நீங்கள் ஆண்டவரோடு ஒப்புரவாகும்படி இயேசு இரத்தம் சிந்தினார்

இந்த நாள் புனித வெள்ளி என்று அழைக்கப்படுகிறது, சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு, இயேசு நமக்காக சிலுவையில் தமது ஜீவனைக் கொடுத்த நாள்தான் இது. இந்த நாளை நாம் "புனிதமான நாள் / நல்ல நாள்" (Good Friday) என்று அழைப்பது எனக்கு எப்போதுமே சற்று விசித்திரமாகத் தோன்றுகிறது, ஏனென்றால், உண்மையில், நமக்காக மிகுந்த வேதனையடைந்து கொஞ்சம் கொஞ்சமாக மரித்துக்கொண்டிருந்த நம் ராஜாவுக்கு, யோசித்துப் பார்க்க முடியாத அளவு சரீரப்பிரகாரமாக துன்பத்தை அனுபவிக்கும் நாளாக இருந்தது. இருப்பினும்... அது ஒரு நல்ல நாள். அது வரலாற்றிலேயே மிகச் சிறந்த நாள்! அந்த நாளில், வேறு எவராலும் செய்ய முடியாத ஒரு காரியத்தை இயேசு செய்தார்: அவர் நம்மை பிதாவோடு கூட ஒப்புரவாக்கினார். அவர்கள் அவரை சிலுவையில் அறைந்தபோது, தமது வாழ்க்கையின் கடைசி 18 மணி நேரங்களில், ஆறாவது முறையாக இயேசு இரத்தம் சிந்தினார். "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார்." (ஏசாயா 53:5). மீறுதல்களை "கீழ்ப்படியாமை" என்றும் மொழிபெயர்க்கலாம், அதாவது அதிகாரத்தை எதிர்த்தல் அல்லது எதிர்த்துப் போராடுதல் என்று அர்த்தம். நாம் ஒவ்வொரு முறையும் பாவம் செய்யும்போதும், நம் வாழ்க்கையில் ஆண்டவருடைய அதிகாரத்தை எதிர்க்கிறோம். “பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.” (1 யோவான் 3:4) கீழ்ப்படியாமையானது, கீழ்ப்படியாதவனுக்கும் அவன் எதிர்க்கிற நபருக்கும் இடையே ஒரு பிளவை ஏற்படுத்துகிறது. பாவமும் அதைத்தான் செய்கிறது. அது ஆண்டவரிடமிருந்து நம்மைப் பிரிக்கிறது. “அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை; பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை..” (1 யோவான் 3:6) நம்முடைய அக்கிரமங்களுக்காக இயேசு குத்தப்பட்டபோது, பிதாவோடு கூட நாம் ஒப்புரவாவதற்கான ஒரு வழியை உண்டாக்கினார். “நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே. அதுவுமல்லாமல், இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப்பண்ணின நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் நாம் தேவனைப்பற்றியும் மேன்மைபாராட்டுகிறோம்.” (ரோமர் 5:10-11) அன்பரே, இந்த நாள் இயேசுவுக்கும் கூட புனித வெள்ளிதான், ஏனென்றால், அவருடைய கைகளிலும் கால்களிலும் கடாவப்பட்டிருந்த ஆணிகளை விட, நமக்கும் பிதாவுக்கும் இடையிலான பிரிவுதான் அவருக்கு மிகுந்த வேதனையாக இருந்தது. உங்கள் மீதான அவரது அன்பும், நீங்கள் பிதாவுக்கு அருகில் நெருங்கி வர வேண்டும் என்ற அவரது மனவிருப்பமும் அவருக்கு மரணத்தை விட வலிமையாக இருந்தது! இயேசுவின் இரத்தத்தைப் பற்றி விவரிக்கும் இந்த அருமையான பாடலை நாம் கேட்டு, ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம்.

