உங்களை சுகப்படுத்த இயேசு இரத்தம் சிந்தினார்

இயேசுவின் கடைசி 18 மணிநேரங்களையும், இயேசு நமக்காக ஏழு முறை இரத்தம் சிந்தியதின் முக்கியத்துவத்தையும் நாம் ஆராய்ந்து வருகிறோம். இதுவரை, நம் பாவங்களை மன்னிக்கவும், சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் நம்மை மீட்கவும், நம் அவமானத்திலிருந்து நம்மைச் சுத்திகரிக்கவும் இயேசுவின் இரத்தம் சிந்தப்பட்டது என்பதைக் கண்டறிந்தோம். இன்று, எல்லா நிகழ்வுகளிலும், மிகவும் அதிக இரத்த மயமான ஒரு நிகழ்வை நாம் காண இருக்கிறோம் - தூணில் கட்டிவைக்கப்பட்டு இயேசு வாரினால் அடிக்கப்பட்டார். இங்கே கொடூரமாக நடந்த சம்பவங்களை நான் விவரிக்கப்போவதில்லை (நீங்கள் விரும்பினால், அதை ஆராய்ந்து பார்க்கலாம்). அது இயேசுவின் முதுகுப் பகுதியிலிருந்த சதை அனைத்தையும் அகற்றி, அவரது தசைகளை வெளிப்படப்பண்ணியது, அந்த இடம் அவரது இரத்தத்தால் வெள்ளம்போன்று காட்சியளித்து, கற்பனைக்கு எட்டாத வண்ணம் மிகவும் கொடூரமாக இருந்தது என்று சொன்னால் மிகையாகாது. “மனுஷனைப்பார்க்கிலும் அவருடைய முகப்பார்வையும், மனுபுத்திரரைப்பார்க்கிலும் அவருடைய ரூபமும், இவ்வளவு அந்தக்கேடு அடைந்தபடியினாலே, அவரைக்கண்ட அநேகர் பிரமிப்படைந்தார்கள்.” (ஏசாயா 52:14) ஒருபோதும் நோயை அறிந்திராதவரும், ஒருபோதும் பாவம் செய்திராதவருமான இயேசு ஏன் இப்படி பாடுபட வேண்டியிருந்தது? இயேசு நமக்காக மரிக்க வேண்டும் என்றாலும், அவர் ஏன் இவ்வளவு கொடூரமாக மரிக்க வேண்டும்? “நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.” (1 பேதுரு 2:24) நமது மிகமோசமான நிலைமைகளைக் குணப்படுத்துவதற்காக, இயேசு மிகக் கடுமையான காயங்களை ஏற்றுக்கொண்டார். நமக்காக அவர் வாங்கிய பாதகமான கசையடிகளுக்கு ஈடான நோய், வியாதி அல்லது இயலாமை எதுவும் இந்த உலகில் இல்லை. “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.” (ஏசாயா 53:5) அன்பரே, சரீரப் பிரகாரமான சுகம் உங்களுக்குத் தேவையா? இன்று இதை அறிக்கையிடுங்கள்: “அவருடைய தழும்புகளால், நான் குணமானேன்!”

