உனக்கான ஆண்டவரின் கனவை கண்டறி!
நாம் குழந்தைகளாக இருக்கும்போது, எதிர்காலத்தில் நாம் எப்படி இருப்போம் என்ற "நம்மை" பற்றிய பார்வை சில நேரங்களில் வேடிக்கையாக இருக்கும். உதாரணமாக, "நான் வளர்ந்தபின், ஒரு விண்வெளி வீரர், ஆய்வாளர், நடன கலைஞராக இருப்பேன்..." என்பன போன்ற பார்வை. எனக்கு ஆறு வயதாக இருந்தபோது, நான் வளர்ந்தபின் என்னவாக ஆக விரும்புகிறேன் என்று என் ஆசிரியர் என்னிடம் கேட்டார். நான், "பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியாக இருக்க வேண்டும்" என்று சொன்னேன். இது எனது முதல் வகுப்பில் இருந்த அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியது.
அப்போதிருந்த என் ஆசையும் நிகழ்கால நிஜமும் வெவ்வேறாக இருந்தது! அதுபோலவே, நாம் "நல்ல" கனவுகளைக் காணலாம், ஆனால் அது நம் பிதாவின் சித்தமாக இல்லாமல் இருக்கலாம்.
நீ பிறப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, உன்னைப் படைத்தவர் உனக்காக கனவுகளைக் கொண்டிருந்தார் (வேதாகமம், எபேசியர் 2:10 ஐப் பார்க்கவும்).
அவர் அவற்றை உன் மரபணுவில் பின்னினார். அன்பரே, உன் வாழ்க்கைக்கான ஆண்டவரின் திட்டத்தை கண்டறிய இன்று உன்னை அழைக்கிறேன். அதைத் தேட நான் உன்னை ஊக்குவிக்கிறேன்!
ஆண்டவர் கூறுகிறார்: “என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.” (எரேமியா 33:3)
ஆண்டவர் உனக்கு "எட்டாததுமான பெரிய காரியங்களை" வெளிப்படுத்த விரும்புகிறார். இவை மறைக்கப்பட்ட விஷயங்கள். "என் குழந்தை எதற்காகப் படைக்கப்பட்டிருக்கிறாள் (படைக்கப்பட்டிருக்கிறான்) என்பதை அவளாகவே/அவனாகவே கண்டுபிடிக்க முடிகிறதா என்று நான் பார்க்கப்போகிறேன்" என்று கூறி, மேலே பரலோகத்திலிருந்து உன்னைப் பார்வையிட வேண்டும் என்பது அவருடைய விருப்பமில்லை.
இல்லை! ஆண்டவர் ஒரு நல்ல தந்தையைப்போல் உன்னுடன் நடக்க விரும்புகிறார். அவர் உன்னுடன் பேசவும், தாம் விரும்புவதை உன் மூலமாக வெளிப்படுத்தவும், உன் வாழ்க்கையில் அவரது உள்ளத்தில் இருக்கும் கனவை வெளிப்படுத்தவும் விரும்புகிறார்.
எனவே, அன்பரே, உன் வாழ்க்கைக்கான அவரது கனவை உனக்கு வெளிப்படுத்தும்படி ஆண்டவரிடம் நீ கேட்கலாமே?
