நம் வாழ்வின் ஒவ்வொரு வெற்றிக்குமான பலனுக்கு ஆண்டவர் ஒருவரே பாத்திரர்

இந்த வாரம், "ஆண்டவருடைய கணிதம்" என்ற தலைப்பில் நாம் தியானித்துக்கொண்டிருக்கிறோம் — ஆண்டவர் சொல்லும் விஷயங்கள் சரியானதாக இல்லை என்பதுபோல் நமக்குத் தோன்றலாம், ஆனால் அவரைப் பொருத்தவரையில் அவை முற்றிலும் அறிவுப்பூர்வமானவை. இன்று, கிதியோன் படையைக் குறித்து குழப்பமடையச் செய்யும் விவரத்தை பற்றி நாம் பார்ப்போம். அன்பரே, யுத்தத்துக்குத் தயாராகுங்கள் என்று நான் சொன்னால், உங்களால் முடிந்தவரை மிகப்பெரிய ராணுவத்தைத் திரட்ட நீங்கள் முயற்சிப்பீர்கள், அல்லவா? குறிப்பாக உங்கள் எதிரி எண்ணிக்கையில் உங்களை விட மிகவும் அதிகமாக இருந்தால் என்ன செய்வீர்கள்? நியாயாதிபதிகள் 7ஆம் அத்தியாயத்தில் கிதியோனும் அவனது இராணுவமும் ஒரு மிகப்பெரிய எதிரிப் படையை எதிர்கொள்ளத் தயாராகும் சம்பவத்தை வாசிக்கலாம்: “மீதியானியரும், அமலேக்கியரும், சகல கிழக்கத்திய புத்திரரும், வெட்டுக்கிளிகளைப்போலத் திரளாய்ப் பள்ளத்தாக்கிலே படுத்துக்கிடந்தார்கள்; அவர்களுடைய ஒட்டகங்களுக்கும் கணக்கில்லை, கடற்கரை மணலைப்போலத் திரளாயிருந்தது.” (நியாயாதிபதிகள் 7:12) ஆண்டவர் ஒரு பெருக்கல் கணக்கு போட்டு இஸ்ரவேல் மக்களை பெருக்கி, ஒரு அதிசயத்தை செய்ய இது ஒரு சிறந்த நேரம் என்று நீங்கள் நினைப்பீர்கள், இல்லையா? ஆனால் ஆண்டவருடைய கணிதம் இதற்கு எதிர்மாறானது. அவர் கிதியோனிடம் இவ்வாறு கூறினார்: “நான் மீதியானியரை உன்னோடிருக்கிற ஜனத்தின் கையில் ஒப்புக்கொடுக்கிறதற்கு அவர்கள் மிகுதியாயிருக்கிறார்கள்; என் கை என்னை இரட்சித்தது என்று இஸ்ரவேல் எனக்கு விரோதமாக வீம்பு பேசுகிறதற்கு இடமாகும்.” (நியாயாதிபதிகள் 7:2) ஆண்டவர் 32,000 ஆட்களிலிருந்து 300 ஆட்களாக கிதியோனின் படையைக் குறைக்க வைத்தார் - ஆட்கள் குறைவாய் இருந்தும் அவர்களுக்கு வெற்றியைக் கொடுத்தார். ஆண்டவரால் முடியாதது எதுவுமில்லை என்பதையும், நம் வாழ்வின் ஒவ்வொரு வெற்றிக்கான பலனுக்கும் அவர் மட்டுமே தகுதியானவர் என்பதையும் நினைவூட்ட இந்த சம்பவம் ஒரு சிறந்த உதாரணமாக உள்ளது. அன்பரே, நீங்கள் இப்போது சாத்தியமற்ற சூழ்நிலையை எதிர்கொள்கிறீர்களா? ஆண்டவர் உங்களுக்கு உதவியாளர்களைக் கூட்டித் தருவதற்குப் பதிலாக அவர்களை உங்களைவிட்டு நீக்குவதுபோல் உணர்கிறீர்களா? திடன்கொள்ளுங்கள் - அவர் உங்களை மறந்துவிடவில்லை! கிதியோனுக்கு நடந்ததைப் போலவே, ஆண்டவர் உங்களை வெற்றியின் பாதையில் நிறுத்தி வைத்திருக்கிறார் என்றும், எல்லாவற்றையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்றும் விசுவாசியுங்கள். என்னுடன் சேர்ந்து இந்த ஜெபத்தை ஏறெடுங்கள்:
“பரலோக பிதாவே, நான் எப்படிப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொள்கிறேன் என்பதை நீர் நன்றாக அறிந்திருக்கிறீர், அதிலிருந்து தப்பும் வழியை நீர் ஏற்கனவே ஆயத்தம் செய்திருக்கிறீர் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். என் வாழ்க்கையில் நீர் கொடுத்த எண்ணற்ற வெற்றிகளுக்கு நன்றி, அடுத்த வெற்றியைப் பார்க்க நான் மிகவும் ஆவலாக காத்திருக்கிறேன்! இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்."

