உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட இயேசு இரத்தம் சிந்தினார்

சில நாட்களுக்கு முன்பு நான் குறிப்பிட்டதுபோல, இயேசு தம்முடைய வாழ்க்கையின் கடைசி 18 மணி நேரங்களில் இரத்தம் சிந்திய ஏழு முறைகளையும் உங்களுடன் இணைந்து ஆராய்ந்து பார்க்க விரும்புகிறேன். இயேசு முதன்முதலில் சிந்திய இரத்தமானது ஒரு சவுக்கின் அடியினாலோ அல்லது ஒரு ஆணி அடிக்கப்பட்டதினாலோ சிந்தப்படவில்ல - கெத்சமெனே தோட்டத்தில் சிந்தப்பட்டது. “பின்பு அவர் புறப்பட்டு, வழக்கத்தின்படியே ஒலிவமலைக்குப் போனார், அவருடைய சீஷரும் அவரோடேகூடப்போனார்கள்... அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது.” (லூக்கா 22:39,44) “இரத்தம் வியர்வையாக சிந்தப்படுவது சாத்தியமா?” என்று சிலர் யோசிக்கலாம். ஆம் - இது ஹெமாடிட்ரோசிஸ் என்று அழைக்கப்படும் ஒரு அரிய நிலை, இது அதிக அளவிலான மன அழுத்தத்தால் தூண்டப்படுகிறது. இங்கு கேள்வி என்னவென்றால், அது நடந்ததா என்பது அல்ல. அது ஏன் நடந்தது என்பதுதான். இயேசுவுக்கு இவ்வளவு அதிகமான வேதனையை ஏற்படுத்தியது எது? பதில் அவரது ஜெபத்திலேயே உள்ளது: “பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.” (லூக்கா 22:42) சகல ஜனங்களின் பாவங்களாலும் நிறைந்த தேவனுடைய கோப கலசத்தைப் பற்றி இங்கே இயேசு குறிப்பிடுகிறார். “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் என்னை நோக்கி: நான் உன்னை அனுப்புகிற ஜாதிகள் குடித்து, நான் தங்களுக்குள் அனுப்பும் பட்டயத்தால் அவர்கள் தள்ளாடி, புத்திகெட்டுப்போகும்படிக்கு, இந்த உக்கிரமாகிய மதுபானத்தின் பாத்திரத்தை நீ என் கையிலிருந்து வாங்கி, அவர்கள் எல்லாருக்கும் அதிலே குடிக்கக்கொடு என்றார்.” (எரேமியா 25:15) சிலுவையின் சரீரப்பிரகாரமான வலியைப் பற்றி இயேசு பயப்படவில்லை. மாறாக, நம்முடைய ஒவ்வொரு பாவத்தையும், ஒவ்வொரு தோல்வியையும், ஒவ்வொரு சூழலின் இருளையும் சுமந்து, அந்தக் கலசத்தின் பானத்தைக் குடிப்பதன் ஆவிக்குரிய சுமையின் அளவே அவரை நொறுக்கியது. கெத்சமெனே என்றால் “ஒலிவ எண்ணெயைப் பிழிந்தெடுத்தல்” - அதாவது எண்ணெய் பாய்ந்து வரும்வரை ஒலிவமரங்கள் நசுக்கப்படும் இடம் என்று பொருள். இது மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது. அந்த நேரத்தில், இயேசு நம்முடைய பாவங்களின் சுமையால் ஆவிக்குரிய விதத்தில் நசுக்கப்பட்டார், அவருடைய இரத்தம் பாய்ந்து வரத் தொடங்கியது. அன்பரே, நம் ஒவ்வொருவருக்கும் நமது பாவங்களால் நிறைந்த ஒரு கசப்பான கலசம் உள்ளது. ஆனால் நற்செய்தி என்னவென்றால், இயேசு ஏற்கனவே உங்களுக்காக அதையெல்லாம் குடித்து முடித்துவிட்டார்! “நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.” (2 கொரிந்தியர் 5:21) உங்கள் பழைய பாத்திரத்திற்கு பதிலாக, அவர் உங்களுக்கு இன்னொரு பாத்திரத்தை தருகிறார்: “அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.” (1 கொரிந்தியர் 11:25) அன்பரே, அடுத்த முறை நீங்கள் திருவிருந்தை அனுசரிக்கும்போது, இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், உங்கள் பாவங்களின் பானபாத்திரத்தை உங்களுக்காக இயேசு குடித்ததை நினைத்து அவருக்கு நன்றி சொல்லுங்கள்.

