தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது – கொலோசெயர் 3:15

நீங்கள் எப்போதாவது ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருக்கையில், அதன் கால்களில் ஒன்று உடைந்துபோயிருக்கிறதா? 😖 கேம்ரனின் குடும்பத்தை நான் முதன்முதலில் சந்தித்தபோது எனக்கு அப்படி நடந்தது. அதிர்ஷ்டவசமாக, நான் தரையில் விழவில்லை, ஆனால் ஒரு உரத்த சத்தத்தோடு நாற்காலி உடைந்து விரிசல் காணப்பட்டது, பிறகு அவர்கள் எனக்கு ஒரு புதிய நாற்காலியைக் கொடுக்க வேண்டியிருந்தது; எனக்கு மிகவும் சங்கடமாய் இருந்தது! 🫣 உங்கள் வாழ்க்கைக்கான ஆண்டவருடைய சித்தத்தை பகுத்தறிந்துகொள்வது நான்கு கால் நாற்காலியை உருவாக்குவது போன்றது. நீங்கள் உட்காருவதற்காக உறுதியான, நிலையான மற்றும் நம்பகமான அடித்தளமாக மாறும் நாற்காலியை உண்டாக்குவது எதிர்கால சங்கடம் மற்றும் வருத்தத்துக்கு உங்களைத் தப்புவிக்கும். இந்த நான்கு முக்கியமான கேள்விகளை உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்வதன் மூலம் நாற்காலியின் நான்கு கால்களும் பலப்படுத்தப்படுகின்றன: 1. இது வேதத்தின் அடிப்படையில் சரியா? இதன் பதில் 'இல்லை' என்றால், அதே இடத்தில் நிறுத்திவிடுங்கள். வேதாகமத்திலிருந்து ஆண்டவருடைய வழிகாட்டுதல் பெரும்பாலும் தெளிவாக கிடைப்பதில்லை என்றாலும், இந்தத் தருணங்களில், ஒரு குறிப்பிட்ட வசனம் அல்லது வெளிப்பாடு தெளிவையும் உறுதிப்படுத்தலையும் நமக்கு வழங்கக்கூடும். நானும் கேம்ரனும் அமெரிக்காவுக்குச் செல்வதைப் பற்றி ஜெபித்த நேரங்களில், எங்களுக்கு பல கவலைகள் இருந்தபோதும் கூட, ஒருவர் இந்த வசனத்தை எங்களுடன் பகிர்ந்துகொண்டார், இது எங்களுக்கு சமாதானத்தைத் தந்தது: “கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்.” (சங்கீதம் 138:8) 2. ஆண்டவர் என்னிடம் என்ன பேசுகிறார்?
நீங்கள் எதை முடிவு செய்தாலும், ஆண்டவருடைய சமூகத்தில் "அந்தக் காரியத்தைக் கொண்டுவந்து உட்கார" நேரம் ஒதுக்குங்கள். உங்கள் இதயத்தில் அவருடைய சத்தத்தைக் கேளுங்கள். தனிமை மற்றும் மௌனத்தைக் கடைபிடிப்பதே இதற்கு சிறந்த வழி. "தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர்." (புலம்பல் 3:25) 3. மற்றவர்கள் மூலம் ஆண்டவர் என்னிடம் என்ன பேசுகிறார்? இரண்டு நாட்களுக்கு முன்பு, ஞானமுள்ள ஆலோசனையைப் பெறுவதன் முக்கியத்துவத்தைப் பற்றி நாம் கலந்துரையாடினோம். ஆண்டவர் அடிக்கடி மற்றவர்கள் மூலம் பேசுகிறார், மேலும் உங்கள் சூழ்நிலையைப் பற்றி வேதாகமம் என்ன சொல்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள் (முதல் கேள்வியின் கீழ் பார்த்தோம்). "உன் அந்தியகாலத்தில் நீ ஞானமுள்ளவனாயிருக்கும்படி, ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்." (நீதிமொழிகள் 19:20) 4. எனக்கு சமாதானம் இருக்கிறதா? நம்முடைய தேவன் சமாதானத்தின் தேவன், நம்மை வருத்தப்படவைக்கும் தேவன் அல்ல. ஒரு கடினமான தீர்மானம் உங்களுக்கு மன அழுத்தத்தையோ அல்லது கவலையையோ ஏற்படுத்தினால், அது ஆண்டவரிடமிருந்து வந்ததல்ல என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். "தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது," (கொலோசெயர் 3:15) ஒருமுறை எனக்கு தலைமைத்துவ பதவி ஒன்று வழங்கப்பட்டபோது, இப்படி நடந்தது. ஜெபித்து, ஆலோசனையை கேட்டு, ஆரம்பத்தில் ஏற்றுக்கொண்டபோதிலும், பின்னர் நான் மன அழுத்தத்துக்குள்ளானேன். நான் ஏற்றுக்கொண்டதை திரும்பக் கொடுத்துவிடும்படி உணர்த்தும் ஆண்டவருடைய வழிதான் இது என்று நான் உணர்ந்தேன், அதனால் நான் அப்படியே செய்தேன். அன்பரே, பகுத்தறிய கற்றுக்கொள்ளுங்கள் என்ற தொடரை நாம் நிறைவுசெய்ய இருப்பதால், பிலிப்பியர் 1:9-11 வரையுள்ள வசனங்களில் இருந்து பவுலின் ஜெபத்தை உங்களுக்காக ஜெபித்து நிறைவுசெய்ய விரும்புகிறேன் : “மேலும், உத்தமமானவைகளை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக உங்கள் அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாய்ப் பெருகவும், தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி, நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்புரவானவர்களும் இடறலற்றவர்களுமாயிருக்கவும் வேண்டுதல் செய்கிறேன்."

