உங்கள் மீட்புக்காக இயேசு இரத்தம் சிந்தினார்

உங்கள் மீது எப்போதாவது தவறாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறதா?
சில ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் ஆராதனை ஊழியம் ஒரு அவதூறு பிரச்சாரத்திற்கான இலக்காக இருந்தது. எங்களது குறிக்கோள் கேள்விக்குள்ளாக்கப்பட்டன, மேலும் ஆவியோடும் உண்மையோடும் ஆராதிப்பதற்குப் பதிலாக பணத்தையும் புகழையும் நாடுவதாக நாங்கள் குற்றம் சாட்டப்பட்டோம். அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை, ஆனால் அது அவர்களுக்கு ஒரு பொருட்டாக இல்லை. மற்ற மதங்களைச் சேர்ந்த மக்களிடமிருந்து அவ்வப்போது வரும் அன்பற்ற செய்திகளுக்கு நாங்கள் பழகிவிட்டோம், ஆனால் இந்த அனுபவத்தை மிகவும் மோசமான நிலைக்கு இட்டுச்சென்றது எதுவென்றால், கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக் கொண்டவர்களிடமிருந்து வெளிப்பட்ட வெறுப்புதான். இதேபோன்று, இதைவிட இன்னும் நூறு மடங்கு மோசமான அனுபவம் இயேசுவுக்கும் இருந்தது. இயேசு சிலுவையில் அறையப்படுவதற்காக ரோமானியர்களிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்பு, தாம் நேசிக்கவும், போதிக்கவும், இரட்சிக்கவும் வந்த யூதர்களின் பிரதான ஆசாரியர்களான அன்னா மற்றும் காய்பாவுக்கு முன்பாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். “பிரதான ஆசாரியரும் மூப்பரும் சங்கத்தார் யாவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி தேடினார்கள். ஒருவரும் அகப்படவில்லை; அநேகர் வந்து பொய்ச்சாட்சி சொல்லியும் அவர்கள் சாட்சி ஒவ்வவில்லை; கடைசியிலே இரண்டு பொய்ச்சாட்சிகள் வந்து...” (மத்தேயு 26:59-60) அவர் மீது எந்தக் குற்றமும் கண்டுபிடிக்க முடியாதபோதிலும், அவர்கள் அவரைக் கொலை செய்ய விரும்பினர்: “பிரதான ஆசாரியன் இதைக் கேட்டவுடனே, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? தேவதூஷணத்தைக் கேட்டீர்களே, உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறது என்றான். அதற்கு அவர்களெல்லாரும்: இவன் மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்று தீர்மானம்பண்ணினார்கள்.” (மாற்கு 14:63-64) இப்படி நடந்துகொண்டிருந்தபோது, இயேசு தொடர்ந்து பரியாசம் பண்ணப்பட்டார், துப்பப்பட்டார், அடிக்கப்பட்டார். “அப்பொழுது சிலர் அவர்மேல் துப்பவும், அவருடைய முகத்தை மூடவும், அவரைக் குட்டவும், ஞானதிருஷ்டியினாலே பார்த்துச் சொல் என்று சொல்லவும் தொடங்கினார்கள்; வேலைக்காரரும் அவரைக் கன்னத்தில் அறைந்தார்கள்.” (மாற்கு 14:65) அன்பரே, உங்கள் மீதும் என் மீதும் குற்றம் சாட்டுபவன் ஒருவன் இருக்கிறான். இரவும் பகலும் ஆண்டவருக்கு முன்பாக நம் மீது குற்றம் சாட்டிக்கொண்டே இருப்பவனாகிய சாத்தானையே குற்றஞ்சாட்டுகிறவன் என்று வேதாகமம் விவரிக்கிறது (வெளிப்படுத்துதல் 12:10). இரண்டாவது முறையாக இயேசு இரத்தம் சிந்தினார் - தம் மீது குற்றம் சாட்டியவர்களால் அவர் கொடூரமாக அடிக்கப்பட்டார் - நம்மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் நீக்குவதற்காகவே அவர் அடிக்கப்பட்டார். இயேசுவின் இரத்தம் சத்துருவின் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மௌனமாக்குகிறது. “ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.” (ரோமர் 8:1) அன்பரே, நீங்கள் சமீப காலமாக குற்றம் சாட்டப்படுகிறீர்களா? எதிரி உங்கள் தவறுகளையும் தோல்விகளையும் உங்களுக்கு நினைவூட்டுகிறானா? இயேசுவின் இரத்தத்திற்கு அதிகாரம் உண்டு என்பதை அவனுக்கு நினைவூட்ட வேண்டிய நேரம்தான் இது!

