வெளியீட்டு தேதி 13 மார்ச் 2024

அன்பரே, உன் செயல்கள் நித்தியத்திற்குக் கடந்து செல்பவை!

வெளியீட்டு தேதி 13 மார்ச் 2024

"இயேசு நம்மை எவ்வளவு நேசிக்கிறார் என்பது நமக்கு வெளிப்படுத்தப்படும்போது என்ன நடக்கும்?"

ஒரு நாள், இயேசு பெத்தானியாவில் சீமோனின் வீட்டில் இருந்தார். அங்கே, ஒரு பெண் இயேசுவிடம் வந்து, மிகவும் விலையுயர்ந்த வாசனைத் திரவிய எண்ணெயை அவருடைய சிரசின் மீது ஊற்றினாள் (மத்தேயு 26:7).

இந்தப் பெண் இயேசுவை மிகவும் நேசித்தாள். அவள் உண்மையில் தன் அன்பை அவர் மீது ஊற்றினாள். அங்கிருந்த மற்ற மக்களும், இயேசுவின் சீஷர்களும் கூட, அவளது செயலைக் கண்டு, இந்த வாசனைத் திரவியத்தை ஏழைகளுக்கு உதவுவதற்காக விற்றிருக்கலாம் அல்லது நிதியைக் கையாளுபவரை மேலும் பணக்காரர் ஆக்குவதற்காக விற்றிருக்கலாம், என்று சொல்லி அதிர்ச்சியடைந்தனர்.

ஆனாலும், இயேசு அந்த ஸ்திரீயைக் குற்றப்படுத்தவில்லை. அவரைப் பொறுத்தவரை, அவள் செய்தது மிகப்பெரிய அன்பின் செயல். உலகில் எங்கெல்லாம் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் அவள் செய்தது நினைவுகூரப்படும் என்று அவர் கூறினார்.

இந்த நிகழ்வு நடந்து 2,000 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. தன் அன்பு நிச்சயமாக காலங்கள் கடந்து விவரிக்கப்படும் என்று இந்த ஸ்திரீ நினைத்திருந்திருக்க மாட்டாள்.

வரலாற்று சாதனை படைத்த பல பெரிய மனிதர்கள் மற்றும் பெண்களின் துணிச்சலான செயல்கள் நினைவிலிருந்து முற்றிலும் மறைந்துவிட்டன, ஆனால் இந்த ஸ்திரீ இயேசுவுக்காக அன்று செய்தது இன்றும் உலகம் முழுவதும் சொல்லப்படுகிறது!

அன்பரே, இயேசு உன்னை எந்த அளவுக்கு நேசிக்கிறார் என்பதைக் குறித்த வெளிப்பாடு உனக்கு இருக்கும்போது, ​​உன் ஒரே ஒரு விருப்பம்... உன் அன்பை அவர் மீது ஊற்றிவிடவேண்டும் என்பதாக மட்டும்தான் இருக்கும்! அது நேரத்தை அல்லது பலத்தை வீணடிக்கும் செயல் என்று மற்றவர்கள் நினைக்கலாம், அது பைத்தியகாரத்தனம் என்று கூட நினைக்கலாம், ஆனால் அது ஆண்டவரின் பார்வையில் எவ்வளவு விலையேறப்பெற்றதாய் இருக்கிறது. அது காலங்கள் கடந்து நித்திய நித்தியமாக நீடித்து நிற்கும் ஒரு விலைக்கிரயம்!

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “ஆண்டவரோடு எனக்குள்ள உறவு எவ்வளவு சிறப்பானது மற்றும் அற்புதமானது என்பதை ‘அனுதினமும் ஓரு அதிசயம்’ எனக்கு நினைவூட்டுகிறது. உங்களது இனிய காலை ஊக்கங்கள் ஒவ்வொரு நாளும் என் பரலோகப் பிதாவுடன் உள்ள அன்பில் என்னை இணைக்கின்றன. நன்றி!"  (ஷர்மிளா, சிம்லா)

Eric Célérier
எழுத்தாளர்