என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல – யோவான் 18:36

இந்த வாரத்தில், "ஆண்டவருடைய கணக்கு" என்ற இந்தத் தொடரை நீங்கள் நன்கு கற்றறிந்துகொண்டீர்களா? நேற்று எண்ணிலடங்கா சத்துருவின் சேனையை ஜெயிக்க ஆண்டவர் எப்படி கிதியோனின் சேனையை 32,000 பேர்களிலிருந்து வெறும் 300 பேராகக் குறைத்தார் என்பதை ஆராய்ந்தோம்! புதிய ஏற்பாட்டில், இயேசு அதை இன்னும் குறைத்துவிடுகிறார்; உலகம் முழுவதையும் "ஆதாயப்படுத்துவதற்கு", அவர் தமது சீஷர்களை இரண்டிரண்டு பேராக புறப்பட்டுப் போகச்சொல்லி அனுப்புகிறார்😳. "அவர் பன்னிருவரையும் அழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்த அவர்களுக்கு அதிகாரங்கொடுத்து" என்று மாற்கு 6:7ல் சொல்லப்பட்டுள்ளது. அவர்களின் ஊழியப் பணி என்ன? சகல தேசங்களுக்கும் போய் ஆண்டவருடைய ராஜ்யத்தைக் குறித்து அறிவிப்பதே அவர்களது பணியாக இருந்தது (மத்தேயு 24:14). வரலாறு முழுவதும், இராணுவத் தலைவர்கள் உலகில் ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பதை நாம் காண்கிறோம்; வேதாகம காலங்களில் ரோமானியர்கள், 19 ஆம் நூற்றாண்டில் நெப்போலியன் போனபார்டே அல்லது இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனியில் உள்ள நாசிக்களுடன் ஹிட்லர் ஆகியோர் பற்றி நினைத்துப் பாருங்கள். அவர்கள் அனைவரும் வன்முறை, அடக்குமுறை மற்றும் பலத்தை பயன்படுத்தி தங்கள் ஆட்சியை நிலைநாட்டினர். சீஷர்களை உருவாக்கி அவர்களை உலகத்துக்குள் அனுப்புவதால், இராணுவம் இல்லாத ஒரு ராஜ்யத்தை நிறுவுவதே ஆண்டவருடைய கணக்காக இருந்தது. அடுத்து என்ன நடந்தது, யூகித்துப் பாருங்கள்?! தேவனுடைய ராஜ்யம் உலகம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய ராஜ்யமாக, நீண்ட காலமாக நீடித்திருக்கிற ராஜ்யமாக மற்றும் மிகவும் வல்லமை வாய்ந்த ராஜ்யமாக வளர்ந்துவிட்டது!! இது ஒரு விசேஷித்த ராஜ்யம்: "இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார்." (யோவான் 18:36) "தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது." (ரோமர் 14:17) அன்பரே, நீங்களும் நானும் இந்த மிகப்பெரிய ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருக்கவும் அதன் சுவிசேஷத்தை உலகத்துடன் பகிர்ந்துகொள்ளவும் அழைக்கப்பட்டுள்ளோம்: "பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்" என்று சொன்னார். (மாற்கு 16:15) ஆண்டவருடைய தெய்வீக திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பது எத்தனை பெருமிதம்!

