வெளியீட்டு தேதி 14 ஏப்ரல் 2025

பஸ்கா ஆட்டுக்குட்டியாக இயேசு இரத்தம் சிந்தினார்

வெளியீட்டு தேதி 14 ஏப்ரல் 2025

கடந்த வாரம் ஈஸ்டர் பண்டிகையின் உற்சாகத்தில்* இயேசு தம்முடைய வாழ்க்கையின் கடைசி 18 மணி நேரத்தில் நமக்காக ஏழு முறை இரத்தம் சிந்தியதின் முக்கியத்துவத்தைக் கண்டறியும் பயணத்தை நாம் தொடங்கினோம், இது சிலுவையின் மீதான அவரது மரணத்திற்கு வழிவகுத்தது. நாளை, ஐந்தாவது நிகழ்வைப் பற்றிப் பார்ப்போம், ஆனால் இன்று, இயேசுவின் மரணத்தின் மற்றொரு அழகான முன்னறிவிப்பை ஆராய்ந்து பார்க்கும்படி, நான் சற்று நேரம் செலவிட விரும்புகிறேன்: பஸ்கா பண்டிகை. இஸ்ரவேலர்கள் எகிப்தை விட்டு வெளியேற வாஞ்சித்தபோது, ஆண்டவர் இதை அவர்களுக்குக் கட்டளையிட்டார்: "நீங்கள் இஸ்ரவேல் சபையார் யாவரையும் நோக்கி: இந்த மாதம் பத்தாம் தேதியில் வீட்டுத்தலைவர்கள், வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்து கொள்ளக்கடவர்கள். அந்த ஆட்டுக்குட்டி பழுதற்றதும் ஆணும் ஒருவயதுள்ளதுமாய் இருக்கவேண்டும்; செம்மறியாடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது அதைத் தெரிந்து கொள்ளலாம். அதை இந்த மாதம் பதினாலாம் தேதிவரைக்கும் வைத்திருந்து, இஸ்ரவேல் சபையின் ஒவ்வொரு கூட்டத்தாரும் சாயங்காலத்தில் அதை அடித்து, அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, தாங்கள் அதைப் புசிக்கும் வீட்டுவாசல் நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளித்து..." (யாத்திராகமம் 12:3,5-7) அன்றிரவு, ஆண்டவருடைய தூதன் ஒருவன் எகிப்தின் மீது நியாயத்தீர்ப்பை வரவழைத்து - ஆட்டுக்குட்டியின் இரத்தம் கதவு நிலைக்கால்களில் பூசப்பட்டிருந்த வீடுகளுக்குள் இருந்த குழந்தைகளைத் தவிர, முதற்பேறான மற்ற குழந்தைகள் அனைவரையும் கொன்றுபோட்டான். இந்த நிகழ்வு எகிப்து மன்னரான பார்வோனுக்குத் தாங்கிக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்தது, ஆகவே தன் தேசத்தைவிட்டு வெளியேறும்படி அவன் எபிரேய மக்களுக்குக் கட்டளையிட்டான். இன்றுவரை, யூத குடும்பங்கள் ஆண்டுதோறும் பஸ்கா பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள், அப்படிக் கொண்டாடுவதன் முலம், ஆண்டவர் தமது ஜனங்களை எகிப்திலிருந்து எவ்வாறு வெளியே கொண்டு வந்தார் என்பதை மீண்டும் ஞாபகப்படுத்திக்கொள்கிறார்கள். (யாத்திராகமம் 12).  பஸ்கா பண்டிகையின்போது, தேவாலய முற்றத்தில் பஸ்கா ஆட்டுக்குட்டிகள் வெட்டப்பட்ட அதே நேரத்தில்தான், இயேசு சிலுவையில் அறையப்பட்டார். இது தற்செயலாக நடந்ததா? நிச்சயம் இல்லை! இது தெய்வீக திட்டத்தின் வடிவமைப்பு. கதவு நிலைக்கால்களில் செங்குத்தாகவும் கிடைமட்டமாகவும் பூசப்பட்ட பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தம், இஸ்ரவேலர்களை ஒரு இரவு மட்டுமே ஆண்டவருடைய நியாயத்தீர்ப்பிலிருந்து காப்பாற்றியது. ஆனால் சிலுவையில் சிந்தப்பட்ட இரத்தம், அதாவது இறுதி பஸ்கா ஆட்டுக்குட்டியானவரான இயேசுவின் இரத்தம் நமக்கு என்றென்றைக்குமான மீட்பை தந்தது! “ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்தமாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே.” (1 கொரிந்தியர் 5:7)  அன்பரே, நமது பாவங்களுக்காக பலியிடப்பட்ட பூரண பஸ்கா ஆட்டுக்குட்டியாக இயேசு மாறியதால், அவருக்கு நன்றி தெரிவிக்க இன்று ஒரு நிமிடம் ஒதுக்குவீர்களாக. *நீங்கள் சமீபத்தில் சேர்ந்திருப்பீர்களானால், இந்த தொடரை முதலிலிருந்து வாசிப்பதை தவறவிட்டிருக்கலாம்  ஏனென்றால் எங்கள் புதிய சந்தாதாரர்கள் முதலில் அறிமுக மின்னஞ்சல்களின் தொடரை பெற்றுக்கொள்வது வழக்கம். இந்த தொடரின் மற்ற செய்திகளை வாசிக்க விரும்பினால், எங்கள் வலைத்தளத்திற்கு சென்று நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வாசிக்கலாம்.” 

Jenny Mendes
எழுத்தாளர்

Purpose-driven voice, creator and storyteller with a passion for discipleship and a deep love for Jesus and India.