வெளியீட்டு தேதி 17 பிப்ரவரி 2024

அன்பரே, "விசுவாச ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு" நீ தயாராக இருக்கிறாயா?

வெளியீட்டு தேதி 17 பிப்ரவரி 2024

இன்று, கொஞ்சம் விளையாட்டைப் பற்றியும், நமது விசுவாச வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் சோதனைகளைப் பற்றியும் நாம் பேசப்போகிறோம்.

பெரும்பாலும், "நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்" (2 தீமோத்தேயு 4:7) என்று நாம் கூறுவதற்கு முன்பு, “நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன். சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்'' என்று நாம் சொல்ல வேண்டும். (பிலிப்பியர் 3:12-14

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், மேடையில் நிற்கும் முன், நாம் முதலில் வெற்றியைத் தேட வேண்டும். விளையாட்டுக்கும் நமது விசுவாசத்திற்கும் உள்ள ஒப்புமை மிகவும் பொருத்தமானது. கிறிஸ்தவ வாழ்க்கையை முழுவதுமாக விளக்குவதற்கு பவுல் இந்த சித்திரத்தைப் பயன்படுத்துகிறார்.

உன் விசுவாசத்தைக் கிரியையில் நடப்பிக்கும்போது, கண்ணுக்குப் புலப்படாத, அதே சமயத்தில், உண்மையாக சத்துருவாய் இருக்கிறவைகளுக்கு எதிராக நீ போராட வேண்டும். அவைகளாவன: சத்துருக்கள், நம்பிக்கையின்மை, சோதனைகள், வியாதி, இருதயம் மற்றும் மனதின் நிலைகள் போன்ற இவைகளே. கிறிஸ்தவர்களுக்கு இவ்விதமான சோதனைகளே பயிற்சியாக அளிக்கப்படுகிறது. உன் விசுவாசத்திற்கான பல சோதனைகள் உன்னை எதிர்கொள்கின்றன, அது ஒவ்வொரு நாளும் ஒரு தடையாக இருக்கிறது.

ஒரு சாம்பியன் (விசுவாச வாழ்வு அல்லது விளையாட்டு உலகம் எதுவாயினும்) ஒரு சோபாவில் உட்கார்ந்துகொண்டு சேனல்களை மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டிருப்பதன் மூலம் ஒரு சாம்பியனாக மாற முடியாது! ஒரு சாம்பியன்  பந்தயத்தில் ஜெயித்து பரிசைப் பெறுவதற்காக ஒவ்வொரு நாளும் பயிற்சி எடுத்து, பாடுபட்டு, தன்னை மிஞ்சவும், தனது செயல்திறனை மேம்படுத்தவும் அயராது உழைக்கிறான்/உழைக்கிறாள். அன்பரே, சோதனைகளுக்கு அஞ்சாதே... வெற்றியை அடைவதற்காக, நல்ல போராட்டத்தை போராடவும், ஓட்டத்தை ஓடவும், பந்தயப்பொருளைப் பெற்றுக்கொள்ளவும் பயப்பட வேண்டாம்!

நீ ஓடும் மைதானத்தில் அமர்ந்திருக்கும் மக்களைப் பார்... இந்த ஓட்டப் பந்தயத்தில் உன்னை ஆதரிக்கவும் பலப்படுத்தவும் இயேசு இருக்கிறார்!

அன்பரே, உனது ஓட்டப்பந்தயத்தைத் தொடர்ந்து ஓடு.

நாம் ஒன்றாக சேர்ந்து ஜெபிப்போம்: “இயேசுவே, நான் இன்று என் விசுவாசத்தைச் செயல்படுத்துகிறேன். ஒரு கிறிஸ்தவனாக/கிறிஸ்தவளாக இந்தச் சோதனைகள்தான் எனது பயிற்சி என்பதை நான் அறிவேன், மேலும் நான் அவைகளுக்குப் பயப்படக் கூடாது என்று தீர்மானித்திருக்கிறேன். நான் நல்ல போராட்டத்தைப் போராடுவேன்! எனக்கு அதிகாரம் அளித்ததற்கும், எல்லாவற்றிலும் என்னுடன் இருப்பதற்கும் நன்றி! இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்."

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “நான் கடந்த மூன்று மாதங்களாக ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சலைப் பெற்று வருகிறேன். இது எனக்கு மிகுந்த ஆசீர்வாதமாகவும், ஊக்கமளிப்பதாகவும் இருக்கிறது. நான் இப்போது சென்று கொண்டிருக்கும் இந்தச் சவாலான பயணத்தில் என் தகப்பனாகிய தேவன் எனது ஒவ்வொரு அடியிலும் எனக்கு ஆறுதல் அளித்து வருகிறார். எனக்கு நாக்கில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு, அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. இப்போது நான் கீமோ சிகிச்சையும் கதிர்வீச்சு சிகிச்சையும் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. இந்தப் போராட்டத்தின் நிமித்தமாக, பயத்தோடும் பதட்டத்தோடும் ஒருசில நாட்களைக் கடந்துசெல்வது எனக்குக் கடினமாக இருந்திருக்கிறது. ஆனால் உங்கள் வார்த்தைகளும் அன்பும் ஊக்கமும் இயேசுவின் மீதான எனது விசுவாசத்தை வளர்க்க உதவுகின்றன. எனது ஒரே பரிகாரியாகிய ஆண்டவருடனான உறவில் நான் நன்கு வளர்ந்து வருகிறேன். நான் அவரைப் பற்றி இன்னும் அதிகமாக அறிந்துகொள்ள வேண்டும். நான் அவருடைய இருதயத்தை இன்னும் ஆழமாக அறிய விரும்புகிறேன், அவருடைய இதயத்துடிப்பு என்னை நோக்கி வருகிறது. நான் அவரை நம்புகிறேன். ஏனென்றால், சங்கீதம் 62:8ல் 'ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார்' என்று எழுதப்பட்டுள்ளது." (அன்னாள்)

Eric Célérier
எழுத்தாளர்