வெளியீட்டு தேதி 29 மார்ச் 2024

புனித வாரம் நாள் 5: இயேசுவின் மரணம்

வெளியீட்டு தேதி 29 மார்ச் 2024

இன்றைய நாள் நாம் அனைவருக்குமே இந்த வாரத்தின் மிகவும் கடினமான ஒரு நாளாகும். இயேசுவின் மரணம் இலகுவாகவும் எளிதான முறையிலும் விவரிக்கக் கூடிய ஒரு உரையாடல் அல்ல, இயேசு உனக்காகவும் எனக்காகவும் செய்த காரியங்களில் நமக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு.

வெள்ளிக்கிழமையான இன்று, அவரது மரணத்திற்கு நேராக அவரை நடத்திச் சென்ற அந்தக் கடைசி மணிநேரங்களில் இயேசுவின் பயணமானது துரோகம் நிறைந்ததாகவும் மிகுந்த வேதனையுள்ளதாகவும் மாறியது.

அன்று காலை 9 மணிக்கு முன்பே, பொய்யான குற்றச்சாட்டுகள், கண்டனம், பரியாசம், அநேக அடிகள், கைவிடப்படுதல் போன்ற அவமானங்களை இயேசு ஏற்கனவே சகித்திருந்தார். பலதரப்பட்ட பரியாசம் மற்றும் சோதனைகளுக்குப் பிறகு, இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரிக்கும்படிக்கு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது, இது மனிதகுலம் கண்டுபிடித்த மிகவும் கொடூரமானதும் அவமானம் மிகுந்ததுமான மரண முறைகளில் ஒன்றாகும். இயேசுவின் மரணம் மிகுந்த வேதனை நிறைந்த ஒன்றாக இருந்தது.

கிறிஸ்து சிலுவையில் அறையப்பட அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு, போர்ச்சேவகர்கள் அவர் மீது எச்சில் உமிழ்ந்தனர், அவரைத் துன்புறுத்தினர், பரியாசம் செய்தனர் மற்றும் முள் கிரீடம் அவரது சிரசில் தரிப்பிக்கப்பட்டது. பின்னர் இயேசு தம்முடைய சிலுவையை சுமந்துகொண்டு கல்வாரி மலைக்குச் சென்றார், அங்கு மீண்டும், ரோமானிய சேவகர்கள் அவரை சிலுவை மரத்தில் அறைந்ததால் அவர் பரியாசம் செய்யப்பட்டு அவமதிக்கப்பட்டார்.

இயேசு சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்தபோது, தம்முடைய இறுதி வார்த்தைகளாக ஏழு வார்த்தைகளைப் பேசினார். அவருடைய முதல் வார்த்தையானது வேதாகமத்தில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: "பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே." (லூக்கா 23:34)

இதுவே அவரது கடைசி வார்த்தை: "பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்."  (லூக்கா 23:46)

நண்பனே/தோழியே, பேசப்பட்ட அந்த வார்த்தைகள் அனைத்தும் உனக்காகவே பேசப்பட்டன என்று விசுவாசிப்பாயா?

உன்னை மன்னிப்பதற்காகவும், நமது இரட்சிப்புக்கான அவரது பிதாவின் திட்டத்தை தாம் நம்புவதாலும், இயேசு மனித வரலாற்றில் மிகவும் நம்பிக்கைக்குரிய தருணத்திற்கு அடித்தளம் அமைத்துக்கொண்டிருந்தார்.

இயேசுவின் நாமத்தை விசுவாசிக்கும் ஒவ்வொருவரும் மரணத்துக்கு நீங்கலாகி நித்திய இரட்சிப்பையும் மன்னிப்பையும் பெற்றுக்கொள்வார்கள். இது ஒரு அதிசயம்!

புனித வாரத்தின் இந்த வெள்ளிக்கிழமையிலும், இயேசு நமக்கு அளித்த நம்பிக்கை நம் ஒவ்வொருவருக்கும் நிஜமாகி வருகிறது. இயேசுவின் வாழ்வை நினைவுகூர்ந்து இன்றே அவரைக் கனம்பண்ணுவோம்.

Eric Célérier
எழுத்தாளர்