தமது சுய சித்தத்தினால் இயேசு இரத்தம் சிந்தினார்

விளையாட்டுக்களை விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும், ஆனால் - நான் தோற்றுப்போகும்போது, சட்டென விரக்தியடையும் ஒரு நபர் என்பதை நான் ஒத்துக்கொள்ள வேண்டும்.😏 நான் சற்று வளர்ந்த பின்பு, அதை ஏற்றுக்கொள்ளக் கூடிய பக்குவமடைந்தேன். ஆனால் இளம் வயதில் என் தோல்வியானது கண்ணீர் மற்றும் அலறுதலுக்கு நேராக இட்டுச் சென்றது, பலகை விளையாட்டுகளின் பொருட்களைக் கூட அறையெங்கும் சிதறச் செய்த நேரங்கள் உண்டு என்பதை இப்போது சொல்வதற்கு அவமானமாக இருக்கிறது. 🫣 நான் தோல்வியடையும்போது "ஓ, அவர்கள் ஜெயிக்கட்டும் என்று நான் விட்டுக்கொடுத்தேன். நான் அவர்களை சுலபமாகத் தோற்கடித்திருக்கலாம், ஆனால் இந்த முறை அவர்கள் ஜெயிக்கட்டும்" என்று எனக்கு நானே சொல்லிக்கொள்வது எனக்கு உதவும் ஒரு சிறந்த உபாயமாகும் (ஆனால் சத்தமாக சொல்ல மாட்டேன்). 🤪 இயேசுவுக்கும் அப்படித்தான் நடந்தது! இயேசு கைது செய்யப்பட்டு சிலுவையில் அறையப்பட்டபோது, அவர் தோற்கடிக்கப்படவில்லை; அவர் தோற்றுப்போகவில்லை. "நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக்கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன்." (யோவான் 10:17-18) இயேசுவின் ஜீவனை யாரும் அவரிடமிருந்து பறிக்கவில்லை. அவர் தாமே அதைக் கொடுத்தார். அவர் ஜெயிக்கப்படவில்லை, தந்திரமாக பிடிபடவில்லை அல்லது சிக்கிக்கொள்ளவில்லை. அவர்கள் அவரைக் கைது செய்ய வந்தபோது, அங்கு என்ன நடந்தது என்பதைப் பாருங்கள்: “இயேசு தமக்கு நேரிடப்போகிற எல்லாவற்றையும் அறிந்து, எதிர்கொண்டுபோய், அவர்களை நோக்கி: யாரைத் தேடுகிறீர்கள் என்றார். அவருக்கு அவர்கள் பிரதியுத்தரமாக: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். அதற்கு இயேசு: நான்தான் என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களுடனேகூட நின்றான்.” (யோவான் 18:4-6) “நான்தான்” என்ற இந்த ஒரேயொரு வார்த்தையைத்தான் சொன்னார், ஆயுதம் ஏந்திய போர்வீரர் குழுவினர் அப்படியே தரையில் விழுந்தனர். ஏன்? ஏனென்றால், அந்த வார்த்தைகள் அவருக்கான அறிமுகம் மட்டும் அல்ல. மோசேயிடம் எரியும் முட்செடியிலிருந்து ஆண்டவர் பேசியபோது, இதே அர்த்தமுள்ள வார்த்தையைத்தான் பேசினார்: "இருக்கிறவராக இருக்கிறேன்." (யாத்திராகமம் 3:14) அந்த வார்த்தைகளைச் சொன்னபோது, இயேசுவிடமிருந்து வெளிப்பட்ட இயற்கைக்கு அப்பாற்பட்ட வல்லமை, அவரைச் சுற்றி இருந்த அனைவரையும் தரையில் விழும்படி தள்ளியது. அவர்களால் இயேசுவைப் பிடிக்கக்கூட முடியவில்லை, அவரைக் கொல்லவும் முடியவில்லை! உயிர்த்தெழுதல் ஞாயிறுக்கு முன்னதாக நாம் தியானித்துக்கொண்டிருக்கும் இந்த இரண்டு வாரங்களில், இதை நினைவில்கொள்ளுங்கள்:
இயேசு தம்முடைய ஜீவனை இழந்துபோகவில்லை. அவர் அதை உங்களுக்காக மனமுவந்து, ஒரு நோக்கத்துக்காக ஒப்புக்கொடுத்தார்.

