamer and passionate about spreading the Gospel.